இது தான் சரியான நேரம்!

Added : மே 26, 2018 | |
Advertisement
தேசத்தின் பல மாநிலங்களில் அண்மை காலமாக, 'நம்பர் விளையாட்டுகள்' அதிகரித்திருக்கின்றன. தேர்தல்களில் தெளிவான முடிவு கிடைக்காமல், பெரும்பான்மையை சிறுபான்மை ஆக்குவதும், சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றுவதும் கன ஜோராக நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்களை ஆடு, மாடுகளைப் போல, பேருந்துகளில் ஏற்றி போய் அடைத்து வைக்கின்றனர்.அவர்கள் சுவரேறி குதித்து தப்பி விடாமல் இருக்க,
இது தான் சரியான நேரம்!

தேசத்தின் பல மாநிலங்களில் அண்மை காலமாக, 'நம்பர் விளையாட்டுகள்' அதிகரித்திருக்கின்றன. தேர்தல்களில் தெளிவான முடிவு கிடைக்காமல், பெரும்பான்மையை சிறுபான்மை ஆக்குவதும், சிறுபான்மையை பெரும்பான்மையாக மாற்றுவதும் கன ஜோராக நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்களை ஆடு, மாடுகளைப் போல, பேருந்துகளில் ஏற்றி போய் அடைத்து வைக்கின்றனர்.


அவர்கள் சுவரேறி குதித்து தப்பி விடாமல் இருக்க, குத்துச்சண்டை பயில்வான்களையும், துப்பாக்கியோடு தனியார் பாதுகாவலர்களையும் பாதுகாப்புக்கு வைக்கின்றனர்.இன்னொரு மாநில அரசின் சுற்றுலா துறையே, 'பாதுகாப்பாக பதுங்கி இருக்க, எங்கள் கடவுளின் தேசத்திற்கு வாங்க' என, கூச்சமே இல்லாமல் விளம்பரம் செய்கிறது. ஒரே ஒரு, எம்.எல்.ஏ.,வுக்கு, 100 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள், கேட்பவர்களைக் கிறுகிறுக்க வைக்கிறது.

ஓராண்டுக்கு முன், தமிழகத்தில் அரங்கேறிய அதே அவலங்கள், இப்போது மாநிலத்திற்கு மாநிலம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை தொடர்பான வழக்குகளில், உள்ளூர் நீதிமன்றங்களில் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை, நீதிபதிகள் நினைத்த படி அடிக்கும் கூத்துகள் இன்னொரு பக்கம்.எல்லாமே இப்படி என்றால், எங்கே தான் போவது... யார் தான் இவற்றை கேட்பது என்ற கவலை ரேகை, மக்களின் மனதில் படிகிறது.


அரசியலை வேடிக்கை பார்ப்பவர்களை கூட பரபரக்க வைக்கும் அளவுக்கு, நம்பர் விளையாட்டுகளின் ஆதிக்கம் இருக்கிறது. அதனால் தான் கூவத்துார்களும், பெங்களூர்களும் உலக கவனம் பெறுகின்றன.எல்லாமே, எல்லாருக்கும் வெளிப்படையாக தெரிகிறது. இருந்தாலும் நம் ஜனநாயகம் வெறும் எண்ணிக்கையை மட்டுமே நம்பி சுற்றி கொண்டிருப்பதால், யாராலும், எதுவும் செய்ய முடியவில்லை.எந்த ஜனநாயகத்தை பலம் என்கிறோமோ, அதுவே நம் பலவீனமாக மாறி நிற்பதற்கு, நம்பர் விளையாட்டு அடிப்படை காரணமாகி இருக்கிறது. அரசியல் இன்று ஊழல் மயமாகி கிடப்பதற்கு, நாம் பின்பற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான தேர்தல் நடைமுறையே, ஆணி வேராக மாறி விட்டது.

சின்னதாக கணக்கு ஒன்றைப் போடுவோம்... ஒரு சட்டசபை தொகுதிக்கு, 16 லட்சம் ரூபாய் மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய வேண்டும் என்பது, தேர்தல் கமிஷனின் விதி. அந்த தொகுதிக்குள், 300 ஓட்டுச்சாவடிகள் வரை இருக்கும்.தேர்தல் நாளன்று முகவர்களுக்கு, வாக்காளர்களை அழைத்து வரும் கட்சியினருக்கு என, ஒவ்வொரு சாவடியிலும், 10 ஆயிரம் ரூபாயாவது, 'பூத்' செலவுக்கு கொடுக்க வேண்டும்; இது எழுதப்படாத சட்டம்.இல்லாவிட்டால், இன்றைய நவயுக கட்சிக்காரன் ஒருவன் கூட, ஓட்டுச்சாவடி வாசலில் நிற்க மாட்டான். ஒரு சாவடிக்கு, 10 ஆயிரம் ரூபாய் என்றால், 300 சாவடிகளுக்கு, 30 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்; இது, ஓட்டுப்பதிவு நடக்கும் நாளுக்கு மட்டும்!வேட்பு மனுத் தாக்கலில் தொடங்கி பிரசாரம், விளம்பரம், நாள்தோறும் உணவு, வாகனங்கள் என நீளும், ஜனநாயக சடங்குகளின் பட்டியலில், சாதாரணமாக, ஐந்து கோடி ரூபாயை இறக்கினால் தான் ஒரு சட்டசபை தொகுதியில் போட்டி போட முடியும்; இதுவே நிதர்சனம்.ஓட்டுக்கு இவ்வளவு என பிரித்து, வீட்டுக்கு வீடு நடக்கும் வினியோகம் தனி; அது இந்தக் கணக்கில் சேராது.


