விழித்தெழு தோழி| Dinamalar

விழித்தெழு தோழி

Updated : ஜூன் 01, 2018 | Added : மே 31, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 விழித்தெழு தோழி

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்' என்று கோடிட்டு காட்டிச்சென்றான் பாரதி. விந்தை மனிதர்கள் யாரும் தலை கவிழவில்லை; மாறாக தலை நிமிர்ந்து நின்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது அந்த கூட்டம். விதவிதமான விந்தைகளை பயன்படுத்தி நம் மீதான அத்துமீறல்களையும், அடக்குமுறைகளையும் ஏவிவிட்டு ஆனந்தக் கூத்தாடி கொண்டுஇருக்கின்றனர். இன்று பெண்களின் உயிரைக்கூட துச்சமாக மதிக்கும் மதிகெட்ட சமூகத்தில் நம் பாதை பயணித்துக்கொண்டிருக்கிறது. அடக்கி ஆள நினைத்த ஆணாதிக்க சமூகம் விண்ணைதொடும் பெண்மையை நினைத்து பெருமூச்சு விடுகிறது. அத்துமீறலை அவிழ்த்துவிட்டு ஆறுதல்படுத்திக் கொள்கிறது.பெண்களின் மீதான வன்மங்களும் வன்முறைகளும் வரலாற்றுக்காலம் முதல் தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. காலத்திற்கு ஏற்ப, நாகரீக வளர்ச்சியின் துணை கொண்டு வன்மங்களின் வடிவங்கள் மாற்றம் பெற்று இருக்கிறதே தவிர அவை குறைந்தபாடில்லை. ஆம் தோழிகளே, ஒரு காலத்தில் கள்ளிப்பாலுக்கு இரையான பெண் குழந்தைகள் இன்றைக்கு கருவிலேயே அழிக்கும் மாத்திரை வடிவங்களாகிவிட்டது. ஸ்டவ் அடுப்பு வெடித்து இறந்துபோன பெண்கள் இன்று காஸ் வெடித்து சிதறிப்போகிறார்கள்.மண்ணெண்ணெய்க்கு பலியான மங்கைகள் இன்றைக்கு பெட்ரோலுக்கும், ஆசிட் வீச்சிற்கும் ஆளாகி போகிறார்கள். ஆண்களின் ஆபாச வார்த்தைகளுக்கு கூச்சப்பட்டு வாழ்ந்தனர் பெண்கள். இன்றைக்கு நிர்வாண படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்து சாகடித்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்போது சொல்லுங்கள் தோழிகளே... விந்தை மனிதன் தலை கவிழ்ந்தானா? இல்லை விதவிதமான விந்தைகளை உருவாக்கி வன்மங்களின் வடிவங்களை மாற்றி பெண் இனத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறானா?ஒரு தலைக்காதல்:'மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்'
என்றார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, ஆசைக்கு ஒரு பெண் என்று பழமொழி சொல்லி வைத்த நம் சமூகம், இப்படி பெற்று வளர்த்த ஆசை மகளை ஒருதலைக்காதல் என்ற எமனுக்கு அள்ளிக்கொடுத்து அலறித்துடிக்கும் தாயை தேற்றுவது யார்? பத்து மாதம் சுமந்த தாயின் கருவறை கல்லறையாக போக காரணம் யார்? பெண் குழந்தை பெற்றது குற்றமா, இல்லை பெண்களை வாழவிடாமல் வழியனுப்பும் ஆணாதிக்க சமூகத்தின் மீது குற்றமா? பெண் என்பவள் இளகிய மனம் படைத்தவள், இரக்க குணம் கொண்டவள், தன் உடம்பில் ஓடும் உதிரத்தை கொடுத்து உயிர் காப்பவள்.ஆனால் இன்று உயிரை பலிகொடுக்கும் 'பலி ஆடுகளாக' இந்த சமுதாயம் உருமாற்றிவிட்டது. ஒரு பெண் தான் நினைப்பதை அடையமுடியவில்லை. தன் பயணப்பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. பாதையின் குறுக்கே பல ஆதிக்க கூட்டங்கள் வழிமறித்து தன் ஆசைகளையும், ஏக்கங்களையும் திணிக்கிறது. ஒத்துக்கொண்டால் உயிர் நமக்கு, இல்லை என்றால் உயிர் எமனுக்கு என்ற மிரட்டலும், உருட்டலும் பெண்களை நிலைகுலைய செய்யும் காரணிகளாக இன்றைக்கு பெண் சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.