தினம் தினம் கொண்டாடுவோம் குடும்பங்களை! இன்று சர்வதேச குடும்ப தினம்| Dinamalar

தினம் தினம் கொண்டாடுவோம் குடும்பங்களை! இன்று சர்வதேச குடும்ப தினம்

Added : மே 15, 2018 | கருத்துகள் (1)
இன்று சர்வதேச குடும்ப தினம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், குடும்ப உறவுகள், குடும்ப ஒற்றுமை, நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம், இன்றைய திருமணங்கள், 
Today International Family Day, Family Violence Prevention Act, Family Relations, Family Solidarity, Good Family University,

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம். ஆனால் இன்றைக்கு அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து போய் விட்டது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து கொண்டு இருக்கின்றன.

சித்தியோ, அத்தையோ ஆன்ட்டி தான் பெயர். சித்தப்பாவோ, மாமாவோ அங்கிள் தான் பெயர். சித்தியை சின்ன அன்னையாகப் பார்த்த தலைமுறைகள் கடந்து போய் விட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடத்தி கஸின் பிரதர் என்ற நாகரீக வார்த்தையில் அழைக்கும் நவீன யுகமாகிப் போனது இன்று.

நம் கிளைகள் எங்கெங்கு பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் தானே.. கூடுகளாய் இருந்த மனம் கூண்டுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இயந்திர மயமாகிப்போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லை.


கூட்டுக் குடும்பங்கள் :

'பதினாறு பெற்றுப் பெரு வாழ்வு' வாழ்ந்தவரை மகிழ்ச்சிக்கு குறைவில்லாமலே இருந்தது. பழமொழி மாறியது; 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்று. அடுத்து இன்னும் கொஞ்சம் மேலேறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றானது. அதிலும் முன்னேற்றமான வளர்ச்சி கண்டு நாமே இருவர்.. நமக்கேன் ஒருவர்....என்பதே காலத்தின் கோலமாகி விட்டது. விளைவு மயான அமைதியாகிப் போய் விட்டன வீடுகள்.

கணவன் அலைபேசியை பார்த்துக் கொண்டு, மனைவி சீரியலைப் பார்த்த படி வாழ்க்கை நகர்கிறது. மாமியார், நாத்தனார் இல்லாத வீடு வேண்டும் என்ற மன நிலையில் பெண்ணைப் பெற்றவர்கள் மன நிலை. எந்த கசகசப்பும் இருக்க கூடாது என் பிள்ளைக்கு என்று கூறும் பெண்ணின் அம்மா. இங்கு கச கசப்பாக அவர் குறிப்பிடுவது புகுந்த வீட்டு உறவுகளை. அடித்தாலும், பிடித்தாலும் அனுசரிச்சு போகணும் என மகளுக்கு புத்தி சொன்ன அம்மாக்கள் போய், ஏதாச்சும் சொன்னாங்கன்னா கிளம்பி வந்திடு என்று அறிவுரை சொல்லும் நவீன யுகத்தில் விவாகரத்துகளும் அதிகரித்து விட்டன. 'என் பிரைவசில நீ தலையிடாதே... உன் பிரைவசில நான் தலையிட மாட்டேன்..' என்ற நிபந்தனைகளோடே இன்றைய திருமணங்கள்..


பிரியும் குடும்பங்கள் :

குடும்ப தினத்தை அறிவித்துக் கொண்டாடும் நம் சமுதாயத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டிய அவலமும் நிகழ்ந்து விட்டது. குடும்ப வன்முறைகள் பத்து வருடங்களில் அதிகரித்து விட்டன என்பதை நீதி மன்ற வழக்குகள் எடுத்துரைக்கின்றன.2005ல் இந்த சட்டம் கொண்டு வரப் பட்ட பிறகு... தினம் தினம் காவல்துறையில் குவியும் புகார்களோ எண்ணிலடங்கா. வீட்டுச் சத்தம் வெளியே தெரியக் கூடாது என்ற காலம் போய் தெருச் சத்தங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றன. உப்பு பெறாத சண்டைகளால் பிரிந்த குடும்பங்கள்... தேவையற்ற ஈகோ, புறக்கணிப்பு, அவமானம் இப்படி குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகள் ஏராளம்..

'அந்தாளு கிட்ட சொல்லி வை... வர வர என் விஷயத்தில ரொம்ப தலையிடுறாரு..'. இங்கே சற்று கவனிக்கவும்... அந்த ஆள் என்று அந்தப் பையன் தன் அம்மாவிடம் குறிப்பிடுவது தன்னைத் தோளில் சுமந்து வளர்த்த தந்தையை. மூடை சுமக்கும் அப்பாக்களை இதயத்தில் சுமக்கத் தயாராய் இல்லை நாகரீக குழந்தைகள்.

