செய்தி மாசுகள் செய்யும் துரோகங்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

செய்தி மாசுகள் செய்யும் துரோகங்கள்!

Updated : மே 13, 2018 | Added : மே 13, 2018 | கருத்துகள் (1)

குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து, சுவாசிக்கும் காற்று வரை மாசு நிறைந்துள்ளது. இந்த மாசுக்களை நம்மால் இனம் கண்டறிய முடிகிறது. அதனால் தான் தண்ணீரை கொதிக்க வைத்தும், சுத்திகரிப்பான் மூலம் சுத்திகரித்தும் குடிக்கிறோம். காற்று மாசில் இருந்து காத்துக் கொள்ள, முகத்திற்கு முகமூடி அணிகிறோம்.
ஆனால், மக்களால் இனம் கண்டறிய முடியாமல், புற்றுநோய் போல வெளியே தெரியாமல், மக்களின் மனதை சிதைத்து, சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கும் மாசும் உள்ளது... அது தான், செய்தி மாசு!
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நாளைக்கு இரண்டு தடவை, 'துார்தர்ஷனில்' நியூஸ் போடுவர். தேர்தல் போன்ற நேரங்களில் மட்டும் தொடர்ந்து நியூஸ் வந்து கொண்டிருக்கும். அப்போது செய்திகள் மாசு இல்லாமல் சுத்தமாக இருந்தன.காற்றும், தண்ணீரும் மாசடைந்ததை போல, செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் பெருகியதால், வெளியிடப்படும் செய்திகளிலும் மாசு அதிகமாகி விட்டது.
அதிலும், தமிழக, 'டிவி' ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்... ஏதாவது ஒரு பிரச்னையை, 'பிரேக்கிங்' செய்தியாக்கி, பரபரப்பு ஏற்படுத்தி, மக்களை கொதி நிலையிலேயே வைத்திருக்கின்றன.அதில், 'நீட்' தேர்வு குறித்த செய்திகளை அதிக அளவில், 'டிவி' ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதுவும் எப்படி...
'நரபலி வாங்கும், 'நீட்' தமிழகத்திற்கு தேவையா...' என்பது போன்ற செய்திகளை, அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றன.கிராமங்களில் ஆடுகளைப் பற்றி ஒரு பழமொழி சொல்லுவர்... ஆடு வளர்ப்பவனை விட, வெட்டுபவனைத் தான் நம்புமாம். அது போல தான், இன்று மக்களும், மாசு செய்திகளை வெளியிடும் ஊடகங்களை நம்புகின்றனரே தவிர, அதன் பின்னணியில் உள்ள உண்மைகளை உணர மறுக்கின்றனர்.
இந்த தேர்வு, தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை; இந்தியா முழுவதும் நடந்தது. தமிழகத்தை தவிர வேறு எங்கும் இதற்கு எதிர்ப்பு இல்லை. ஏனென்றால், 'நீட்' தேர்வால் ஏற்படப் போகும் நன்மையை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். தமிழக மக்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லையா... அல்லது அதைப் பற்றி உணரும் சக்தியில்லையா?
தமிழக மக்கள், மிகுந்த புத்திசாலிகள். அதை விட, உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். அதனால் தான், கட்சித் தலைவருக்கு அல்லது தான் விரும்பும் நடிகருக்கு, ஒன்று என்றால் இவன் தீக்குளிக்கிறான்;
நடிகரின், 'கட் - அவுட்'டுக்கு பாலாபிஷேகம் பண்ணுகிறான்.ஒரு சினிமா படத்தில், எளிதில் தப்பி போக முடியாத அந்தமான் சிறையில், படத்தின் ஹீரோ மற்றும் இதர நபர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பர்.அவர்களில், ஹிந்து கைதிகளும் இருப்பர்; முஸ்லிம் கைதிகளும் இருப்பர். இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விட நினைக்கும், ஜெயில் அதிகாரி, ஒரு கைதிக்கு பணம் கொடுத்து, முஸ்லிம் கைதிகளுக்கான சாப்பாட்டில், ஹிந்து கைதிகள், பன்றிக் கறியை கலந்து விட்டதாக சொல்ல சொல்லுவான்.
கைக்கூலி பெற்ற கைதி, அந்த பொய் தகவலை சொன்ன உடன், கைதிகளுக்குள் கலவரம் மூண்டு விடும். அப்போது, வயதான கைதி ஒருவர், சண்டை போடுபவர்களைப் பார்த்து, 'டேய் முட்டாள்களா... யாரோ ஏதோ சொன்னான் என்பதற்காக சண்டை போடுகிறீர்களே...
'இந்த ஜெயிலுக்குள் எப்படி பன்றிக் கறியை கொண்டு வர முடியும்... குடிக்க தண்ணீர் முதற்கொண்டு, கப்பலில் தானே வருகிறது... இங்கே ஏது பன்றி? நமக்கு இடையே கலகத்தை மூட்ட, யாரோ எதையோ சொன்னால், உடனே நம்பி விடுவதா?' என்பார்.
அதன் பிறகு தான், அந்த கைதிகள் உண்மையை உணர ஆரம்பிப்பர்.அது போன்ற நிலை தான், 'நீட்' விவகாரத்திலும் இருக்கிறது. 'நீட் வேண்டாம்' என, 'போர்வையாளர்கள்' சொன்னால், அதை நம்பும் சிலர், 'நீட் வேண்டாம்' என, கூச்சல் போட ஆரம்பித்து விடுகின்றனர்.
போர்வையாளர்கள் பின்னணியில் இருப்பவர்கள் யார்... பெரிய பண முதலைகள் மற்றும் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் அரசியல் வியாபாரிகள் தான். அவர்கள் நடத்தும், தனியார் மருத்துவக் கல்லுாரி களில், ஒரு, 'சீட்'டிற்கு ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.
தேர்வுக்கு தயாராகி, நல்ல முறையில் தேர்வு எழுதி, ஏராளமானோர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டால், இவர்கள் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகள் காற்றாடும் என்ற அச்சத்தில், இல்லாத, பொல்லாத விஷயங்களை கூறி, மாணவர்களின் மனதை குழப்பி, மக்குகளாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
'தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விட்டனர். இதனால் மாணவர்கள் துன்பப்பட்டனர்; வேண்டுமென்றே தமிழ் மாணவர்களை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பந்தாடி விட்டது' என, தவறான செய்திகளை பரப்புகின்றனர்.
நம் மாணவர்களை அடுத்த மாநிலங்களுக்கு அனுப்பியதில், அலைச்சல், மன ரீதியாக பாதிப்பு, உடல் ரீதியாக சிக்கல் எல்லாம் உண்டு தான்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அதை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் உள்ளது.கடந்த ஆண்டு, 82 ஆயிரத்து, 727 மாணவர்கள் மட்டுமே, நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு, 30 சதவீத மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
இதனால், எட்டு ஊர்களில், 170 மையங்கள் ஆக உயர்த்தியும், 5,500 மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு போய் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களில், 39 பேர் மட்டுமே வெளியூர் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.அதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தை சேர்ந்தவர்களுக்கு, கேரளாவிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
அது போல தான், தனியார் பள்ளியில் படித்த, 5,800 பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதில் தவறாக விண்ணப்பத்தை நிரப்பி, அதன் மூலம் வெளி மாநிலங்களுக்கு சென்றவர்களும் அடக்கம். ராஜஸ்தான், சிக்கிம் போன்ற தேர்வு மையங்கள் எல்லாம், அந்தந்த மாணவர்களாக தேர்ந்தெடுத்தவை தான்.எந்த ஒரு மாணவனுக்கும், அவன் படித்து கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் தவிர்த்து பிற இடங்கள் புதுசு தான்.
பட்டுக்கோட்டையில் படிக்கும் ஒரு மாணவருக்கு, சென்னை தேர்வு மையமாக இருந்தாலும் சரி, எர்ணாகுளம் தேர்வு மையமாக இருந்தாலும் சரி, இரண்டுமே புதுசு தான்.மேலும், வெளி மாநில தேர்வு மையங்களுக்கு, 'பாஸ்போர்ட்' எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லையே... இன்று, உலகமே சுருங்கி, உள்ளங்கைக்குள் வந்து விட்டது.
இன்று இருக்கும் வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர், 'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என, கடல் கடந்து வெளிநாட்டிற்கு சென்றாவது செல்வம் சேர் என்றவர்கள்.நம் பாரதியார், மிக அழகாக, 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்... கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்றார். அப்படியிருக்க, நம் அண்டை மாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கியதற்காக, 'டிவி' ஊடகங்கள் ஏன் இவ்வளவு கூச்சல் போடுகின்றன.
'நீட்' தேர்வு எழுதச் சென்ற போது, ஒரு மாணவனின் தந்தை, கேரளாவில் இறந்தது, இரங்கத்தக்க, அனுதாபத்திற்குரியது தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த மரணத்தை வைத்து, தங்கள் சுயநலத்திற்காக, போர்வையாளர்களும், சில, 'டிவி' ஊடகங்களும் பேசிய விதம் வேடிக்கையானது.
மகனுடன் துணைக்கு சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணமடைந்ததை, 'நரபலி' என குறிப்பிடும் ஊடகங்கள், உண்மையிலேயே மணல் கொள்ளையர்களை தடுத்து பலியாகும் காவல் துறை, வருவாய் துறை ஊழியர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை.மேலும், தேர்வு எழுத வந்த மாணவர்களை கடுமையாக சோதனை செய்தனர்... தோடு, மூக்குத்தி, கொலுசு, ஹேர்பாண்ட் போன்றவற்றை கழற்றச் சொன்னார்கள்... என கூவினர்.
'நீட்' தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கான விதிமுறைகளை ஆரம்பத்திலேயே மிகத் தெளிவாக சொல்லி விட்டனர். 'பேனா கூட கொண்டு வர வேண்டாம்; நாங்களே தந்து விடுகிறோம். நீங்கள் மட்டும் வாருங்கள்' எனக் கூறி, எந்தெந்த உடைகளை அணிய வேண்டும்; தலையை எவ்வாறு பின்ன வேண்டும் என, அறிவித்த பிறகும், விதிமுறைகளை பின்பற்றாதது யார் தவறு?இந்த கெடுபிடிகள் எல்லாம் யாருக்காக... திறமை உள்ளவர்கள் மட்டுமே தேர்வாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தானே, இத்தனை விதிமுறைகள்...
இவ்வளவு கெடுபிடி இருந்தும், ஆந்திராவில் ஒரு மாணவி தன் உள்ளாடையில், மைக்ரோ சிப் வைத்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டதே... தங்கள் திறமையை மட்டுமே நம்பி படித்து தேர்வு எழுத வரும், வசதி குறைந்த மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலை ஏற்படும், இந்த மாதிரி நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இவ்வளவு கட்டுப்பாடுகள்!
உயிர் காக்கும் மருத்துவ அறுவை சிகிச்சை நடைபெறும் போது, தாலி முதற்கொண்டு, அனைத்து ஆபரணங்களையும் கழற்றச் சொல்லி விடுவர். ஏன், மருத்துவ பரிசோதனை மையத்திற்கு, சி.டி., ஸ்கேன் எடுக்கச் சென்றால் கூட, வழக்கமான ஆடைகள் முதற்கொண்டு, அனைத்து ஆபரணங்களையும் அகற்றி விடுவர். அப்போது யாரும், 'சென்டிமென்டாக' பேசிக் கொண்டு இருக்க முடியாது.
'நீட்' எழுதி, பாஸாகி விட்டால், ஆண்டு கட்டணம் வெறும், 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே! அதே நேரம், இந்த தேர்வை நடக்க விடாமல் முடக்கி விட்டால், ஒவ்வொரு சீட்டும், பணத்தைக் கொட்டும் அட்சய பாத்திரமாக மாறும்! அதனால், இந்த உண்மை நிலவரத்தை மக்கள் உணரா வண்ணம், மாசு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
மற்ற மாசுக்களை இனம் கண்டறிந்து அவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, நடவடிக்கை எடுப்பதை போல, செய்தி மாசு பற்றியும் நாம் அறிந்து, அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். ஏனென்றால், செய்தி மாசிலிருந்து நம் இளைய சமுதாயத்தை காக்காவிட்டால், முற்றிய பிறகு கண்டறியப்பட்டு, சீர் செய்ய இயலாத புற்றுநோயாளியை போல, சரி செய்ய முடியாமலே போய் விடும்!
-எஸ்.வாகைச்செல்வி,
சமூக ஆர்வலர்email: vagaiselvi@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X