அன்பு, அறம் போதிப்போம்!| Dinamalar

அன்பு, அறம் போதிப்போம்!

Added : மே 29, 2018
Advertisement

அன்றாட வாழ்வில் ஆன்மிகம் சாத்தியமா? ஆன்மிகம் என்பது அவசியமா? என்னும் கேள்விகள் மனதில் எழுவது இயல்பு. காரணம், ஆன்மிகம் குறித்த முழுமையான புரிதல் இன்மை அல்லது ஆன்மிகம் குறித்து தவறாக புரிந்து கொள்வதால் அதன் அவசியத்தை,அறவே அறியாது போய்விடுகிறோம்.ஆன்மிகம் என்றாலே உலகை துறந்து, பற்றற்று வாழும் வாழ்க்கை என்ற எண்ணம் நம் மனதில் ஆழப்பதிந்து விட்டது. நடைமுறை வாழ்வில் அதனால் பயனேதுமில்லை, என கருதி விடுகின்றோம். எனவே தான் இன்றைய குழந்தைகள், இளம் தலைமுறையினரிடம் ஆன்மிக நாட்டத்தை கொண்டு சேர்ப்பது மிகக் கடினமாக உள்ளது. பள்ளியில் இருந்து பல்கலை வரை ஆன்மிகக் கல்வியை வெகு கவனமாக திட்டமிட்டே தவிர்த்து வருகின்றோம். அதன் பலனாக எதிர்மறையான எண்ணங்களும், வன்முறை சிந்தனைகளும் இளம் வயதிலேயே வெகு சீற்றத்துடன் வளர்ந்து வருகிறது. சமூக சீர்கேடுகள் அன்றாட செய்திகளாகி செவிகள் புண்ணாகி விட்டன. ஒருபுறம் வசதிகள் பெருகி கொண்டே சென்றாலும் மறுபுறம் உயர் பண்புகள் வற்றி கொண்டே வரும் வருந்தத்தக்க நிலையினை காண்கின்றோம். இதை மாற்றி, இளைய தலைமுறையின் சிந்தனைகளை சீர்படுத்த வேண்டிய மாபெரும் பணியை சமயமும், சமுதாயமும் இணைந்து, பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும். ஆன்மிகத்தின் அவசியத்தை இல்லந்தோறும் உணர செய்ய வேண்டும்.
பொருளும், இன்பமும் : ஆன்மிகம் என்பது பலவீனர்களோ, கோழைகளோ, பயணிப்பதற்கான பயனற்ற பாதையல்ல. அது செயல் துடிப்பும், நேர்மையும், உண்மையும், நெஞ்சுரமும் உள்ளவர்களுக்காக வகுக்கப்பட்ட வீரமிக்க பாதை. உடல், மனம், புத்தி இவற்றை ஒருமுகப்படுத்தி எச்செயலையும் திறம்பட செய்வதற்கான ஆற்றலை அருளும் அட்சய பாத்திரம். அக இருள் நீக்கி, நல்வழி காட்டி, நம்மை துாயவனாக்கும் சுத்த சன்மார்க்கமே ஆன்மிகம். நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்து நமமை வழிநடத்திய மாமனிதர்கள் வரலாற்றின் ஆதாரமும் ஆன்மிகமே. பொருள் ஈட்டுதலும், இன்ப நுகர்ச்சியும் மட்டுமே மனிதவாழ்வின் நோக்கமல்ல. பொருளீட்டுவதற்கு தேவையான சிறந்த அறிவினை பெறுவதால் மட்டுமே மானுடம் சிறக்காது.பொருளாதார வளர்ச்சியையும், தொழில்நுட்ப சாதனைகளையும் நிராகரிக்காது ஏற்று கொள்ளும் நாம், அவையே நம்மை வலிமை உடையவர்களாக ஆக்கி விடாது என்பதை கருத்தில் கொள்வது அவசியம். பொருள் சார்ந்த அறிவும், ஆராய்ச்சிகளும் மனிதனின் வசதிகளை பெருக்கலாம். ஆனால் அவை ஒரு போதும் மனிதவாழ்வின் தரம் உயர வழி வகுக்காது. 'வசதி வேறு; வாழ்க்கை தரம் வேறு,' நம் ஆசைகளை நிறைவேற்றி தற்காலிகமான இன்பத்தை தருவதற்கு வசதிகள் உதவலாம். ஆனால் நீடித்த, தீங்கற்ற அமைதியை நிச்சயம் வழங்காது.அறியாமை என்பது எதுபெரும்பான்மையான மக்கள் ஒரு விஷயத்தை நாடி செல்வதால் மட்டுமே அது தகுதியையும், தரத்தையும் பெற்று விடாது. வசதிகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, அதனையே லட்சியமாக கொண்டு செயலாற்றுவது அறியாமை. வாழ்க்கை தரம் உயர ஆன்மிகமெனும் அககண்கள் திறக்கப்பட வேண்டும். வெறும் வசதிகளின் உச்சத்தை தொட்ட நாகரீகங்கள் தரைமட்டமானதற்கு வரலாற்று சான்றுகள் ஏராளம். புறவலிமைக்கு எல்லையுண்டு. பாரத தேசம் ஆன்மிகத்தை தனது இருப்பிடமாக கொண்டதால் தான் அகவலிமை பெற்று நிற்கின்றது. அதன் மூலம் அசைக்க முடியாததாக வேரூன்றி நிற்கின்றது. இந்நுட்பம் அறிந்த மாமன்னர்கள் நகரத்தின் மையத்தில் அதன் உயிர் நாடியாக பெருங்கோயில்களை அமைத்தனர். ஆலயங்களை வழிபாட்டு தலமாக மட்டுமின்றி கலாசார கூடமாகவும் உயர்த்தினர். ஆலயங்கள் மனிதனின் தரத்தை உயர்த்தும் வலிமைமிக்க ஆன்மிக மையங்களாக, பண்பினை பயிற்று விக்கும் பயிற்சி களங்களாக செயல்பட வேண்டும். அவை அதிகாரக் கோட்டைகளாகவும், வருமான தலங்களாகவும் மாறினால் தேசம் வலிவையும், பொலிவையும் இழந்து நிற்கும்.அறம், ஆன்ம விடுதலைபொருளையும், இன்பத்தையும் சிறக்க செய்து காப்பது அறமே. அறத்தையே தர்மம் என்கிறோம். 'அறம் காக்க, அறம் நம்மை காக்கும்' என்பது மந்திரச் சொல். அறம் மற்றம் ஆன்ம விடுதலை பற்றிய சிந்தனையால் ஆன்மிக மலர்ச்சி ஏற்படுகின்றது. அது மனிதனை புனிதனாக்குகின்றது. 'மனிதனாக பிறத்தல் வேறு; மனிதத்தன்மையோடு வாழ்தல் வேறு,' மனிதத்தன்மையே இறை நிலைக்கு நம்மை ஏற்றிவிடும் ஏணி. பண்டைய ரிஷிகள், மகான்கள், மாபெரும் தலைவர்கள் ஆன்மிகத்தை செயல்வடிவமாக்கி, மனிதர்களை சீர்படுத்தி, வாழ்வின் சிகரம் தொட உதவும் உன்னத ஏணியாக வடிவமைத்தனர். தனக்கென்ற சுய நலமில்லாத பரந்த உள்ளத்தோடும், குன்றாத உற்சாகத்தோடும் உழைத்தனர். நம் பார்வை விரியவும்,நோக்கம் தெளியவும் உள்ளன்புடன் உதவினர். 'பற்று வேறு; பொறுப்பு வேறு', 'ஆசை வேறு; அன்பு வேறு,' இதுவே அறம் உணர்த்தும் பேருண்மை. பற்று, ஆசை மற்றும் எதிர்பார்ப்புகள் மட்டுமே மேலோங்கி நிற்கும் எச்செயலும், எந்த ஒரு உறவும் நீடித்து நிலைக்காது. நன்மையும் பயக்காது. செயலில் பொறுப்பும், உறவுகளில் அன்பும் வெளிப்படுமானால் அறம் புன்னகைக்கும்.ஆன்ம விடுதலைக்கான கதவுகள் விரைந்து திறக்கும். நம்மை இறை நிலைக்கு உயர்த்தும்.பற்றற்ற செயலின் நன்மை''எந்த பற்றினால் சூரியன் ஒளியை தருகிறான்? எந்த ஆசையினால் நிலம் நம்மை தாங்குகின்றது? ஒரு நெல்விதையை நிலத்தில் விதைத்தால், அதில் தான் எத்தனை நெல் மணிகள் விளைகின்றன? ஒரு மாவிதை விதைத்தால் எத்தனை மாங்கனிகள் விளையும் என கணிக்க இயலாது. இயற்கை எதையும் எதிர்பாராது, அன்புடன் கொடுத்து கொண்டே தவறாது தன் பணியை செய்கின்றது. சூரியனுக்கும், பூமிக்கும் நாமென்ன செய்தோம்? கொடுத்து மன்னிப்பது இறைவன்; பெற்று மறப்பது மனிதன்,'' என்பார் சுவாமி சின்மயானந்தர்.சுயநலம், பற்று, பொறுப்பற்ற செயல், ஆசை, பகை இவையே இயற்கைக்கு நாம் செய்யும் இடையூறு. அறத்தினின்று விலகும் அவலம். அறத்தால் வையம் தழைக்கும். அறவழியில் எவர்க்கும், எத்தீங்கும் இழைக்காது வாழும் வாழ்வே ஆன்மிகம். ஒரு பொழுதும் ஆன்மிகம் செயல் துறவை போதிப்பதில்லை. மனிதனால் கணப் பொழுது கூட செயல் புரியாது இருக்க இயலாது, என்பதே கீதையின் உபதேசம். தன் வயமின்றி செயல் புரிதலால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்கி, செயலை மிக நேர்த்தியாக செய்யும் திறனை விளக்கும் விஞ்ஞானமே ஆன்மிகம். செயலை பழுதின்றி, ஆழ்ந்தறிந்து செய்வதற்கு நல் வழி காட்டும் துணை. செயலெனும் கடலில் செய்வதறியாது தவிப்போருக்கு களங்கரை விளக்கு. வினைக் கடல் கடக்க உதவும் ஞானத்தோணி. செயலில் மரியாதையையும், செய்வோனிடத்தில் துாய்மையையும் ஏற்றி வைக்கும் சுடரே ஆன்மிகம். இச்சுடரால் இருள் நீக்கி ஒளிர்வோம்; எங்கும் ஆன்மிகம் ஒளியினை ஒளிரச் செய்வோம்.
- சுவாமி சிவயோகானந்தாசின்மயா மிஷன், மதுரை93458 42268

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X