கொங்கு மண்டல ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி... கோட்டை விடும் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி!| Dinamalar

கொங்கு மண்டல ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி... 'கோட்டை' விடும் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி!

Added : மே 22, 2018
Share
தோழியின் திருமண வரவேற்புக்குச் செல்வதற்காக, பரிசுப் பொருளுடன் சித்ராவை அழைக்க வந்திருந்தாள் மித்ரா. தலையைத் துவட்டிக் கொண்டே, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, மித்ராவைப் பார்த்ததும் பதறினாள்...''ஏய்... என்னடி, இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட?'' என்று கேட்டாள் சித்ரா.''நான் என்ன ரஜினியா... வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு, வராம 'லேட்' பண்றதுக்கு?'' என்று
கொங்கு மண்டல ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி... 'கோட்டை' விடும் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி!

தோழியின் திருமண வரவேற்புக்குச் செல்வதற்காக, பரிசுப் பொருளுடன் சித்ராவை அழைக்க வந்திருந்தாள் மித்ரா. தலையைத் துவட்டிக் கொண்டே, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, மித்ராவைப் பார்த்ததும் பதறினாள்...''ஏய்... என்னடி, இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட?'' என்று கேட்டாள் சித்ரா.''நான் என்ன ரஜினியா... வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு, வராம 'லேட்' பண்றதுக்கு?'' என்று எதிர் கேள்வி கேட்டாள் மித்ரா.''இப்ப ஏன்டி அவரை வம்புக்கு இழுக்குற... அப்பிடின்னா, அவர் சம்மந்தப்பட்ட ஏதாவது மேட்டர் வச்சிருக்கேன்னு அர்த்தம்... சொல்லு!'' என்றாள் சித்ரா.''அவர் கட்சியோட முதல் மாநாடு, கோவையில நடக்கப்போறதா முதல்ல தகவல் வந்துச்சுல்ல... அவரு இமயமலைக்கு போயிட்டு வந்த பிறகு, திருச்சியில வைக்கப் போறதா ஒரு தகவல் பரவிட்டு இருக்கு... அவரோட குருஜி கொடுத்த உத்தரவுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''அதை விடு... அவுங்க ரசிகர் மன்றத்துக்காரங்க, ஒரு 'ரகசிய சர்வே' எடுக்குறதா அன்னிக்கு சொன்னியே... என்ன 'ரிசல்ட்' கிடைச்சுதாம்?'' என்று மீண்டும் கேள்வி எழுப்பினாள் சித்ரா.''கொங்கு 'பெல்ட்'ல இருக்குற, 66 தொகுதியில, 'சர்வே' எடுத்ததுல, ரஜினிக்கு அமோக ஆதரவு இருக்கறது தெரிஞ்சிருக்கு. ஒரு சில பகுதிகள்ல, 90 சதவீதம் ஆதரவு இருக்குன்னு, மன்றத்துக்காரங்க பயங்கர 'குஷி'யா இருக்காங்க. இதுல இன்னொரு விஷயம்... இதுவரைக்கும் 'கொங்கு மண்டலம் எங்களின் கோட்டை'ன்னு சொல்லிட்டு இருந்த ஆளுங்கட்சிக்கு, அடுத்த எலக்ஷன்ல கஷ்டம் தான்,'' என்றாள் மித்ரா.''அப்பிடி நடந்தா, 'கோட்டை'ய கோட்டை விடுற ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும். ஆனா, கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, நம்மூர்ல ரஜினி ரசிகர் மன்றத்துக்காரங்க, மூணு கோஷ்டியா அடிச்சுக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''இப்பவே, ரஜினியோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா, நிர்வாகிங்க சில பேரு, பல லட்ச ரூபா பாத்திருவாங்க; ஆனா, மன்றம் பேருல மக்களுக்கும் எதுவும் செஞ்சதில்லைன்னு கேள்விப்பட்ருக்கேன்,'' என்றாள் சித்ரா.''