வாழ்வது ஒரு முறை... வளரட்டும் தலைமுறை| Dinamalar

வாழ்வது ஒரு முறை... வளரட்டும் தலைமுறை

Added : மே 24, 2018
 வாழ்வது ஒரு முறை...  வளரட்டும் தலைமுறை

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற
ஞானத்துஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலா காலமது ஆமே
கல்வியறிவும், மெய்ஞ்ஞான மேன்மையும், உயர்ந்த வாழ்க்கை நெறியும், அறிவும் பெற்று அதன்வழி நடந்தால் வாழும் நிலையில் இருந்து தாழ்ந்து விடாதுகுறைவின்றி எண்ணிலா காலம் வாழலாம் என திருமந்திரம் குறிப்பிடுகிறது. தகுந்த எல்லையை, வரைமுறையை வகுத்து வாழ்ந்தால் இறைவன் கொடுத்த கொடை யெனும் வாழ்வு மலரும்.


திசை நோக்கி நகரும் வாழ்வுவாழ்வு இன்று புதிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல புதிய தடைக்கற்கள் உருவாகி கொண்டிருக்கின்றன. தடைக்கற்களைத் தாண்டி முன்னேறும் படிக்கற்களாக மாற்ற வாழ்வில் நல்ல வழிகாட்டி தேவை. வளமுள்ள ஈரம் காயாத பண்படுத்திய மண்ணில் விதைகளை விதைத்தால் பயிர்கள் விளையும்.
அதுபோல நெறிப்படுத்தப்பட்ட, வழிப்படுத்தப்பட்ட, குழந்தைகள் தான் எதிர்காலத்தில் நல்ல
தலைமுறையினராக உருவாக்கப்படுவார்கள். வழிகாட்டுதல் என்பது திட்டமிடும் இலக்குக்கு தகுந்த முறையை காட்டுவது. இலக்குக்கு வேண்டிய எண்ணம் மூளையில் உதயமாகி சிந்திக்கப்பட்டு, பின்பு அறிவால் துாண்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு ஆக்க வேலையில் ஈடுபடுத்தப்படுகிறது. வளரும் தலைமுறை நன்றாக உருவாவதற்கு இன்றைய தலைமுறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்குஎய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

செயலின் முடிவையும், இடையூறையும் தெரிந்து காலமறிந்து, வளரும் தலைமுறையினர் ஈடுபட வழிகாட்டுதல் அவசியம். வளர் இளம் பருவத்தில் ஆசைகள் நிறைவேறாத ஆசையாக மாறும் பொழுது அது அவர்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும். மாய உலகில் மூழ்கி நிறைவேறாத ஆசையால் தீய பழக்கத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள்.


பருவ மாறுதல்வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல பருவ மாறுதல்கள் ஏற்படுகிறது. குழவிப்பருவம் (பிறப்பு- 2 வயது), குழந்தை பருவம் (வயது 3--10), குமரப்பருவம் (11--13), பின்குமரப்பருவம் (14--19), முதிர் பருவம் (20--40), தளர்வு பருவம் (41--60), முதுமைப்பருவம் (60 வயதிற்கு மேல்) என தொடுக்கப் பட்டிருக்கிறது.
மேலே குறிப் பிட்ட பருவங்களில் குமரப்பருவம் சிக்கலான, அமைதியற்ற, புயல்வீசும் பருவம் என அறிஞர் ஸ்டான்லி ஹால் கூறுகிறார். இப்பருவத்தில் தேவையற்ற கோபம் தோன்றும். தலை முறைகளுக்கிடையே கருத்து வேறுபாடும், அதனால் உறவுகளில் விரிசல்களும் ஏற்படும். மனதளவில் தடுமாற்றம் தோன்றும். இந்த இடை வெளியை தகுந்த வழிகாட்டுதலால் மாற்ற முடியும். கப்பலில் காந்தமுள் வழிகாட்டுவது போல, வளரிளம் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் நல்ல வழிமுறைகளை நெறிப்படுத்தி வழிகாட்ட வேண்டும்.


விடியலைத் தேடல்கையில் விரல்கள் ஐந்தும் சமமாக இல்லை என்றாலும் அவை ஒன்றோடொன்று இணைந்து தான் எச்செயலையும் செவ்வனே செய்து முடிக்க முடியும். இன்றைய தலைமுறையினரின் வேறுபட்ட தேடலை அறிந்து புரிந்து இலக்கை நோக்கி நகர்த்த வேண்டும். வெளி உலக தொடர்பு வளரும் தலைமுறையினரை முற்றிலும் மாற்றும் காரணியாக செயல் படுகிறது. அத்தருணத்தில் பெற்றோர் பாசத்தைக் காட்டி நல்ல வெளியுலக தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் நற்பண்ணை எதிர்பார்ப்பது போல, வளர் இளம் குழந்தைகள் பெற்றோரிடம் அதிகம் நல்லுறவை எதிர்பார்க்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் பெற்றோரிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று வினா கேட்டதற்கு பல பதில்கள் அளிக்கப்பட்டன.
'அலைபேசி சிணுங்கினால் பெற்றோர் ஓடிச்சென்று பதில் அளிக்கிறார்கள். நான் சத்தம் போட்டு அழைத்தாலும் சட்டை செய்வதில்லை. அலைபேசியுடன் தான் எங்கும் செல்கிறார்கள். என்னை அழைத்துச் செல்வதில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பொறுமையும், நேரமும் இல்லாததால் எனக்கும் ஒரு அலைபேசி விளையாட கொடுத்துள்ளனர்' என்று ஓர் வளர் இளம் பருவ குழந்தை பதிலளித்துள்ளது.
சென்ற தலைமுறையில் தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது, பெண் குழந்தைகள் தாயாருக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆண்கள்வெளிவேலைக்கு செல்லும் போது, ஆண் குழந்தைகளை உடன் அழைத்து செல்வர். நேரம் அதிகமானாலும் பெற்றோர் பணியில் ஈடுபடும் போது குழந்தைகளையும் தங்களோடு இணைத்து கொள்வர். அதனால் குழந்தைகளுக்கு உடலும், உள்ளமும் நலமாக இருந்தது. இன்று பெற்றோருக்கு நேரமின்மையால், பல குழந்தைகள் அலைபேசியுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய தலைமுறையினர் அன்பையும், அரவணைப்பையும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
பெற்றோர் நல்ல தகவல் மையமாக இருக்க வேண்டும். கட்டுக்கடங்கா இடியோசை, கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் பருவம் குமரப்பருவம். உண்மை நிலை அறியாது வாழ விரும்பும் பருவம். இவர்களுக்கு பெற்றோர் எனும் அணையின் அரவணைப்பு தேவை. இப்பருவத்தினரின் தேடலை அறிந்து, புரிந்து நேர்மறை எண்ணத்தோடு சுயமாக வாழக் கற்று கொடுக்க வேண்டும். மழை பொழிந்தால் பயிர்களுக்கு வசந்தம். பாசம் காட்டினால் மலரும் உறவெனும் நேசம். தேர்வுகள் உள்ள வரை தேடல்கள் இருக்கும். வாழ்க்கை என்பது தேர்வு. தொடர்ந்து நடக்கும் தேர்வில் இன்றைய தலைமுறையினரை விடியலை நோக்கி முறைப்படுத்த வேண்டும்.


தடைக்கற்களை மாற்றும் வழிகூட்டிலிருக்கும் புழு வண்ணத்து பூச்சியாக மாற எடுத்து கொள்ளும் போராட்டமே அதன் சிறகுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும்,பறக்கவும் உதவுகிறது. கூட்டில்இருந்து வருவதற்கு வண்ணத்துப்பூச்சி போராடுகிறது என்று இரக்கப்பட்டு கூட்டை உடைத்தால் அது பறக்க இயலாது இறந்து விடும். தடைகளைத் தாண்டி தீர்வு காண இன்றைய தலைமுறையினருக்கு கற்று கொடுக்க வேண்டும். 1982 ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் நிக்கோலஸ் ஜேம்ஸ் வுஜிசிக் பிறந்தார். பிறவிலேயே அவருக்கு இரண்டு கால்களும் கைகளும் இல்லை. ஆனால் அவருடைய தன்னம்பிக்கைப் பேச்சால் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சாதித்தவர்கள் யாரும் தோற்காமல் வெற்றி பெற்றதில்லை.
அமெரிக்காவில் 1,95,5-56 கருப்பு இனத்தவர் ஒடுக்கப்பட்ட நேரம். பஸ்களில் கூட அமர கடைசி
இருக்கையே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளையர்களுக்கு உட்கார இடம் இல்லை
யெனில் கடைசி இருக்கையையும் விட்டு கொடுத்து விட வேண்டும். ஒரு சமயம் பஸ்களில் கடைசி இருக்கையில் பயணம் செய்த கருப்பர் இன கர்ப்பிணி பெண்ணை இறங்க கூறி விட்டு இடமின்றி இருந்த வெள்ளையருக்கு இடமளித்தனர். மனம் வருத்திய கருப்பு இனத்தவர் பஸ்களில் சமமாக உட்காரும் காலம் வரும் வரை பஸ்களில் பயணிக்க மாட்டோம் என்று மார்டின் லுாதர் கிங் தலைமையில் பஸ் புறக்கணிப்பு போராட்டத்தை துவங்கினர்.
நாட்கள் ஓடியது. அரசு பஸ்களுக்கு பெருமளவில் வருவாயும் குறைந்தது. ஒரு நாள் கருப்பர் இன மூதாட்டி கால்கள் தடுமாற நடைபாதையில் நடந்து சென்றார். அவ்வழியாக சென்ற பஸ் டிரைவர், அம்மூதாட்டியை பஸ்சில் ஏறிக் கொள்ளும்படி கூறினார். அம்மூதாட்டி உடனே மறுத்து, ''நான் எனக்காக வருந்தவில்லை, எனது அடுத்த தலைமுறை சமமதிப்பை பெற வேண்டும். எங்கள் இனத்தவரும் வெள்ளையர்களை போல சம உரிமை அடைய வேண்டும்,'' என்றார்.
இன்றைய தலைமுறையினருக்கு பண்பாடும், வைப்பு நிதியும் மட்டும் போதாது. மண்ணை நேசிக்கவும், நீரை பாதுகாக்கவும், இயற்கையை அரவணைக்கவும் கற்று கொடுக்க வேண்டும். வனத்தை பாலைவனமாக்கி வளமான வாழ்வு பெறுவதை விட, வனத்தை வளமாக்கி வளரும் தலைமுறைகளுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லா பூமிஇருக்கும் நீர்த்தேக்கங்களை பாதுகாத்து, புதிய நீர்த்தேக்கங்களை வளரும் தலைமுறையினருக்காக உருவாக்க வேண்டும். மரங்களை புறக்கணித்து, மண்ணை புறக் கணித்து, நீரை புறக்கணித்து,காற்றை புறக்கணித்து எங்கும் வெறுமையை காட்டி மழையில்லா பூமி, வறண்ட மண், மேகமற்ற வானம், மாசுபட்ட காற்று இவற்றை அல்ல வளரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வது. வளரும் தலைமுறைக்கு மரங்களை வளர்த்து, பூமியை குளிராக்கி, மழையை உருவாக்கி, நீரைப்பெருக்கி, மாசில்லா சூழலை ஏற்
படுத்தி வரமாய் அளிப்போம். வாழ்வது ஒரு முறை; வளரட்டும் தலைமுறை.

-முனைவர் ச.சுடர்க்கொடி

கல்வியாளர், காரைக்குடி

94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X