'ஆபரேஷன் - 2' தீவிரம்| Dinamalar

'ஆபரேஷன் - 2' தீவிரம்

Added : மே 17, 2018
Advertisement

பெங்களூரு : பா.ஜ.,வின், 'ஆபரேஷன் லோட்டஸ் - 2' ஆரம்பம் ஆகியுள்ளதால், ஆட்சி கனவில் இருக்கும், ம.ஜ.த., - காங்கிரஸ் கட்சியினர், கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.காங்கிரஸ் - ம.ஜ.த., ஆட்சி அமைப்பதை தடுக்க, 'ஆபரேஷன் லோட்டஸ் - 2' என்ற நடவடிக்கையை, பா.ஜ., மேலிடம் துவக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, 2008ல், கர்நாடகாவில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைய, வெறும், மூன்று, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது, 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில், பா.ஜ., அமைத்த வியூகத்தின் படி, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரை பதவி விலக செய்தது. இதன் மூலம், மீதமுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில், பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது. அந்த வகையில், தற்போது, மாநிலத்தில் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, இன்னும், எட்டு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. எதிர் தரப்பை சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்களை பதவி விலக அல்லது நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, 'ஆப்சென்ட்' ஆக செய்தால், பெரும்பான்மை எண்ணிக்கையை எளிதில் எட்ட முடியும்.இரண்டாவதாக, 1996ல், பெரும்பான்மைக்கு தேவையான, எம்.பி.,க்கள் ஆதரவு இல்லாமல், மத்தியில், வாஜ்பாய் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்தது. பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், உருக்கமான உரையாற்றினார். அதன் பின் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பா.ஜ., தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, வாஜ்பாய், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம், நாட்டு மக்கள் மத்தியில், பா.ஜ., மீது அனுதாப அலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், பா.ஜ., மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. வாஜ்பாயை பின்பற்றி, எடியூரப்பாவும், முதல்வராக பதவியேற்று, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து, மாநில மக்கள் மத்தியில் மிகப் பெரிய அனுதாப அலையை பெறுவதன் மூலம், வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடலாம். அப்படி இல்லையென்றால், மூன்றாவதாக, தற்போது ஆட்சி அமைக்க எந்த முயற்சியும் எடுக்காமல், தேர்தலுக்கு முன், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.,வினர், ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி, பிரசாரம் செய்ததை, மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் எடுத்துச் சென்று, அந்த இரு கட்சியினர் மீது, மக்களிடம் வெறுப்பை விதைக்கலாம். இதன் மூலம், எதிர் வரும் தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகளை பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபடலாம். பா.ஜ.,வின் இந்த வியூகங்களை, அந்த கட்சியினர், ஆபரேஷன் லோட்டஸ் - 2 என அழைக்கின்றனர். பா.ஜ.,வின் இந்த வியூகத்தால், காங்., மற்றும் ம.ஜ.த., ஆகிய இரு கட்சியினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
குதிரை பேரத்தை, பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக ஆதரிக்கிறார். காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஒற்றுமை இல்லை என்பதில் உண்மையில்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒற்றுமையாக இருக்கிறோம்.
சித்தராமையா, மூத்த தலைவர், காங்.,
பரபரப்பு நிமிடங்கள்
l காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பஸ்களில் ஈகிள்டன் ரிசார்ட்டுக்கு, இரவு, 7:50 மணிக்கு குயின்ஸ் ரோடு காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர். ஒரு பஸ்சில், டி.கே.சிவகுமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் தலைமையில், 35 பேரும்; மற்றொரு பஸ்சில், மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தலைமையில், 44 பேரும் சென்றனர்.l தனி பெரும் கட்சியாக, அதிக இடங்களை பிடித்துள்ள பா.ஜ.,வினரை ஆட்சி அமைப்பதற்கு, கவர்னர் அழைத்ததாக, கர்நாடக பா.ஜ.,வின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியானவுடன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் அவசர செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ''இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கர்நாடக கவர்னர் செயல்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்,'' என்றார்.l கர்நாடகாவில், பா.ஜ.,வினருக்கு ஆட்சி அமைக்க வரும்படி, கவர்னர் உத்தரவிட்டதால், காங்கிரஸ், ம.ஜ.த., ஆதரவாளர்கள் கலவரம் நடத்த வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாநில போலீஸ், டி.ஜி.பி., நீலமணி ராஜு உத்தரவிட்டுள்ளதாக, கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை, டி.ஜி.பி., மறுத்தார்.l கர்நாடக மாநில தலைமை செயலர் ரத்னபிரபா, மாநில டி.ஜி.பி., நீலமணி ராஜு, பெங்களூரு கமிஷனர் சுனில் குமார் ஆகியோர், பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள எடியூரப்பா வீட்டில், அவரை சந்தித்து பதவியேற்க அழைப்பு விடுத்தனர். தேம்பி தேம்பி அழுத சித்தராமையா : புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் வேணுகோபால், சித்தராமையா, பரமேஸ்வர் உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது, சித்தராமையாவிடம் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி பேச துவங்கினர். யாரும் எதிர் பாராத வகையில், சித்தராமையா அழ துவங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அவரை சமாதானப்படுத்தியும், தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார். இதை பார்த்த மற்ற பிரமுகர்களும் கண் கலங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X