குழந்தைகள் தினத்தையும், அன்னையர் தினத்தையும், தந்தையர் தினத்தையும் கொண்டாடும் நாம், இதன் அஸ்திவாரமான குடும்பத்தை கொண்டாட மறந்து விட்டோம். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதில் சமூக என்ற வார்த்தை விடுபட்டு போய் விட்டது.


குடும்பம் தரும் மகிழ்ச்சி :

குடு + இன்பம் = குடும்பம்.
இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தானே. தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு முன்னே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே..பிள்ளைக் கனி அமுது தானே.இவையனைத்தும் சேர்ந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தானே..

அம்மாவை நேசிக்கும் பிள்ளை மனைவியையும் நேசிப்பான். வீட்டில் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தட்டிக் கொடுத்து வளர்க்கிறான் தன் குழந்தையை. குடும்ப பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். 'கண்ணுக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன்,பொத்தி பொத்தி வளர்த்துட்டேன்' என வயிற்றுக்கு வெளியேயும் கருப்பை சுமந்து வளர்க்கப்படும் குழந்தைகள், குடும்ப கஷ்டங்களை உணர்வதில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட தலை முறைகளின் வலிகள், இன்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நவ நாகரிகத் தலை முறைகளுக்குப் புரியாது தான்.

குடும்ப உறவுகளின் உன்னதங்களையும்,வலிகளையும் உணரும் குழந்தைகளே பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல மனம் விட்டுப் பேசினால் கூட நோய் விட்டுப் போகும். 'எனக்கு ஒன்னுனா கேக்குறதுக்கு எங்க தாய் மாமா இருக்காரு' என்று கெத்து காட்ட முடிவதில்லை இன்று. காரணம் தனிக் குடும்ப அமைப்பு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். கூட்டுக் குடும்ப உறவுகளாலே தான் இந்தப் பழமொழி சாத்தியமாகும்.


செழித்து வளரும் குடும்பம் :

இன்பத்திலும், துன்பத்திலும் நம் உடன் இருப்பவை குடும்பம் தான். எத்தனை மைல் துாரத்தில் இருந்தாலும் கூட பேசும் குரலை வைத்து, என்னப்பா உடம்பு சரியில்லையா என்று கேட்கும் அம்மாக்கள் இருக்கும் வரை, 'பிள்ளைக்கு இந்த முட்டைய வைச்சுரு, நான் ஊறுகா வைச்சு சாப்பிட்டுக்கறேன்' என்று சொல்லும் அப்பாக்கள் இருக்கும் வரை, 'தங்கச்சி படிக்கட்டும்மா, நான் வேலைக்கு போய் உன்னையும், தங்கச்சியவும் பாத்துக்கறேன்மா' எனச் சொல்லும் அண்ணன்கள் இருக்கும் வரை, கணவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை, தனக்கும் பிடிக்காது என்று கூறும் மனைவிகள் இருக்கும் வரை, மனைவிக்காக தனக்கான சுகங்களை இழந்து கஷ்டப்படும் கணவன்கள் இருக்கும் வரை, 'ஆயிரம் சொன்னாலும் அது என் அத்தை தானே, அவங்கள விட்டுத் தர முடியுமா' எனச் சொல்கின்ற மருமகள்கள் இருக்கும் வரை இந்த மண்ணில் குடும்பம் என்ற அமைப்பு செழித்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.


பண்பு தரும் குடும்பங்கள் :

குடும்பங்களே நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கின்றன.மாலையில் கூடு வந்தடையும் பறவைகள் போல,வீடு வந்தடையும் மனிதர்களின் வாழ்க்கையே மகிழ்ச்சிகரமானதாக உள்ளது. குடும்பங்களே வாழ்விற்கு அர்த்தங்களைத் தருகின்றன. மனிதன் தொடர்ந்து இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப அமைப்பு தான். தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருப்பதும் அவை தான்.

ஆத்ம உணர்வையும்,நல்ல பண்புகளையும் தருவது குடும்ப ங்கள் தான். தனி மனிதனின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் தான். யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்ற பண்பாட்டின் பிறப்பிடமே குடும்பம் தான். குடும்பங்கள் தரும் ஆறுதலையும்,ஆதரவையும் வேறு எவராலும் தர முடியாது. தடம் மாறிப் போகாமலும், தடுமாறிப் போகாமலும் இருப்பதற்கான பின்னணி குடும்பங்கள் தான். இங்கே அன்பு, அமைதி,பாசம்,அழுகை, சோகம், நிம்மதி என அனைத்தும் கலந்து இருப்பதாலேயே குடும்பம் ஒரு கதம்பம் என்று கூறுகிறோம்.

குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி, மே 15ஐ சர்வதேச குடும்ப தினமாக ஐ.நா., சபை அறிவித்து இருக்கிறது. குடும்பங்களைக் கொண்டாட தினங்கள் தேவையில்லை... தினம் தினம் கொண்டாடுவோம் குடும்பங்களை!

ம.ஜெயமேரி,
ஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி,
க.மடத்துப்பட்டி.

bharathisanthiya10@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X