ஒரு மதிப்பெண்ணுக்கு அஞ்சு முத்தம்... கோவை பல்கலையில் சத்தமின்றி ஒரு யுத்தம்!| Dinamalar

ஒரு மதிப்பெண்ணுக்கு அஞ்சு முத்தம்... கோவை பல்கலையில் சத்தமின்றி ஒரு யுத்தம்!

Updated : மே 16, 2018 | Added : மே 15, 2018
Share
மே மாதத்துக்கான எந்த அறிகுறியுமின்றி, காலையில் 'சில்'லென்று குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. புதிய அலைபேசி வாங்க வேண்டுமென்று, மித்ராவை அழைத்துப் போக வந்திருந்தாள் சித்ரா.தயாராக இருந்த மித்ரா, 'அக்கா! அம்மா பக்கத்துல எங்கேயோ போயிருக்காங்க. இப்ப வந்திருவாங்க. வந்ததும் கிளம்பலாம்' என்றவள், 'டிவி'யைப் போட்டு விட்டு, இருவருக்கும் சுடச்சுட 'பில்டர் காபி'
ஒரு மதிப்பெண்ணுக்கு அஞ்சு முத்தம்... கோவை பல்கலையில் சத்தமின்றி ஒரு யுத்தம்!

மே மாதத்துக்கான எந்த அறிகுறியுமின்றி, காலையில் 'சில்'லென்று குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. புதிய அலைபேசி வாங்க வேண்டுமென்று, மித்ராவை அழைத்துப் போக வந்திருந்தாள் சித்ரா.தயாராக இருந்த மித்ரா, 'அக்கா! அம்மா பக்கத்துல எங்கேயோ போயிருக்காங்க. இப்ப வந்திருவாங்க. வந்ததும் கிளம்பலாம்' என்றவள், 'டிவி'யைப் போட்டு விட்டு, இருவருக்கும் சுடச்சுட 'பில்டர் காபி' போட்டு வந்தாள்.

''சூடா காபி கொடுத்துட்ட... மேட்டர் என்ன சூடா இருக்கு?'' என்று கேட்டாள் சித்ரா.

''அது நிறைய இருக்கு... குட்கா மேட்டர் தான், போலீஸ்லயும், அரசியல் வட்டாரத்துலயும் சூடாப் போயிட்டு இருக்கு. யார் யாரு தான் அதுல காசு வாங்குனாங்கன்னே தெரியலை,'' என்றாள் மித்ரா.

''யாருக்காக இங்க வந்து ஸ்டாலின் போராட்டம் நடத்துனாரோ, அவரோட மாவட்டத்துல இருந்து, 50 பேர் கூட வரலையாம்; அதுக்கே ஸ்டாலின் கோபமாயிட்டாராம்; அப்புறம்... சம்மந்தப்பட்ட 'மாவட்டமும்', வேறு சில முக்கிய உடன் பிறப்புகளும், அந்த பேக்டரியில எக்கச்சக்கமா மாமூல் வாங்கிருக்காங்கன்னு தெரிஞ்சு, கொந்தளிச்சுட்டாராம். ஒரு சிலரை கட்சியை விட்டே, நீக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லைன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''இந்த பேக்டரியில, அந்த ஏரியா ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிக்கும், வலுவா மாமூல் போயிட்டு இருந்ததா ஒரு தகவல் ஓடுது... அடாதடியா பேசுறதுக்கு பேர் போன அவரு, இப்போ 'சைலன்ட்'டானதுக்கு இதுவும் ஒரு காரணமாம்,'' என்றாள் மித்ரா.

''இப்பதான், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் ஒரு அதிகார மையமா உருவெடுத்துட்டு இருக்காங்களே...முன்னெல்லாம் கார்ப்பரேஷன்ல ஏதாவது குடிதண்ணிக் குழாய் திறக்கணும்னாலும் அமைச்சர்ட்ட தேதி கேட்டுட்டு காத்திருப்பாங்க. இப்பல்லாம், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,வை வச்சே திறந்துர்றாங்க'' என்றாள் சித்ரா.

''குடிதண்ணின்னு சொன்னதும், எனக்கு விடிய விடிய நடக்குற 'குடி' வியாபாரம் தான் ஞாபகம் வந்துச்சு... சிட்டிக்குள்ள 24 X 7 குடிநீர் கொடுக்குறதா பல வருஷமா சொல்லிட்டே இருக்காங்க; கொடுத்தபாடில்லை... ஆனா, 24 X 7 தண்ணி சப்ளை இந்த 'பார்'கள்ல தான் நடக்குது. அதுலயும் பீளமேடு, காந்திபுரத்துல கொடிகட்டிப் பறக்குது,'' என்றாள் மித்ரா.

''அதுலயும் பீளமேட்டுல இருக்குற ஆபீசருக்கு, ஒரு கடைக்கு ஒரு நாளுக்கு அஞ்சாயிரம் மாமூல் வருதாம்... காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி மாதிரி 'டிரை டே'ன்னா, 20 ஆயிரமாம்...அவரோட சம்பளம், ஒரு லட்சம்னா, மாமூல் வருமானம், மாசம் 20 லட்சம்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''சிங்காநல்லுார்ல மூடுன 'பார்'ல, சரக்கு விக்கிறதுக்கு, வேற மாதிரி 'டீலிங்'காம். அந்த ஸ்டேஷன்ல உளவு பாக்குற 'பிரைட்'டான போலீஸ்காரரு, காலையில போய், எத்தனை பெட்டி 'இல்லீகல் சேல்'க்கு இருக்குன்னு பாத்துட்டு வருவாராம்; லாபத்துல 'சிக்ஸ்டி: ஃபார்ட்டி'ன்னு பிரிச்சுக்குறாங்களாம். அங்க இருக்குற 'முனீஸ்'ங்கிற ஆபீசருக்கு தான் பெரிய பங்காம். எனக்குத் தெரிய, ஆர்.எஸ்.புரத்துல மட்டும் இந்த 'இல்லீகல் வியாபாரம்' எங்கேயுமே இல்லைங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

'டிவி' செய்தியில், பேராசிரியர் நிர்மலா தேவி பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த சித்ரா, ''மித்து... அநேகமா அடுத்து, நம்ம அக்ரி யுனிவர்சிட்டியில இருக்குற புரபசர் ஒருத்தர் தான் மாட்டுவார்ன்னு நினைக்கிறேன்... அவரைப் பத்தி, ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' வருது,'' என்றாள் சித்ரா.

''நீ சொல்றவரு... ஏற்கனவே இதே மாதிரி ஒரு விவகாரத்துல மாட்டி, அரெஸ்ட் ஆனாரே... அவரோட ஒய்ப் கூட, சமூக நலத்துறையில முக்கியமான போஸ்ட்டிங்ல இருந்தாங்களே... அவரா?'' என்று கேட்டாள் மித்ரா.

''ஸ்விட்சைப் போட்டதும் 'பளிச்'ன்னு எரியுற 'பிலிப்ஸ்' பல்பு மாதிரி, 'டக்'குன்னு பிடிச்சிட்டியே... அவரே தான்... ஒரு மார்க் வேணும்னா, அஞ்சு முத்தம் கொடுன்னு மாணவிகள்ட்ட கேக்குறாராம். களப்பணிக்குக் போறதாச் சொல்லி, 'பைக்'ல கூப்பிட்டுப் போவாராம்... அம்பது முறை 'பிரேக்' போடுவாராம். அவர்ட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக, பல ஸ்டூடண்ட்ஸ் சத்தமில்லாம யுத்தம் நடத்திட்டு இருக்காங்களாம்,'' என்று அடுக்கினாள் சித்ரா.

''ஏற்கனவே, அவரால பல பொண்ணுங்க, வேலையை விட்டே போயிருக்காங்க; ஒரு சில ஸ்டூடண்ட்ஸ், தற்கொலை முயற்சி பண்ணிருக்காங்கன்னு நானே பல முறை கேள்விப்பட்ருக்கேன்... ஏன் அவரு மேல இன்னமும் 'ஆக்ஷன்' எடுக்காம இருக்காங்க?'' என்று கேட்டாள் மித்ரா.

''அது தான் தெரியலை... யுனிவர்சிட்டி 'வி.சி.,'க்கு நல்ல பேரு இருக்கு... அவரு காலத்துலயே இவர் மேல ஏதாவது ஆக்ஷன் எடுத்தாத்தான் உண்டு; இல்லைன்னா, அடுத்து யாரு வந்தாலும், காசைக்கொடுத்து 'கரெக்ட்' பண்ணிருவாரு,'' என்றாள் சித்ரா.

''அக்கா... உக்கடம் பாலம் டிசைனை 'கரெக்ட்' பண்றதுக்கான வேலை நடக்குதாம்... உண்மையிலேயே இப்ப இருக்குற ஸ்டேட் ஹைவேஸ் இன்ஜினியர்ஸ், நல்லா 'டீம் ஒர்க்' பண்றாங்க. நம்ம காலத்துல, ஊருக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க. ஆனா, மத்த டிபார்ட்மென்ட் ஒத்துழைப்பு சுத்தமா இல்லை,'' என்றாள் மித்ரா.

''உண்மை தான் மித்து... எல்லா டிபார்ட்மென்டையும் ஒருங்கிணைச்சு, வேலையை 'ஸ்பீடு' பண்ண வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தோட வேலை. அதுக்கு, 'யங் அண்ட் எனர்ஜெடிக்'கா ஒரு கலெக்டர் வேணும்... கோவைக்கு நல்லது செய்வேன்னு சொல்ற மந்திரி, நல்ல 'டைனமிக்' கலெக்டரை கொண்டு வர முயற்சி செய்வாரான்னு பார்க்கலாம்,'' என்றாள் சித்ரா.

''நம்மூருக்குன்னே தேடித்தேடி குப்பை அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவாங்க போலிருக்கு... பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டுல, பொள்ளாச்சியில ஒருத்தரை அரெஸ்ட் பண்ணுனாங்களே... அவரு கொடுத்த 'ஸ்டேட்மென்ட்'ல, சிஇஓ ஆபீஸ்ல வேலை பாக்குற 'கங்காணி'ங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லிருக்காராம்,'' என்றாள் மித்ரா.

'ஓ... அவுங்களா... அவுங்க ரெண்டு பேரும் தான், டீச்சர்ஸ் டிரான்ஸ்பருக்கு பேரம் பேசி, வசூல் வேட்டை நடத்துறாங்கன்னு ஏற்கனவே நிறைய்ய டீச்சர்ஸ் சொல்லிருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''இந்த ஊருக்கு ஆசைப்பட்டு, காசு கொடுத்து வந்த அய்யாவோட அண்ணன், இப்போ 'ஒரே பிரச்னையா இருக்கே; இங்க ஏன்டா வந்தோம்'னு புலம்புறாராம்,'' என்றாள் மித்ரா.

''இதெல்லாம் விடு மித்து... ஸ்மார்ட் சிட்டி வேலையெல்லாம் இப்போதைக்கு ஆரம்பிப்பாங்களா...இன்னும் காலம் கடத்துவாங்களா?'' என்று 'டாபிக்' மாற்றினாள் சித்ரா.

''காசு வர்ற மேட்டர்னா கார்ப்பரேஷன்ல, சீக்கிரமா செஞ்சிருவாங்க... 'ஸ்மார்ட் சிட்டி'யில, குளங்களை மீட்குறதுக்காக சுங்கம், உக்கடம் ரெண்டு டெப்போவையும் கார்ப்பரேஷனே கட்டித்தரப்போறாங்களாம். உக்கடம் கழிவுநீர்ப்பண்ணை பக்கத்துல இடம் பாத்திருக்காங்களாம். இதையும் வடவள்ளி பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம் பாலம் மாதிரி, எதுக்கும் உதவாத மாதிரி கட்டிருவாங்களோன்னு டிஎன்எஸ்டிசிகாரங்க பயந்து போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''மதுக்கரையில சிமென்ட் பேக்டரி இருக்குற இடம், ரெவின்யூ டிபார்ட்மென்ட் 33 வருஷம் குத்தகைக்குக் கொடுத்ததாம். அது முடிஞ்சு போயும், இன்னமும் அதை எடுக்காம இருக்காங்களாம். அதை எடுத்தா, அங்க கட்டலாம்னு ஒரு 'புரபோசல்' போயிருக்கு. ஆனா, அது சிட்டிக்கு வெளியில இருக்குங்கிறதால 'ஸ்மார்ட் சிட்டி'யில பண்ண முடியாதுங்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''எப்பிடியோ, சிவில் ஒர்க் பண்ணி, 'ஸ்மார்ட் சிட்டி பண்ட்'டை காலி பண்றதுக்கான வேலையை ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கு,'' என்றாள் மித்ரா.

''அக்கா...நம்ம ஹவுசிங் யூனிட்ல, சமூக சேவகர்ங்கிற பேருல, வீட்டை வாங்கி, பத்தாயிரம், பதினைஞ்சாயிரம்னு உள் வாடகைக்கு விட்ருக்காங்களே... அவுங்களை எல்லாம் காலி பண்ணனும்னு 'பிஐஎல்' போடுறதுக்கு, நிஜமான சமூக சேவகர் ஒருத்தர், தயாராயிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.

''மித்து... ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட்ல, கன்சர்வேட்டர் பங்களாவுக்குப் பக்கத்துல, ஹைவேஸ் டிரைவர் ஒருத்தரு, கார் ஷெட் போட்ருக்காராம்... அதுக்கு, கதவு போட்டு, 'பார்' ஆக்கிட்டாராம். சண்டேன்னா, விடிய விடிய அங்க பார்ட்டி நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.

அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், அம்மா வந்து விடவே, 'கிளம்பலாம்' என்று அவசரப்படுத்தினாள் சித்ரா. இருவரும், அம்மாவிடம் விடை பெற்று, கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X