-இழப்பீடு; அரசின் கடமை... பாதிக்கப்பட்டோரின் உரிமை...

Added : மே 17, 2018
Advertisement
 -இழப்பீடு; அரசின் கடமை... பாதிக்கப்பட்டோரின் உரிமை...


தனி மனிதருக்கு எதிரான குற்றச்செயல்கள் அரசுக்கு எதிரானவையாக கருத்தப்பட்டு, அரசே குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் வழக்கை நடத்துகிறது. குற்றம் இழைத்தவர் தண்டனை பெற்றாலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு குறைவதில்லை.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியில் இழப்பீடு வழங்க ஒவ்வொரு மாநில அரசும் செயல் திட்டங்களை உருவாக்க 2009 குற்றவியல் நடைமுறைச்சட்டம் 357 ஏ பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசுடன் இணைந்து குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுகளுக்கோ மறுவாழ்விற்காக இழப்பீட்டு தொகை வழங்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்றும், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், குற்றம் புரிந்தவர் யார் என்று தெரியாமலும் அல்லது கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் கூட பாதிக்கப்பட்டவர் இழப்பீடு பெற உரிமையுடையவர் என்றும் இரண்டு மாதத்திற்குள் இழப்பீடு தொடர்பான விசாரணையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முடிக்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டது.இந்த சட்ட திருத்தத்திற்கு பின்பும் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் எஸ்.சத்தியச்சந்திரன் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொது நல வழக்கு தொடர்ந்தார். அதன்பின்பு 30.11.2013 அன்று தமிழக அரசு இத்திட்டத்தை அரசாணையில் வெளியிட்டது.

டி.ஜி.பி., கட்டுப்பாட்டில் இழப்பீடு தொகை

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணம் போலீஸ் டி.ஜி.பி., கட்டுப்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தை தமிழக உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் செயலாளர் நிர்வகிப்பார். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு வேண்டி குற்றவழக்கு நடக்கும் நீதிமன்றத்திலோ அல்லது மாவட்ட நீதிமன்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திலோ அல்லது தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலாளரிடமோ விண்ணப்பிக்கலாம். குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழக எல்லைக்குள் நடந்த குற்றங்களுக்கு மட்டுமே தமிழகத்தில் இழப்பீடு பெற முடியும்.
இழப்பீடு பெறுவதற்கான நடைமுறை

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கு, பாதிப்பு, இழப்பீடு குறித்து விசாரித்து உண்மைத் தன்மையை ஆராய்ந்து எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என இரு மாதங்களுக்குள் முடிவு செய்யும். வேறு திட்டங்களின் கீழோ அல்லது நீதிமன்றங்களின் உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலோ அத்தொகையை கழித்து இழப்பீடு வழங்கப்படும். மருந்து செலவுகள் காயத்தின் தன்மை, பாதிப்பின் அளவு, மறுவாழ்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஒவ்வொரு வழக்கின் தனிப்பட்ட தன்மையின் அடிப்படையிலும் இத்திட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேற்படாமல் இழப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாடுகளையும், பணம் சரியாக செலவழிக்கப்படுகிறதா என்பதையும் போலீஸ் துறை கமிஷனரும் கண்காணிப்பார்.மோட்டார் வாகன விபத்துக்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் அரசோ, மாவட்ட சட்டப்பணிகள் குழுவோ பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமாக இலவச மருத்துவ சிகிச்சை இழப்பீட்டு தொகை அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த நிவாரணங்களை வழங்க உத்தரவிடலாம்.

15 நாட்களுக்குள் முதற்கட்ட தொகை

உயிர் இழப்பிற்கு மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், உடல் உறுப்பு ஒன்றை இழந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும், ஆசிட் வீச்சினால் உயிரிந்தால் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும், பாலியல் வன்புணர்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், பெண்களோ, குழந்தைகளோ கடத்தப்படுவது, மாண்பை பாதிப்பது, கொத்தடிமை, பாலியல் சுரண்டல் போன்றவற்றால் இழப்பையோ, மனஉளைச்சலையோ ஏற்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், மருத்துவ செலவுகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும், இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பெறலாம். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணமாக மூன்று லட்சம் ரூபாயும், அத்தொகையில் ஒரு லட்சம் ரூபாய் வழக்கு பதிவான நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள்ளும், மீதி இரண்டு லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். அரசு செலவில் உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோர் விரும்பும் எந்த தனியார் மருத்துவமனையிலும் பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட உயர் சிகிச்சைகளை பெற ஆசீட் வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிமையுள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு தொகையை உயர்த்தியிருக்கிறது.

மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு
பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை குற்றம் புரிந்தவரிடம் இருந்து திரும்ப வசூலித்து கொள்ளவும், இத்திட்டத்தில் அதிகாரம் உள்ளது. மேலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இழப்பீடு வழங்க மறுத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கோ, மாநிலக்குழு மறுத்தால் மாநில அரசின் முன்பும் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம்.மத்திய அரசு உள்துறையின் குற்ற ஆவணப்பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 2016 ஆண்டில் தமிழகத்தில் 1603 பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் 65 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், இந்த 65 பேர்களில் 37 பேர் பெண் குழந்தைகள் என்பதும் அதிர்ச்சியடைய வைக்கிறது. 2016 ஆண்டில் 58 வரதட்சணை மரணங்களும், 319 பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்றதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் உயிரிழப்பு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் 58 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இரண்டு கோடியே 67 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கு மேல் இழப்பீடு பெற முடியாத நிலையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கு பிறகும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
புரிதல் ஏற்படுத்துவோம்

ஒரு குற்றம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போதே காவல் நிலையத்திலேயே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம்பாதிக்கப்பட்டவரின் இழப்பை முழுமையாக ஈடுகட்ட முடியாத போதும், மறுவாழ்வுக்கும், புதிய நம்பிக்கைக்கும் வழிவகை செய்யலாம்.பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது ஏதோ அரசு மக்களுக்கு செய்யும் தர்ம செயல் அல்ல. அது சட்டப்படி அரசின் கடமையும், பாதிக்கப்பட்டோரின் உரிமையுமாகும். எனவே அரசு இழப்பீடு வழங்கும் வழிவகைகளை எளிமையாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க செய்ய வேண்டும். குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவது உரிமை எனக்கருதி, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின்படி தங்கள் மாவட்டத்திலுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். இதுகுறித்த புரிதல்களை மக்களிடம் ஏற்படுத்தி அதன் பயன்களை அனைவரிடம் கொண்டு சேர்ப்போம்.-முனைவர் ஆர்.அழகுமணிவழக்கறிஞர்உயர்நீதிமன்றம் கிளைமதுரை.98421 77806.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X