புதுடில்லி : தேசிய மற்றும் மாநில அளவில், டி.என்.ஏ., எனப்படும், மரபணு பற்றிய தகவல்கள் அடங்கிய வங்கிகளை அமைக்கும் திட்டத்தை, மத்திய சட்ட அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த வங்கிகளில் சேமிக்கப்படும் தகவல்களை முறைகேடாக வெளியிடுவோருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்க, இதற்கான சட்ட வரைவு வகை செய்கிறது.
கைரேகை, கருவிழி ரேகைகளை போல், டி.என்.ஏ.,க்கள், ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் வகையில், தனித்துவம் வாய்ந்தவை. டி.என்.ஏ., தகவல்கள், பல குற்ற வழக்குகளில், உண்மையை கண்டறிய பெரிதும் உதவியுள்ளன.
வரைவு மசோதா :
இந்த தகவல்களை பாதுகாத்து வைக்கும் பிரத்யேக வங்கிகளை, தேசிய, மாநில அளவில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு, மத்திய அரசு, சமீபத்தில் எடுத்துச் சென்றது.
இந்நிலையில், குற்ற சம்பவங்களில் பாதிக்கப் பட்டோர், குற்றஞ் சாட்டப்படுவோர், சந்தேகத்துக்கு உரியோர். விசாரணை கைதிகள், காணாமல் போனவர்கள், கண்டுபிடிக்கப்பட்டோர் போன்றோரின், டி.என்.ஏ., தகவல்களை பாதுகாத்து வைக்கவும், பராமரிக்கவும், தேசிய, மாநில அளவில் வங்கிகள் அமைத்தல் உள்ளிட்ட ஷரத்துகளை உள்ளடக்கிய வரைவு மசோதாவை, சட்ட கமிஷன் தயாரித்து உள்ளது.
இதற்காக, உயிரி தொழில்நுட்பத் துறையுடன், சட்டக் குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, அதிகார பூர்வ வரைவு மசோதாவை இறுதி செய்யும் பணியில், சட்ட அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 'இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் பெறப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்படும், டி.என்.ஏ., தகவல்களை கசிய விடும் நபர்களுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, மசோதா வகை செய்கிறது.
அடையாளம் :
சட்டவிரோதமாக, டி.என்.ஏ., தகவல்களை பெற முயற்சிக்கும் நபர்களுக்கும், இதேபோன்ற தண்டனை கிடைக்கும். இந்த மசோதா, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. பிரத்யேக வங்கிகளில் பாதுகாக்கப்படும், டி.என்.ஏ., தகவல்கள், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வேறு தேவைக்கு பயன்படுத்தப்படாது என்றும், தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க அரசு கோரிக்கை :
'அறிவியல் ஆராய்ச்சிக்காக, டி.என்.ஏ., தகவல்களையும், உடல்நலன் தொடர்பான தகவல்களையும் அளிக்க வேண்டும்' என, நாட்டு மக்களுக்கு, அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க அரசு, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க மக்கள், தங்கள், டி.என்.ஏ., தகவல்களை, அறிவியல் ஆராய்ச்சிக்காக தந்து உதவ வேண்டும். தங்கள் வாழ்க்கை முறை, உடல் நலன் சார்ந்த தகவல்களை அவர்கள் அளிக்க வேண்டும்.
இந்த தகவல்களை ஒப்பிடுவதன் மூலம், சிலருக்கு, சில வகை நோய் ஏற்படுவது ஏன், சிலருக்கு, அந்த நோய் வராதது ஏன் என்பதை அறிய முடியும்.
இதனால், நோய் தடுப்பு முறைகளை அறியவும், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வழி ஏற்படும். அரசின் வேண்டுகோளை ஏற்று, குறைந்தபட்சம், 10 லட்சம் பேர், தங்கள், டி.என்.ஏ., தகவல்களை அளிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், 'நாடு முழுவதும், பல்வேறு சம்பவங்களில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கானோர் உடல்கள், அடையாளம் காண முடியாமல், கேட்பாரற்று கிடக்கின்றன. தேசிய அளவில், டி.என்.ஏ., தகவல் காப்பகங்கள் அமைக்கப்படாததால், இந்த நிலை தொடர்கிறது' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'கேட்பாரற்று இறந்து கிடப்போரின் உடல்களை எரிக்கும் முன், டி.என்.ஏ., தகவல்களை பெற்று சேமிக்க வேண்டும். 'அது, இறந்தோரை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பின்னாளில் அடையாளம் காண உதவும்' என, அரசுக்கு அறிவுரை கூறினர். அப்போது, 'டி.என்.ஏ., வங்கிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்' என, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த், நீதிபதிகளிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply