'கப்பம்' கட்டிட்டு, வீட்டை கட்டு...! 'ஏப்பம்' விடும் ஆபீசர்களால் தொல்லை

Added : மே 29, 2018
Advertisement
''என்ன மித்து.. மழை இப்படி வெளுத்து வாங்குது. அக்னிநட்சத்திரம் மாதிரியே தெரியலையே,'' என்றவாறு, குடையுடன், மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. ''ஆமாங்க்கா.. அக்னி துவங்கிய நாளிலிருந்து மழை வருது. நல்லவேளை வெயில் பாதிப்பு தெரியலை. விவசாயத்துக்கும் நல்லதுதானே,'' என்ற மித்ரா, ''அம்மா... அக்கா வந்திருக்காங்க. ரெண்டு டீ குடுங்க,'' சமையலறை நோக்கி குரல் கொடுத்தாள்.
'கப்பம்' கட்டிட்டு, வீட்டை கட்டு...!  'ஏப்பம்' விடும் ஆபீசர்களால் தொல்லை

''என்ன மித்து.. மழை இப்படி வெளுத்து வாங்குது. அக்னிநட்சத்திரம் மாதிரியே தெரியலையே,'' என்றவாறு, குடையுடன், மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. ''ஆமாங்க்கா.. அக்னி துவங்கிய நாளிலிருந்து மழை வருது. நல்லவேளை வெயில் பாதிப்பு தெரியலை. விவசாயத்துக்கும் நல்லதுதானே,'' என்ற மித்ரா, ''அம்மா... அக்கா வந்திருக்காங்க. ரெண்டு டீ குடுங்க,'' சமையலறை நோக்கி குரல் கொடுத்தாள். ேஷாபாவில் உட்கார்ந்த சித்ரா, டிவியை 'ஆன்' செய்தாள். 'துாத்துக்குடியில்....' என்ற செய்தி வாசிக்கவும், ''டிவியில், பேப்பரில், ரோட்டில்.. எங்கு பார்த்தாலும், துாத்துக்குடி மேட்டர்தான் 'டாபிக்' ஏன்... மித்து?'' என்றாள்.''கரெக்டா... சொன்னீங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, 'காவிரி மேலாண்மை வாரியம்'அமைக்க போராட்டம். இப்ப, துாத்துக்குடி பிரச்னைக்கு போராட்டம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடக்குது,'' என்று மித்ரா சொன்னவுடன், ''ஆமாம், நம்ம அரசியல்வாதிகள் சற்றும் சளைக்காமல், ஆர்ப்பாட்டம், மறியல்ன்னு, போராடிட்டேதான் இருக்காங்க. அதில், நிறைய 'காமெடி' நடந்தது தெரியுமா?'' என்றாள் சித்ரா.''அப்படியா? சொல்லுங்க. கேட்கலாம்,'' என ஆர்வமானாள் மித்ரா.
''திருப்பூரில், மா.கம்யூ., மாதர் சங்கம் சார்பில் நடந்த மறியலுக்கு, 150 பேர் வருவார்கள் என போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு. அவங்களை அரெஸ்ட் பண்ணி, மண்டபத்தில் தங்க வைத்தால், சாப்பாடு தர வேண்டும், என்பதற்காக, 150 பேருக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஆனால், மொத்தமே 30பேர் மறியலில் கலந்துட்டாங்களாம். என்ன, இப்படியாகிடுச்சேன்னு, மீதமிருந்த சாப்பாட்டை, ஆங்காங்கே டூயூட்டியில் இருந்த போலீசுக்கு கொடுத்தனுப்பினாங்களாம்,'' என்றாள் சித்ரா. ''அடடா... என்ன இது. தோழியர் கூட்டமாக வரலியா?'' என்று மித்ரா கேட்டதும், ''சும்மா... தினம்தினம் போராட்டம்னா யார்தான் வருவாங்க. இப்படித்தான், லிங்கேஸ்வரர் ஊரில், தி.மு.க., செயலாளர், கட்சிக்காரங்களை, திருப்பூரில் நடக்கும் போராட்டத்துக்கு தயார் செய்தாராம்,''''அடுத்த நாள் காலையில, திருப்பூர் போனா... 'ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக மனித சங்கிலியாக மாத்தியாச்சு. போயிட்டு சாயந்திரம் வாங்கன்னு,' மாவட்ட நிர்வாகி சொல்லிட்டார். நொந்து போன நிர்வாகி, 'எல்லாரும் சாயந்திரம் கண்டிப்பாக வந்திரோணும்,' என்று சொன்னதற்கு, பலரும் சலிச்சு கிட்டு, 'அட... போங்கப்பா' உங்களுக்கு வேற வேலையில்லைன்னு கிளம்பிட்டாங்களாம்,''