இப்போது சொல்லுங்கள்... தேர்தல் கமிஷன் நிர்ணயித்திருக்கும், 16 லட்சம் ரூபாய் எந்த மூலைக்கு... தேர்தல் செலவு உச்ச வரம்பு, இப்படி கேலிக்கூத்தாகி இருப்பது, அவர்களுக்குத் தெரியாதா என்ன... எல்லாமும் எல்லாருக்கும் தெரியும்! பிறகு... யாரை, யார் ஏமாற்றுகின்றனர்... அப்படி என்றால் எல்லாமே இங்கே, சும்மா பெயருக்கு தானா?இதனாலேயே தேர்தலின் போது கட்சிகளில், சும்மா நடத்தப்படும் நேர்காணல்களில் கூட, 'எவ்வளவு செலவு செய்வீர்கள்' என்பதையே பிரதானமாக கேட்கின்றனர்.தொழில் நடத்துவதற்கு, முதல் போடுவதை போல, தேர்தல் வியாபாரத்தையும், முதல் இன்றி ஆரம்பிக்க முடியாது. வியாபாரத்தில் சேவைக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்க முடியுமா... வென்று வந்து விட்டால், போட்டதை எடுப்பதே முதல் வேலை.இப்படி, கோடிக்கணக்கில் கொட்ட வேண்டிய அளவுக்குச் சீரழிந்து கிடக்கும் தேர்தல் நடைமுறையே, மொத்த ஊழலுக்கும் ஊற்றுக்கண். இதைச் சரி செய்யாமல் எதை பேசி, என்ன செய்ய...இந்நிலை மாற, கட்சிகளின் சார்பில் நிற்பவர்களை, எம்.எல்.ஏ., -- எம்.பி.,களாக தேர்வு செய்யும் தற்போதைய தேர்தல் முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.எப்படி இருந்தாலும் தனி நபர்கள் ஆட்சியமைக்கப் போவதில்லை; கட்சிகள் தான் அரசுகளை ஏற்படுத்த முடியும். பிறகு எதற்கு தனி நபர்களை முன்னிறுத்தி, தேர்தல் நடத்த வேண்டும்?

மக்களாட்சியை மையப்படுத்தி இயங்கும், உலகின், 80 சதவீத நாடுகளில், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே இருக்கிறது. ஆஸ்திரியா, ஜெர்மன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேர்தல் முறையாக இது இருக்கிறது.

பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த காலனி நாடுகளே, இன்னமும் நம்மூர் தேர்தல் முறையை வைத்திருக்கின்றன.


சரி... அதென்ன, விகிதாச்சார தேர்தல் முறை?


இதில், கட்சிகள் மட்டுமே தமது சின்னங்களில் போட்டியிடும். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள். பெறும் ஓட்டு சதவீதத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் அல்லது - எம்.பி.,க்கள் கிடைப்பர்.இந்த முறையில், தேர்தலுக்கு முன்பே, தங்கள் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பட்டியலை, தேர்தல் கமிஷனிடம் கட்சிகள் வழங்கி விடும். உதாரணமாக, தமிழகத்தில், 234 தொகுதிகள் இருக்கிறது என்றால், ஒவ்வொரு கட்சியும், 234 பிரதிநிதிகளின் பெயர்களை வரிசைப்படுத்தி, பட்டியலை முன் கூட்டியே கொடுக்க வேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் ஓட்டு சதவீதத்திற்கு ஏற்ப, பட்டியலில் அளிக்கப்பட்ட வரிசை படி, எம்.எல்.ஏக்களின் பெயரை தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.விகிதாச்சார முறையில், சட்டசபை அல்லது பார்லிமென்டில் எல்லா கட்சிகளுக்கும், பிரதிநிதித்துவம் கிடைக்கும். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வென்றால் தான், சின்னத்தை கூட தக்க வைக்க முடியும் என்ற, சிறிய கட்சிகளின் பரிதாப நிலை மாறும்.தாங்கள் ஓட்டளித்த வேட்பாளர் தோற்றுப் போய் விட்டால், தங்களின் ஓட்டு வீணாக போய் விட்டதாக ஓட்டு போட்ட யாரும் நினைக்க வேண்டியிருக்காது; எல்லா ஓட்டுகளுக்கும் சமமான மரியாதை இருக்கும்.விகிதாச்சார முறையில் நடக்கும் தேர்தலில், தனி நபர்கள் பணத்தை வாரி இறைப்பதைத் தடுக்க முடியும்; ஜாதி, மத அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது மாறும். எல்லாவற்றுக்கும் மேலாக, பட்டவர்த்தனமான வியாபாரமாக மாறி, ஊழலின் தொடக்கப்புள்ளியாக இருக்கும், இப்போதைய தேர்தல் முறை முடிவுக்கு வரும்.

