கோவை;கோவை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (டயட்), மாணவர் சேர்க்கை பணிகள் நடத்த வேண்டாமென, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் உத்தரவு பேரில், மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம், சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள, 'டயட்' நிறுவனங்களில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே வேளையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளை மட்டும், முழுமையாக மேற்கொள்ள, இம்மையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுக்க, 20டயட் நிறுவனங்களில், வரும் கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படமாட்டாது.கோவை டயட் நிறுவனமும், இதில் அடங்கும். இங்கு, கடந்தாண்டு முதலாமாண்டில், 23 மாணவர்களும், இரண்டாமாண்டில் 34 மாணவர்களும் படித்தனர். அடுத்த கல்வியாண்டில், புதிய சேர்க்கை நடத்த வேண்டாமென கூறப்பட்ட நிலையில், இரண்டாமாண்டு செல்லவுள்ள மாணவர்களின் நிலை குறித்து, தெளிவான விளக்கம் இல்லை. இதனால், வேறு மாவட்ட, டயட் மையங்களுக்கு செல்ல நேரிடுமோ என்ற, குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன் கூறுகையில், ''மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாமென அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிற டயட் மையங்களுக்கு மாணவர்களை மாற்றுவது குறித்த அறிவிப்பு இல்லை.டயட் மையங்களில், அட்மிஷன் துவங்கும் போது, இதுசார்ந்த முழுமையான விளக்கம் பெறலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE