கவலைகளை கைகழுவுங்கள் | Dinamalar

கவலைகளை கைகழுவுங்கள்

Added : மே 30, 2018
Advertisement
 கவலைகளை கைகழுவுங்கள்


எப்போதும் வெறுமை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற குமுறல், எதையும் தாங்க முடியவில்லாத கோழையாக நான் எப்படி மாறினேன்? என்கிற கேள்விகள் இன்றைய நாளில் தவிர்க்க இயலாததாகிவிட்டன. எல்லாத் தவறுகளுக்கும் நான் தான் காரணம்,நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை, எத்தனையோ பாடங்களைப் படித்தேன், ஆனால் எதற்கும் அலட்டாமல் எப்படி ஒரு பூவைப் போல் மலர்ச்சியோடிருப்பது என்று தெரியவில்லை! என்று வருந்துபவரா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஜென் கவிதைகளைப் படியுங்கள், ஜென் கவிதைகளாய் மாறுங்கள் என்பதுதான்.தியானம் செய்தியானத்தின் மொழி மவுனம். உள்ளார்ந்த கவிதையின் மொழியும் மவுனம் தான். ஜென் என்கிற சீனச்சொல்லின் பொருள் தியானம் செய் என்பதாகும். எது தியானம் என்ற கேள்வியின் வேரில்தான் ஆயிரமாயிரம் ஜென் கவிதைகள் பிறக்கின்றன. சிந்தனை அற்ற நிலையை ஜென் தத்துவம் போதிக்கிறது. அதிகம் பேசாத மவுன நிலையில் நிலைகொண்டு தன்னிலிருந்து தன்னைப் பார்ப்பதால் ஜென் கவிதைகள் நம்மை வெகு இலகுவாக மாற்றுகின்றன.ஜென் கவிதைகள் நெகிழ் மனதின் நெருக்க வெளிப்பாடுகள். சப்தமில்லாமல் எப்படி புல்நிறை அடர்வனத்தை தன் வாயால் வெட்டுக்கிளி வெட்டித்தள்ளுகிறதோ அதேபோல் ஜென் கவிதைகள் கவலைப்படாமல் காலத்தைக் கத்தரித்துப் புறந்தள்ளுகின்றன. கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? என்கிற கேள்வியை நம் முன் கேட்டு நம்மை நிமிர்ந்து நிற்கச்செய்கின்றன. என்றோ பார்த்ததை இன்று பார்க்கும் கவிக்கண்ணோடு காலத்தைக் கழித்து காலமற்றதாக அவை வெளிப்படுத்துகின்றன.இரங்கலும் உறங்கலும் இல்லா மகிழ்ச்சி நிமிடங்களை அவை நமக்குத் தந்து வாழ்வைக் கொண்டாடச் சொல்கின்றன. தேவையில்லாமல் ஏன் ஒன்றைத் தேடவேண்டும் என்கிற கேள்வியை ஜென்கவிதைகள் எழுப்புகின்றன.

பற்றற்ற நிலை

எதுவும் என்னுடையதில்லை என்கிற பற்றற்ற நிலையை ஜென் கவிதைகள் உணர்த்துகின்றன. ஜென் கவிதைகளில் அடிக்கடிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, பூச்சி என்பதையும் தாண்டி இன்னொரு பொருளைத் தரும் குறியீடாய் மாறுகிறது. ஜென் கவிதைகள் எதையும் புனிதப்படுத்தாமல் எல்லாவற்றையும் வெகுஇயல்பாகக் காட்டுகின்றன. ஹுயூட்டி என்கிற ஜென்குரு கிராமத்திற்குள் நுழைகிறார், அவர் முகத்தில் எப்போதும் உற்சாகம், தோளில் ஒரு சாக்கு தொங்குகிறது.குழந்தைக்கு இனிப்பை வாரிவழங்குகிறார். அவை மகிழ்வோடு அவரைச் சுற்றிநின்று ஆடுகின்றன, அவரும் ஆடுகிறார், பாடுகிறார். அப்போது அந்த வழியாக வந்த என்பனின் என்கிற மற்றொரு ஜென் குரு, ஜென் என்றால் என்ன என்று அவரிடம் கேட்கிறார்.ஏதும் பேசாத ஹுயூட்டி தன் தோளில் மாட்டியிருந்த காலிச் சாக்கினைக் கீழே தவறவிடுகிறார். சுமையைக் கீழே போட்டுவிட்டுச் சுதந்திரமாய் நட என்பதுதான் ஜென் தத்துவம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தார்.
போதிதர்மர்

மிகப்பெரிய ஞானியான போதிதர்மர் காஞ்சி புரத்திலிருந்து சீனா செல்கிறார். அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த மாமன்னர் ஊடியைச் சந்திக்கிறார். மன்னருக்கும் போதிதர்மருக்கும் இடையே தத்துவம் குறித்த உரையாடல் நிகழ்கிறது. போதி தர்மரைப் பார்த்து, “ இந்த உலகில் நீங்கள் கண்ட மிகப்பெரிய உண்மை எது?” என மன்னர் கேட்கிறார். உடன் போதிதர்மர் சொல்கிறார், “ இந்த உலகில் இருப்பவை எல்லாம் ஒன்றுமற்ற சூனியம்தான். மற்றபடி உயரிய உண்மை என்று ஒன்றும் இல்லை” என்கிறார். மன்னர் அதிசயித்துப் போகிறார். இந்த உலகில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால் ஒன்றுமில்லாததற்கு ஏன் நான் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் எனும் வினா எழுகிறது. அனுபவம் ஒன்றுதான் நம் ஆசான். பட்டுத் தெரிந்துகொள்ளும் அறிவு இந்த உலகம் விட்டு நாம் விடுதலையாகும் வரை நம்மை வழிநடத்துகிறது. உலகின் எல்லாக் குளங்களிலும் ஒரே நிலவுதான் மிதந்துகொண்டே இருக்கிறது நாம் தான் வேறுவேறு மனிதர்களாக இருந்து அந்த அழகான நிலவை ரசிக்கத் தவறுகிறோம்.“ஒரு மழைத்துளி மேல் விழுந்து கொண்டிருக்கிறது இன்னொரு மழைத்துளி” என்பது ஜென் கவிஞர் பாஷோவின் அழகான ஜென்கவிதை.இயற்கை ஜென் கவிதைகளின் இலகுவான இதயம். இயற்கையைக் காத்தல் இன்னொரு தியானம். “கொஞ்சம் தினை சிந்து/ குருவியாவாய்/ கொஞ்சநேரமேனும்” என்று சொல்ல ஜென் கவிதைகளால் முடிகிறது.

சும்மா இருத்தல்

பட்டினத்தாரும், அகப்பேய் சித்தரும், அருணகிரிநாதரும் சொன்ன சும்மாவை “சும்மா இருக்கும் சுகம்” என்று திருவருட்பா மூலம் நாம் உள்வாங்கிக்கொண்டோம். சும்மா என்பது வேலை செய்யாமல் இருத்தல் என்கிற பொருளில் நாம் புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் சும்மா என்பது அதிராமல் ஒலியற்றிருத்தல் என்ற மற்றொரு உட்பொருளும் உண்டு. சொல்லற்றிருக்கும் மவுன நிலையை ஜென் தத்துவமும் ஜென் கவிதைகளும் முன்வைக்கின்றன. ஏற்கனவே மரபு சார்ந்து மனம் வரைந்து வைத்திருக்கும் பிம்பங்களோடு ஜென் கவிதைகளை ரசிக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது. ஒன்றை இன்னொன்றாக மாற்றி ஜென்கவிதைகள் உணரவைக்கின்றன.எளிய வாழ்க்கை முறையான ஜென், தத்துவமாக வந்தபோது புரிதல் குறைபாடு ஏற்பட்டது. அறிவுக்கும் விவாதத்திற்கும் எட்டாத ஞானத்தைக் குருவின் துணையோடு பெறும் வழியை ஜென் காட்டுகிறது. தண்ணீரில் விழுந்த எண்ணெய்த்துளி நீருக்குள் வரையும் பரவும் ஓவியமாய் மாறுவது மாதிரி ஜென் கவிதைகள் படிக்கும் வாசகர் மனதில் இன்னொரு விசித்திர சித்திரத்தை தன் வரிகளால் வரைகின்றன. ஜென் கவிதைகள் காலத்தைக் காலமாகச் செய்கின்றன.“மிதக்கிறது காலம் கண்முன்னேதண்ணீரில் மூழ்கிச் செத்தஏதோவொன்றாய்” என்ற கவிதையைச் சொல்லலாம்.
புரிதல்

அவிழ்க்க முடியாத அனுபவ முடிச்சுகள் ஜென் கவிதைகளில் உண்டு. எந்தப் பொதுமை வரையறைகளுக்குள்ளும் அக் கவிதைகளை அடக்கிவிடமுடியாது. சடங்குகளையும் மந்திரங்களையும் கடந்த தத்துவ மரபாக ஜப்பானிலும் சீனாவிலும் அறிமுகமான ஜென்தத்துவம் தமிழ்க் கவிதைகளில் அவரவர் புரிதலுக்கேற்ப வேற்றுருக் கொண்டதே உண்மை. தன்னை உணர்தலும் தன் வாழ்வை மிக அழகாக வாழ்வதையும் ஜென் கவிதைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.பொருள் பொதிந்த சொற்காட்டில் ஜென்பூக்கள் கவிதைகளாகப் புதுப் பிறப்பெடுக்கின்றன. புறஉலகைப் புறந்தள்ளி அகஉலகு நோக்கி அவை வாசகரை அழைத்துச் செல்கின்றன. “எப்போதும் தனிமைதான்/ தலைமேல்/ நிலவாய்” பாசிக்குளம் பழைய நினைவுகளுக்குள் வழுக்கி விழவைப்பதைப் போல் ஜென்கவிதைகளின் முந்தைய வரிகள் அடுத்தடுத்த வரிகளுக்குள் வழுக்கி விழவைகின்றன.கருஞ்சிலையின் ஓரத்தில் கற்பூரவெளிச்சம் படும் கணத்தில் அந்தச் சிற்பம் எவ்வளவு அழகாக இருக்குமோ அதேபோல் ஜென்கவிதைகளின் சில அபூர்வ வரிகள் அக்கவிதைதரும் முழுஅனுபவத்தைத் தரிசிக்க வைக்கின்றன. திறந்த கதவைத் தன் மாயக்கரங்களால் அறைந்து சார்த்தி மூடிவிடுகிற காற்றைப் போல் சுகஅனுபவத்தையும் அதிர்வனுபவத்தையும் ஜென் கவிதைகள் ஒருசேரத் தருகின்றன. கால் நனைக்கப் பயப்படும் குழந்தையின் காலுக்குக் கீழே தானே வலியச் சென்று மெதுவாகப் பரவுகிற பண்பட்ட கடல்போல் அனுபவ முரணால் ஒன்று சேரமறுக்கும் வாசகர் மனதில், மெல்லொலி எழுப்பி ஜென் கவிதைகள் மெல்ல நுழைகின்றன.

மனம் எளிதாகும்
எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியுடன் செய்யுங்கள், கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே! என்று கீதையில் சொன்னபடி. உங்கள் செயல்களை உற்றுக்கவனியுங்கள், நாமே நமக்கு வேடிக்கையாகத் தெரியும்.மனம் இலகுவாகும். வீட்டை பூட்டியபின் பூட்டை இழுத்து இழுத்துபார்க்கத் தோன்றாது. நம்மையே நாம் நொந்துகொள்வது நின்றுபோகும். யாரையும் யாரும் பின்பற்ற வேண்டாம், நம் வாழ்வை நாம் வாழ்ந்தால் போதும். நாம் பெற்றுக்கொள்வதற்கு வரவில்லை, மாறாக நம் தவறுகளிலிருந்து நாம் நம் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு வந்திருக்கிறோம். எல்லாம் தெரியும் என்பது எப்படி பொய்யோ நமக்கு எதுவும் தெரியாது என்பதும் பொய்யே. நாம் செய்யும் செயலே நமக்கான நிம்மதி தரும் தியானமாய் அமைகிறது. கண்களை மூடிக் கொண்டு பாருங்கள் நாமே நமக்கு அற்புதமாய் தெரிவோம். ஒளியைத் தேடி ஓடிப் பயனில்லை,ஒளி நமக்குள் இருக்கிறது. சின்ன சின்ன செயல்களுக்கு வருந்துவதை விட்டுத் தள்ளுங்கள், சொன்ன சொற்களுக்கு வருந்தி வாழ்வை வீணாக்காதீர்கள், சொல்லும் சொற்களில் கவனமாய் இருங்கள்.ஒரு கோப்பைத் தேநீரின் அத்தனைத் துளிகளையும் ரசித்து அருந்துதல்போல வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து நகர்த்த ஜென் கவிதைகள் கற்றுத்தருகின்றன மவுனம் எனும் ஆழமொழியால். ஜென் கவிதைகளைப் போல் இருந்தால் மனம் எப்போதும் லேசாகவே இருக்கும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கான வாய்ப்பு என்று தெளிவாகப் புரியும்.எல்லாவற்றையும் ரசிக்கப் பிடிக்கும், நம்மையே நமக்குப் பிடிக்கும்.சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறை தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிதிருநெல்வேலி 99521 40275வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X