கோடிகள் புழங்கும் கூட்டணி பேரங்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். இன்றைய தேர்தல் முறையின் அவலமாக இருக்கும் இடைத்தேர்தல் என்பதே மறைந்து போய் விடும்.பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் மனநிலைக்கு எதிராக இருக்கும், இப்போதைய ஜனநாயக முறை மாறும். இன்னும் கொஞ்சம், 'பளிச்'சென சொல்ல வேண்டுமானால், கட்சிகள் பெறும் ஓட்டு சதவீதத்திற்கும், அவற்றுக்கு கிடைக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் இடையே நிலவும் வித்தியாசம் சரி செய்யப்படும்.

உதாரணமாக, 2001 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தலா, 31 சதவீத ஓட்டுகளை பெற்றன. ஆனால், அ.தி.மு.க.,வுக்கு, 132 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்; தி.மு.க., வெறும், 31 எம்.எல்.ஏ.,க் களை மட்டுமே பெற்றது.

அது போல, 2006 சட்டசபை தேர்தலில், 32 சதவீத ஓட்டுகள் வாங்கிய, அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த இடங்கள் 61. அவர்களை விடக் குறைவாக, 26.5 சதவீத ஓட்டுகள் பெற்ற, தி.மு.க., 96 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது.மேலும், 2016 தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க., கூட்டணிக்கும் கிடைத்த ஓட்டுகளைத் தவிர்த்து, மற்ற கட்சிகள், 22 சதவீத ஓட்டுகள் பெற்றன; அதாவது, 95 லட்சம் ஓட்டுகளை பெற்றன. ஆனால், தற்போதைய தேர்தல் முறையால், அவர்களால், ஒரு, எம்.எல்.ஏ.,வை கூட பெற முடியவில்லை. இது, ஜனநாயகத்தின் துயரமல்லவா?'விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் குறைபாடுகளே இல்லையா' என கேட்டால், இருக்கலாம்; அதனால் தான் அது, எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இல்லை. அடிப்படையை ஒன்றாக வைத்து, அவரவருக்கு ஏற்ற வகையில் செயல்படுத்துகின்றனர்.ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், அதன் நிறை, குறைகளைச் சீர் துாக்கி பார்த்து, நமக்கு ஏற்றவாறு உருவாக்கலாம். விகிதாச்சார முறையில், பெரும்பாலும் கூட்டணி அரசே அமைவதற்கு வாய்ப்பிருப்பதால் மக்கள் நலன் அடிப்படையில், செயல் ஆக்கம் நிறைந்த அரசுகள் உருவாகும்; ஜனநாயகத்திற்கு வலு கிடைக்கும்.இந்திய தேர்தல் முறை, ஊழல் மயமாகி விட்டதால், கடந்த நுாற்றாண்டின் இறுதியிலேயே தேர்தல் சீர்திருத்தம் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டோம். அதன் அடிப்படையில், 1999ம் ஆண்டே, மத்திய சட்ட கமிஷன், 'விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இந்தியாவுக்குத் தேவை' என்ற பரிந்துரையை, மத்திய அரசுக்கு அளித்திருந்தது.அதன் பிறகு, தோற்றுப் போகும் கட்சிகள் மட்டுமே பேசும் அம்சமாக மாற்றி, அதை கிடப்பில் போட்டு விட்டோம். மெத்த படித்த நம்மவர்களுக்கு கூட இப்படியொரு மாற்றான தேர்தல் முறை இருப்பது, தெரியாத நிலை தான் உள்ளது.பண பலத்தால் நியாயமான தேர்தல் என்பதே கனவாக மாறி நிற்கும் இன்றைய சூழலில், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை பற்றி விவாதித்து செயல்படுத்தா விட்டால், தேர்தலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிர்காலத்தில் மரியாதை இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

நம்பர் விளையாட்டுகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், நம் தேர்தல் முறையை மாற்றுவதைப் பற்றி சிந்திப்பது தானே சரியாக இருக்கும். அதற்கும் இது தானே, சரியான

நேரமாகவும் இருக்கும்! இ - மெயில்: komalrkanbarasan@gmail.com-- கோமல் அன்பரசன் -ஊடகவியலாளர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X