குடும்பம் என்னும் கோயிலின் விளக்கு| Dinamalar

குடும்பம் என்னும் கோயிலின் விளக்கு

Added : மே 22, 2018
குடும்பம் என்னும் கோயிலின் விளக்கு

சங்க காலத்தில் பெண்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்தனர் என்றே சொல்லலாம். ஆணும் பெண்ணும் இணைந்த இல்லற வாழ்வே அன்பின் ஐந்திணை என்றுரைக்கின்றது இலக்கியம். உமை ஒரு பாகனாய்சிவன் வீற்றிருப்பது தமிழரின் இல்லற மாண்பால் இருவரும் ஒன்றே என உரைக்கிறது.மகளிர்க்கு உயிரைக் காட்டிலும் நாணம் பெரியது. அந்த நாணத்தைக் காட்டிலும் கற்பு மிகச் சிறந்தது என்கிறது தொல்காப்பியம். அச்சம்,நாணம், மடம் போன்றவற்றை பெண்களுக்குரிய பண்புகளாகக் குறிப்பிடுகிறது. அடக்கம்,அமைதி, மனங்கோணாமை, ஒளிவுமறைவின்றி உண்மையைக் கூறுதல், நன்மை,தீமை இது என பகுத்தறியும் அறிவு, எல்லாமே பெண்களுக்கு அவசியம் எனத்தொல்காப்பியம் கூறுகிறது.ஆனால் ஆண் மகனின் வீரம் ஒன்றை மட்டுமே சங்கஇலக்கியம் விவரிக்கின்றது.
சங்க கால பெண்கள் : சங்க காலத்தில் பெ ண்கள் இசை பயின்றுள்ளனர். தினை வயல்களை காவல் காத்துள்ளனர். விளையாட்டு நிகழ்த்தியுள்ளனர். குடும்பங்களையும் கவனித்துக்கொண்டு வேலைகளையும் செய்து வந்துள்ளனர். அன்று கண்ணிறைந்த பேரழகு கொண்டு, ஆடவர் உள்ளம் கவர்ந்தவளாகபெண் இருக்க வேண்டும் என ஆண்கள் விரும்பினர். எனவே அவள் ஒரு போகப் பொருளாகவே கருதப்பட்டாள். அதனால்தான் சங்க இலக்கியங்களில் பெண்களை வர்ணித்தே வதைத்தனர். பரத்தையர் என்று ஒரு பெண் குலத்தை ஒதுக்கி வைத்திருந்தனர். பெண்ணின் கற்புக்கு களங்கம் விளைவித்த ஆடவர்கள், பெண்களை பல பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்தனர். ஆடவர்களில் பரத்தையன், விதவையன் என்றழைத்தது உண்டா? அதனால்கற்பை பொதுவில் வைப்போம் என்றார் பாரதி. ஆண் மகனைப் பெற்றெடுத்த ஒரு தாய் அவனை வீரனாக்கிப் போர்க்களத்துக்கு அனுப்புகிறாள். வீரம் நிறைந்தவளாய் விவேகம்நிறைந்தவளாக இருந்தாலும் பெண், ஆணுக்குப் பின்தள்ளப்பட்டாள்.
கண்ணதாசனின் பெண்கள் : கண்ணதாசன் பெண்களை அழகிய மங்கையர், பழகுசெந்தமிழ், துள்ளி ஓடும் புள்ளி மான், தங்கரதம், காவேரி மீன், அழகுமயில், தங்கக்கிளி, கலையாதசித்திரம், வாடாமலர், பூங்கொடி, கள்ளிருக்கும் ரோஜா, சிட்டுக்குருவி என பல்வேறு வார்த்தைகளால் உருவகமாகப் பாடுகிறார்.அழகான ஆண் துணை வேண்டாம். அழகாய் பார்த்துக் கொள்ளும் ஆண் கூட வேண்டாம், அழ வைக்காத ஆண், கணவனாகக் கிடைத்தால் போதும் என்ற எதிர்பார்ப்பு இன்று அநேக பெண்களிடம் உருவாகி விட்டது. வெள்ளம் (நீர்) எப்படிஇடத்திற்கேற்பத் தன்னை உருமாற்றிக் கொள்கிறதோ, அதுபோல் பெண் தன்னைஉருமாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வீழ்ந்தாலும் விடா முயற்சியாய் வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பவள்; பிறந்த வீட்டில் நாற்றங்கால் பயிராய்இருந்தவள் புகுந்த வீட்டு நிலைக்கேற்ப வளர்ந்து காய்த்து பலன்தரும் பண்பாளியாய் தன்னை மாற்றிக் கொள்கிறாள். வேதனைக்குள் விரக்தியைவைத்து சோதனைக்குச் சொந்தக்காரியாகின்றாள், அதையே சில நேரங்களில் சாதனை ஆக்கிக்கொள்கிறாள்.
பெண்ணின் வேதனை : 'சர்க்கரைக்குள் உப்புக்கலந்தது போல், சாதத்தில் கல் கலந்தது போல், இனிப்பில்கசப்புக் கலந்தது போல், உன்னில்நானிருக்கின்றேன் பொருத்தமில்லாது' எனப் பெண் கூறும் வரிகள் எவ்வளவு வேதனைத் தருகிறது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, அதுவும் எங்களுக்குவேண்டாம். அந்த ஒருநாளிலும் நாங்கள் இடைநில்லாப் பேருந்தாய் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். பிறர் வயிறு நிரப்பும் சமையல்காரர்கள் நாங்கள், அலுவலகம் சென்றுவேலை பார்க்கும் அன்பானக் கணினிகள்! வீட்டையும் பாத்திரத்தையும் சுத்தம்செய்யும் உயிருள்ள ரோபோக்கள்! ஆண்களே... நீங்களும் ஒரே ஒருமுறை பால் (பெண்ணாக) மாறிப்பாருங்களேன். அப்போது தெரியும் எங்கள் வலி.பட்டியலில் இடம் பெறாத உலக அதிசயம் அம்மா எனும் பெண். தன் ரத்தத்தை உணவாக்கி சத்தத்தைத் தாலாட்டின் உரமாக்கி முத்தத்தை ஸ்பரிச நிழலுக்கு உரமாக்கி ஒவ்வொரு முறையும் குழந்தையைத் துாக்கி அணைத்து உலகை காட்டுபவள் பெண்தான்.