அப்பிடிப்பட்ட ஆளுங்க தான், இப்போ 'எங்களுக்கு பதவி தரலைன்னா, கட்சியை எப்பிடி நடத்துறாங்கன்னு பார்ப்போம்'னு ரஜினிக்கே மறைமுக சவால் விடுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா இது நடக்குது... துடியலுார்ல, ஆளுங்கட்சியில ஒரு முக்கியப் பதவியில ஒரு 'லேடி' இருக்காங்க. அந்தம்மா, 'டாஸ்மாக்'ல வர்ற மாமூலை எல்லாம் வாங்கிட்டு, கட்சிப்பேருல ஒரு நீர் மோர்ப் பந்தல் கூட வைக்கலையாம். எம்.எல்.ஏ., சத்தம் போட்டதுல, ரெண்டு பேருக்கும் பிரச்னையாயிருச்சாம்; கடைசியில, எம்.எல்.ஏ.,தான், அந்த ஏரியாவுலயும் நீர் மோர் பந்தல் வச்சிருக்காராம்,'' என்றாள் சித்ரா.'டிவி'யில், 'வனிதா மணி வனமோகினி... வந்தாடு' என்று கமல் துள்ளல் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே, மித்ரா கேட்டாள்... ''இப்போ நம்மூர்ல இருக்குற இண்டஸ்ட்ரிக்காரங்க, பெரியபெரிய கடைக்காரங்க எல்லாம் பயப்படுறது யாருக்குத் தெரியுமா?'' என்றாள்.''ஐ.டி.,காரங்களைப் பார்த்தா, போலீசைப் பார்த்தா... நீயே சொல்லு!'' என்றாள் சித்ரா.''பெரிய இடத்து ஆளுங்கட்சிக்காரங்களைப் பாத்து தான்; அவுங்க தான், அந்த மாநாடு நடத்துறோம்; இந்த மாநாடு நடத்துறோம்னு வசூல் தட்டி எடுக்குறாங்களாம். காவிக்கலரைப் பார்த்தாலே, எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க,'' என்றாள் மித்ரா.''வசூல்ன்னதும் எனக்கு போலீஸ் ஞாபகம் வந்துச்சு... ஐகோர்ட் உத்தரவுனால, சிட்டிக்குள்ள 36 டாஸ்மாக் கடைகளை மூடுனாங்களே... போன வாரம் நாம பேசுன பிறகு, 'பிஐடபிள்யு'ல இருந்து, 15 கேசு போட்டாங்களாம். அதுக்காக, ரெண்டு மூணு நாளு மூடிருக்காங்க. அப்புறம், எக்சைஸ் டிபார்ட்மென்ட்ல இருக்குற முக்கியமான அதிகாரி ஒருத்தர் தான், 'பார்'காரங்க சார்புல, 'இன்ஸ்'கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி, மறுபடியும் கடையைத் திறக்க வச்சாராம்,'' என்றாள் சித்ரா.''அவரா... ரொம்ப நல்லவராட்டம் பேசுவாரே... காலங்காத்தால குடிச்சு குடும்பத்தை குட்டிச் சுவராக்கிறதுக்கு இப்பிடித்தான் கடையைத் திறந்து விடுவாரா... இதுல அவருக்கு என்ன கிடைச்சுதாம்?'' என்றாள் மித்ரா.''ரெண்டரை லட்ச ரூபா, அவரு சொன்ன 'அக்கவுண்ட்'கள்ல விழுந்திருச்சாம்... சம்மந்தப்பட்ட 'இன்ஸ்'க்கு, ஒரு கடைக்கு, ஒரு நாளுக்கு ஏழாயிரம் வீதம், 36 கடையில இருந்தும் மாமூல் கொடுக்கிறதா பேசி முடிச்சிருக்காங்களாம். அதுல அவருக்கு அஞ்சாம்; கீழ இருக்குற ரெண்டு எஸ்.ஐ.,க்கும் ஆளுக்கு ஆயிரமாம்!'' என்றாள் சித்ரா.இதைக் கவனிக்காத மித்ரா, அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, ''கிருஷ்ணன் சார்! நீங்களும், பாலசுப்ரமணியம் சாரும், அந்த ஆர்டிஐ பெட்டிஷனை எடுத்துட்டு நாளைக்கு வாங்க; கரெக்ட் பண்ணித் தர்றேன்,'' என்றாள். அவளே தொடர்ந்தாள்...''கார்ப்பரேஷன் கமிஷனர் வெளிநாடு போனதுல இருந்து, இங்க இருக்குற ஆபீசர்கள் எல்லாரும் 'செம்ம ஓபி' அடிக்கிறாங்களாம்... பேருக்கு தலையை காமிச்சிட்டு, சொந்த வேலையைப் பார்க்கப் போயிர்றாங்களாம். இவுங்க இப்பிடின்னா, கீழ இருக்கிறவுங்க எப்பிடி இருப்பாங்க; அவுங்களும் ஆளுக்கொரு பக்கம் போக, ஆபீசே 'வெறிச்'ன்னு கிடக்குது,'' என்றாள் மித்ரா.''அதை விடு மித்து... பல வருஷத்துக்குப் பிறகு, சிட்டியில இருக்குற நாலு குளங்கள், இந்த மே மாசத்துல தான் நிறைஞ்சிருக்கு. இந்த வருஷம், ரெண்டு பருவமழையும் ஜோரா இருக்கும்னு 'பிரிடிக்சன்' சொல்லிருக்காங்க...