லக்னோ: உ.பி.,யில், 2019, ஜனவரியில் துவங்கும் கும்பமேளாவை, இதுவரை இல்லாத வகையில், வெகு விமரிசையாக நடத்த, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த விழாவில், உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், 12 கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். உ.பி., மாநிலம், அலகாபாதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா, உலகில், அதிகம் பேர் கூடும் பிரமாண்ட விழாவாக திகழ்கிறது. இதுதவிர, ஆறாண்டு களுக்கு ஒருமுறை, ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜைன் ஆகிய நதிக்கரையோர நகரங்களில், சுழற்சி முறையில் கும்பமேளா நடப்பது வழக்கம்.
இரு மடங்கு :
இந்நிலையில், 2019, ஜன., 14ல், அடுத்த கும்பமேளா, அலகாபாத் நகரில் துவங்க உள்ளது. இது, அடுத்தாண்டு, மார்ச், 4 வரை நடக்கும்.கும்பமேளாவை பிரமாண்டமாக நடத்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. 49 நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
கடந்த, 2013ல், அப்போதைய முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில், அலகாபாதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு, 1,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதைப்போல், இரு மடங்கு தொகை, ஆறாண்டு களுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவுக்கு, அடுத்தாண்டு செலவிடப்பட உள்ளது. அலகாபாதில், 2013ம் ஆண்டில் 4,783 ஏக்கர் பரப்பளவு பகுதியில், மஹா கும்பமேளா நடந்தது. அடுத்தாண்டு, 6,177 ஏக்கர் பரப்பளவு பகுதியில், கும்பமேளாநடக்கஉள்ளது. இதன் மூலம், கும்பமேளா நடக்கும் இடங்கள், 14ல் இருந்து, 20 பகுதிகளாக விரிவுபடுத்தப்படுகின்றன.அடுத்தாண்டு கும்பமேளாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 12 கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படு கிறது; இது, முந்தைய நிகழ்வில் பங்கேற்றோரை விட, இரண்டு கோடி அதிகம்.அழைப்பு : கும்பமேளாவில், புனித நீராடும் நாட்களில் ஒன்றான, மவுனி அமாவாசை, 2019, பிப்., 4ல் அனுசரிக்கப்படுகிறது. அன்று ஒரே நாளில், மூன்று கோடி பக்தர்கள், அலகாபாதில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.'அனைத்து வெளிநாடுகளின் துாதர்களுக்கும், கும்பமேளாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும்' என, உபி., அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்.ஆர்.ஐ.,க்கள் 20 லட்சம் பேர் பங்கேற்பு :
அலகாபாதில், 2019ல் நடக்கும் கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கும் மூத்த அதிகாரி, வி.கே.ஆனந்த், நிருபர்களிடம் கூறியதாவது:கும்பமேளா நடக்கும் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட வரும்படி, அனைத்து வெளிநாடுகளின் துாதர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. டிசம்பரில், இவர்கள், அலகாபாத் வந்து, ஏற்பாடுகளை பார்வையிடுவர்;
பின், தங்கள் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியர், கும்பமேளாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுப்பர்.என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வசிக்கும், 20 லட்சம் இந்தியர்கள், கும்பமேளாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களை, வாரணாசியில் இருந்து, அலகாபாத் அழைத்து வர, சிறப்பு ரயில்களை விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பமேளா நிகழ்ச்சிக்கென, சிறப்பு இணையதளம், 'மொபைல் ஆப்' மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் துவக்க, உ.பி., அரசு முடிவு செய்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
1.5 லட்சம் கழிப்பறை
*அலகாபாதில் நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சியையொட்டி, முழு சுகாதாரத்தை பராமரிக்கும் வகையில், 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன*பக்தர்கள் வசதிக்காக, படகு துறைகள் அமைக்கப்பட உள்ளன*கும்பமேளாவில், நதியில் புனித நீராடும் பகுதிகளில், ஒவ்வொரு மணி நேரமும், 20 லட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது*வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கும் வகையில், சிறப்பு குடில் நகரம் அமைக்கப்பட உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (24)
Reply
Reply
Reply