''முதல் நாள் ராத்திரி கஷ்டப்பட்டு, சரக்கு வாங்கி கொடுத்தது, வீணாகிடுச்சேன்னு, அந்த நிர்வாகி புலம்பி தள்ளிட்டாராம்,'' என்று சித்ரா விளக்கியதும், 'க்ளுக்' என சிரித்தாள் மித்ரா.''அக்கா... எங்கிட்டயும் ஒரு இன்டரஸ்டிங் மேட்டர் இருக்கு. இதே மாதிரி, துப்பாக்கி சூட்டை கண்டித்து, கார்ப்பரேஷன் பக்கத்துல, ஒரு கட்சிக்காரங்க, ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. அவங்களுக்கு மைக் பெர்மிசன் கொடுத்தும், ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகலையாம். அனுமதி கொடுத்த அரை மணி நேரமும், மைக் இல்லாமல், கத்திக்கத்தி பேசி சமாளிச்சு, ஓய்ஞ்சு போயிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
அப்போது, மித்ராவின் அம்மா, ஆவி பறக்கும் டீயை வைத்து விட்டு, ''மழை பெய்யுது. சீக்கிரம் டீயை குடிச்சுடுங்க. இல்லாட்டி ஆறிடும்,'' என்ற கூறி சென்றார். இருவரும், டீயை குடித்து கொண்டே பேசினர்.''மித்து... போலீசார் மத்தியில் நடத்திய எல்லை 'பனிப்போர்' தி.மு.க., மறியலில் நடந்த கூத்து தெரியுமா?'' என்றதும், ''அக்கா... நீங்க சொன்னாதான் தெரியும்,'' என்றாள் மித்ரா.''தி.மு.க., மறியல் போராட்டத்தில் கைதானவர்களை, ஒரு பஸ்சில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு, போலீசார் அழைத்து
சென்றனர். அதில், ஆயுதப்படை போலீசார் இருவர், பாதுகாப்பு பணிக்காக சென்றனர். அதன்பின், மீதமிருந்த, அஞ்சு பேரை, போலீஸ் வேனில் ஏற்றியிருக்காங்க. ஆனா, அவங்க கூட, ஒரு போலீஸ் கூடப்போகலையாம் கட்சிக்காரர்கள் டாடா காட்டிட்டு ஜாலியா போனாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள், சூடான பஜ்ஜி தட்டுடன் மித்ராவின் அம்மா வந்தார். ''ஆன்ட்டி, நானே சொல்லலாம் என்று இருந்தேன். நீங்களா, கொண்டு வந்துட்டீங்க. தேங்க்யூ, ேஸாமச்'' என்ற சித்ரா, பஜ்ஜியை சாப்பிட துவங்கினாள்.''சாப்பாட்டில் முட்டையை மறைத்தால் தெரியாது, ஆனா, ஒரு அதிகாரி, முழு பூசணிக்காயை மறைக்கப்பார்க்கிறார்,'' மித்ரா சொன்னதும், ''அட...! விடுகதை மாதிரி பேசாதே. புரியம்படியா சொல்லுடி,''என்றாள் சித்ரா.
''கலெக்டர் ஆபீசில், காலாவதியான, தீத்தடுப்பு சிலிண்டர் மாற்றப்படாமல், இருப்பது குறித்து, செய்தி வெளியானது. இதை படிச்சுட்டு, சமூக ஆர்வலர் ஒருவர், உயரதிகாரியிடம் கேட்டுள்ளார். அதுக்கு அவர், 'அது பொய்யான செய்தி'ன்னு சொன்னாராம். ஆனா, காதும்காதும் வச்ச மாதிரி, 26 சிலிண்டரை 'ரீபில்' செய்ய அனுப்பினாராம்,''என்று மித்ரா சொன்னதும், ''அடேங்கப்பா... நீ, சொன்னது கரெக்ட்தான் மித்து,'' என்று கைகொடுத்தாள் சித்ரா.அதற்குள் மழை நின்று விடவே, சித்ரா கிளம்பினாள். அப்போது, ''அக்கா... நானும் வர்றேன், மார்க்கெட் வரைக்கும் 'டிராப்' செய்யுங்க,'' என்று மித்ரா சொன்னதும், ''சரி.. சீக்ரம் வா,'' என்றாள் சித்ரா. இருவரும், வண்டியில் புறப்பட்டனர். ''மத்திய அரசின் திட்டத்துக்கு களங்கம் வர்ற மாதிரி நடந்துக்கறாங்களே?'' என்று மித்ரா புதிர்போட்டாள்.''