ஆனா, எந்த நீர் வழிப்பாதையையும் சரி செய்யவே இல்லை. சென்னை மாதிரி ஒரு மழை வந்துச்சுன்னா... நம்மூர்ல பல ஏரியா காலி தான்!'' என்றாள் சித்ரா.''உண்மைதான்க்கா... கார்ப்பரேஷன் எடுத்தாச்சுன்னு 'பிடபிள்யுடி'காரங்க சுத்தமா விட்டுட்டாங்க... இவுங்க என்னடான்னா, 'ஸ்மார்ட் சிட்டி'யில தான் எல்லாத்தையும் சூப்பராக்கப்போறோம்னு சொல்லிட்டே இருக்காங்க. சென்னையில பேஞ்சது மாதிரி, நம்மூர்ல தொடர்ந்து அஞ்சு நாள் கனமழை பேஞ்சுதுன்னா, ரொம்பவே 'டேஞ்சர்'தான்,'' என்றாள் மித்ரா.''அதுலயும் செல்வ சிந்தாமணி குளத்தை இப்ப நினைச்சாலே பயமா இருக்கு... இருந்த 'அவுட்லெட்'டையும் அடைச்சுட்டாங்க. பெருமழை அடிச்சதுன்னா, செல்வபுரம், செட்டிவீதி, கடை வீதிக்கு எல்லாம் ஆபத்து தான்!'' என்றாள் சித்ரா.''வாலாங்குளத்துல மட்டும் என்ன வாழுதாம்... சாக்கடைத் தண்ணியை வச்சு, முக்காவாசி நிரப்பிட்டாங்க... சுங்கத்துல இருக்குற ஒரே ஒரு 'அவுட்லெட்'டையும் சுருக்கிட்டாங்க... இன்னும் ஒன்றரை அடி தண்ணி வந்தா, நிரம்பிடும். அப்புறம் வர்ற தண்ணி, எங்க போகும்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.''குளக்கரையில இருக்கிறவுங்களுக்கு எல்லாம் பி.எஸ்.யு.பி.,திட்டத்துல, வீடு கட்டிக் கொடுத்துட்டாரு, 'பார்' போற்றும் எம்.எல்.ஏ.,... பத்தாததுக்கு சேத்துமாவாய்க்கால் கரையிலயே, ஆக்கிரமிப்புக்காரங்க வீடு கட்டுறதுக்கு, கவர்மென்ட்ல காசு வாங்கிக் கொடுத்துட்டாரு. மழை வந்து சிட்டிக்கு ஏதாவது ஆச்சுன்னா, இவுங்கள்லாம் தான் பொறுப்பு,'' என்றாள் சித்ரா.''நீ சொல்ற அதே எம்.எல்.ஏ., தான், இப்போ உக்கடம் பாலம் கட்டுற இடத்துல, இடிக்கப்போற ஆக்கிரமிப்பு, துப்புரவுப் பணியாளர்கள் வீடுகளோட எண்ணிக்கையைக் கூட்டிட்டே போயிட்டு இருக்காராம்,'' என்றாள் மித்ரா.''கட்சிக்காரங்க பேரையும் சேர்த்து விடுவாரு...இவரு என்ன தான், முன்ன முன்ன வந்தாலும், ஆளுங்கட்சி விழாக்கள்ல, 'ஒரிஜினல் மாவட்டத்துக்கு'தான், மரியாதை கொடுக்குறாங்க,'' என்றாள் சித்ரா.''அக்கா... போன வாரம் உணவு பாதுகாப்பு மையம் துவக்க விழாவுல, ஒரு காமெடி நடந்துச்சு... ஒரிஜினல் உணவு எது, கலப்படம் எதுன்னு கண்டு பிடிக்கிறதை மக்களுக்கு விளக்கிறதுக்காக, ரெண்டையும் அங்க வச்சிருந்தாங்க. அங்க வந்த ஒரு 'லேடி' யதார்த்தமா, 'இதுல கலப்பட உணவு தான், மார்க்கெட்ல அதிகமாத் தெரியுது; அப்புறம் ஏன் பிடிக்க மாட்டேங்கிறீங்க'ன்னு கேட்க, எல்லாரும் அதிர்ந்து போயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.''அதே விழாவுல இன்னொரு கூத்து நடந்திருக்கு... தள்ளு வண்டிக்கடைகளில் விற்கும் பொருட்களின் தரத்தைப் பத்தி, எச்சரிக்கிறதுக்காக, நிஜமாவே சில தள்ளு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திருந்தாங்களாம். ''கடைசியில பார்த்தா, அந்த வண்டிங்க எல்லாமே 'புட் சேப்டி ஆபீசர்' ஒருத்தருக்கு சொந்தமானதாம். இவரே ஆளுங்களை வச்சு, அங்கங்க கடை நடத்துறாராம்,'' என்று சிரித்தாள் சித்ரா.கடிகாரத்தைக் காட்டி, சித்ராவை விரைவாக கிளம்பச் சொன்ன மித்ரா, 'சண்முகம்! நீங்க எல்லாரும் கார்ல போங்க... நானும், அக்காவும் என் வண்டியில வந்துர்றோம்' என்று அலைபேசியில் அளவளாவ ஆரம்பித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X