பெண்ணின் பல முகம் : தாயாய், காதலியாய்,மனைவியாய் மட்டுமல்லாது, சிலநேரங்களில் அமைதியாய், இறுக்கமாய், விரக்தியாய், வேதனையாய், அழுகையாய், ஆனந்தமாய், கோபமாய், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, ஓர்அழகான சிரிப்பால் குடும்பத்தில் குதுாகலத்தை தருபவள். பொறுப்பில்லாக் கணவனிடம்இருந்து குடும்பத்தை மீட்டெடுத்து வாழ்க்கையை கரையேறச் செய்யும்தோணி போன்றவள்.''பெண்ணடிமை பேசுகிற நாடு,பணப்பேய்கள் உலவும் சுடுகாடுமுன் அடிவை கம்பீரமோடு - உன்மூச்சையே புயலாய் விடனும்கோபக் குறியோடு உன்னடிமை தீரஓங்கி வளர்ந்து வாபாரதிக் கவிஞன் பாட்டுப் பலத்தோடு''- என்னும் நவகவியின் கவிதை பெண்ணடிமைத் தனத்திலிருந்து பெண்களை வெளியேறச் சொல்கிறது.எப்படி வாழவேண்டும்கல்வி என்னும் ஊன்றுகோலைப் பிடித்து வாழ்க்கை என்னும் களம்கண்டவள். சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும்?பட்டங்களை ஆளவும், சட்டங்கள் செய்யவுந்தான் பாரினில் பெண்களை வரச்சொன்னான் பாரதி, உங்கள் இஷ்டத்திற்குச் செல்லச் சொல்லவில்லை.ஒரு பெண் ஒழுக்கத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பப் பெண். பெண்ணின் ஒழுக்கம் ஒரு நாட்டின் பண்பாட்டுக் கலாசாரத்தின் அளவுகோலாகக் கருதப்படுகிறது. எந்தச் சூழலிலும் பெண் தன் மானத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. ஓர் ஆண் சோறு கிடைத்தஇடத்தில் உண்டு விட்டு, நிழல்கண்ட இடத்தில் துாங்கி விடுவார். இதை ஒரு பெண்ணால் செய்ய முடியுமா? நமது வாழ்க்கைக்கு அவசியமானது நீர். பூமி செழிக்க மழை அவசியம். மழை நீரை ஆணாக உருவகிக்கின்றனர். பூமியை பெண்ணாகக் கூறுகின்றனர். மழைபொழியவும் பூமி தன்னைத் தியாகம் செய்து தரணியை செழிக்கச் செய்கிறது.பெண், பூமிபோல தியாகச் சுடராக விளங்க வேண்டும் என்பது முக்கியம். பெண்ணே! நீ ஓர் ஆணால் மட்டுமே பூஜிக்கப்படுபவள். கோயிலில் இருக்கும் குத்துவிளக்குப் போன்றவள். குடும்பம் என்னும் கோயிலில் ஒளி தரக்கூடியவள். தெருவிளக்காக மாறக்கூடாது. பெண் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. வீடும் நாடும் போற்றும் வீர மங்கையாகத் திகழ வேண்டும்.
காட்சிப்பொருள் அல்ல : துன்பத்திலும், துயரத்திலும்,கோபத்திலும், ஆற்றாமை அடக்கிச் சாம்பலாக்கி சகித்து பீனிக்ஸ் பறவை போல எழ வேண்டும். நீ செய்யும் ஒப்பனையிலும் கூட ஒரு கடமையுணர்வு தெரிய வேண்டும். காட்சிப் பொருளாகக் கூடாது. குடும்பம் என்னும் கோவிலில் கற்ப கிரகத்திலிருக்கும் கடவுளாகத் திகழ வேண்டும். உள்ள உணர்வுகள் திரிந்து போகக் கூடாது. என்றும் பெண்மையோடு வாழ்ந்தால்தான் சமுதாயம் போற்றும்.ஒரு பெண்ணின் சீர்கேட்டால் குடும்பமே அழிந்து விடும். ஆக்கத்தை (குழந்தைப் பிறப்பு) தரும் அரிய பிறவியாகிய பெண்ணே,ஊக்கத்தைத் தர வேண்டும். தரணி போற்றும் பெண்ணாக வாழாவிட்டாலும் ஒரு கணவனுக்கு தகுதியான தாரமாக வாழ்ந்து வீழவேண்டும். அந்த வீழ்ச்சியில்தான் பெண்மை இருக்கிறது. பெருமை இருக்கிறது.
-முனைவர். கெ. செல்லத்தாய்தமிழ்த் துறைத் தலைவர்எஸ்.பி.கே. கல்லுாரிஅருப்புக்கோட்டை

94420 61060

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X