என்ன மித்து, சொல்றே? ஏன், எதாச்சும் 'கோல்மாலா'', என்றாள் சித்ரா. ''ஆமாங்க்கா. அனைவருக்கும் வீடு திட்டத்துல, சொந்த வீடு கட்டினாலும், 2.10 லட்சம் ரூபாய் வரைக்கும் மானியம் கிடைக்குது. சொந்த வீடு கட்றப்ப, அஸ்திவாரம், ஜன்னல் மட்டம், கூரை மட்டம், பணி நிறைவுனு, நாலு கட்டமாக மானியம் கொடுக்கறாங்க''''அதுல, 'லோக்கலில்' இருக்கற குடிசை மாற்று வாரிய ஆபீசர்ஸ், 20 பர்சென்ட் வரைக்கும் கமிஷன் கேட்கறாங்களாம். 'உங்களுக்கு கவர்மென்ட் தானே, மானியம் கொடுக்குது. சும்மா தானே பணம் வருது. அதுல, கொடுக்கறதுக்கு, கசக்குதான்னு, மிரட்டியே வாங்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா. ''என்னப்பா.. இது! அரசியல்வாதிங்க கொள்ளையைவிட படுமோசமா இருக்கே. இது விஷயத்தில், 'ைஹயர் அபிஷியல்ஸ்' 'வார்ன்' பண்ணினா, நல்லாயிருக்கும். இல்லைனா, மக்கள் போராட்டத்தில் குதிச்சுடுவாங்க,'' என்றாள் மித்ரா. ''கலெக்டர் ஆபீசுல, ஒவ்வொரு தளத்துல இருக்கற ஆபீஸ்ல, பாத்ரூம் 'க்ளீன்' பண்ற செலவுகளை 'ேஷர்' பண்ணிக்கறாங்க. 'பாத்ரூம் க்ளீனிங்' வேலை நடக்கறதே இல்ல. ஏழு மாடி கட்டடத்துல, 42 ஆபீஸ் இயங்கினாலும், ஒரேயொரு துப்புரவு பணியாளர் மட்டுந்தான் இருக்காரு. இரண்டாவது தளத்துல மட்டும் சுத்தம் செஞ்சுடறாங்க. மத்த இடமெல்லாம், பழைய பஸ் ஸ்டாண்ட் மாதிரிதான் நாறிக்கிடக்குது'' என கூடுதல் தகவலை சொன்ன மித்ராவிடம், ''இந்த விஷயத்தை, கலெக்டர் கண்டுக்கிட்டா பரவாயில்லையே,?''என்ற, சித்ரா ''ஆமா... ஜமாபந்தி முடிஞ்சிருச்சா?'' என்றாள்.''ஆமாங்க. சொல்ல மறந்துட்டேன். கிராம நிர்வாக கணக்குகளுக்கு ஒப்புதல் பெறணும்னா, செலவுகளை ஏத்துக்கணும்னு, பிரிச்சு விட்டுட்டாங்க. நீங்களே செலவு செய்யுங்கனு 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிட்டாங்களாம். அதனால, டீ, காபி, மதிய உணவு, 'ஸ்நாக்ஸ்'ன்னு எல்லா செலவுகளையும், வி.ஏ.ஓ., களே 'ேஷர்' பண்ணிட்டாங்களாம்,''''பசையான கிராமத்துல இருக்கற சிலர் 'ஸ்பான்ஸர்' பிடிச்சு சமாளிச்சுட்டாங்க.. புதுசா வந்தவங்களுக்கு இது தெரியாம, கைக்காச செலவு பண்ணியிருக்காங்க. 'கவலைப்படாதீங்க. கவர்மென்ட் பணம் கொடுத்திடும். செலவ சரிக்கட்டிக்கலாம்'னு சக அதிகாரிங்க ஆறுதல் சொன்னாங்களாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.அதற்குள், மார்க்கெட் வரவே, மித்ராவை இறக்கி விட்டு, சித்ரா கிளம்ப முயன்றாள். அப்போது, அங்கிருந்த பெட்டிக்கடையில், 'பான்பராக்' வாங்கி கொண்டு, ஒருத்தர் நடந்து செல்லவே, ''தினசரி மார்க்கெட்டில், பல இடங்களில், பான்மாசாலா ஜோரா விக்குதாம். எந்த ஆபீசரும் கண்டுக்கறதில்லையாம்,'' என்று மித்ரா அவசரமாக ஒரு தகவலை சொன்னதும், ''இது மட்டுமில்லை. எல்லா 'டிபார்ட்மென்ட்' ஆபீசர்களும் இப்படித்தான் இருக்காங்க. நேரம் வரும் போது பார்த்துக்கலாம்,'' என்றவாறு, வண்டியை கிளப்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X