சமூகத்தின் ஒவ்வொருதளத்திலும் இது போன்ற அசிங்கத்தையும், அவமானத்தையும் பெண் சமூகம் அனுபவித்து வருகிறது.சமூக வலைதளங்கள்அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் உருவாகும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் பெண்களை தாக்கும் ஆயுதங்களாகி விட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நகர்விலும் பல்வேறு இன்னல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வரும் வர்க்கமாகவே பெண் இனம் இருந்து வருகிறது.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களும், அலைபேசியும், இணையமும் நிகழ்கால பேராபத்துக்களின் வரவுகளாகும். முகம் தெரியாத நபர்கள் முகநுாலில் உறவு கொண்டாடி, ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிய வைத்து பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர்.இதே போல வாட்ஸ்அப், டுவிட்டரில் பெண்களின் அந்தரங்கங்களை பதிவிட்டு, ஆபாசமாக சித்தரித்து பெண்மையை சீரழிக்கும் நிகழ்வுகளும் அண்மை காலங்களில் அரங்கேறி வருகிறது. யாரென்றே தெரியாத அலைபேசி அழைப்புகள், ஆபாச பேச்சுக்கள் பெண் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் நிகழ்கால கொடுமை. குளியலறையில் கேமரா பொருத்திவைத்து அதனை படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கயவர்கள் பெருகி விட்டனர். தன்னை பெற்றவளும், தன் உடன் பிறந்தவளும் ஒரு பெண் என்பதனை மறந்து இது போன்ற வெட்கக்கேடான செயலை செய்யும் ஆதிக்க ஆண் வர்க்கத்திடம் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இழந்தது போதும்அன்புத்தோழிகளே, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொன்றையும் இழந்து வருகிறோம். கல்யாணம் பேசினால் தட்சணை கொடுத்து சீர்வரிசையை விலையாக கொடுக்கிறோம். எதிர்த்து பேசினால் உயிரினை இழக்கிறோம். கழுத்தில் நகை போட்டு ரோட்டில் நடந்துசென்றால் பொருளை இழக்கிறோம். காமப்போதை ஆடவனின் கண்ணில்பட்டால் கற்பை இழக்கிறோம். ஒருதலைக்காதலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரை விலையாக கொடுக்கிறோம். பணிபுரியும் இடங்களில் அடிபணிந்து போகவில்லை என்றால் அதிகாரத்தை இழக்கிறோம். கணவனின் காலுக்கு கீழேவாழாவிட்டால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழக்கிறோம். இப்படித்தான் தோழிகளே பெண் எனும் மைதானத்தில் ஆடவன் எனும் ஆதிக்க சமூகம் விளையாடிக் கொண்டிருக்கிறது.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதனை ஏட்டில் மட்டும் தான் படித்துக்கொள்ள முடியும். நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும். மண்ணில் ஆரம்பித்து விண்ணை தொட்டுவிட்டோம். ஆரம்பக்கல்வியில் துவங்கி ஆராய்ச்சி வரை சென்றுவிட்டோம். அடுப்படி தாண்டி அரசின் அதிகார பதவியில் அமர்ந்துவிட்டோம். இத்தனை உச்சத்தை தொட்ட நமக்கு ஆடவனின் அதிகார போதைக்கு ஊறுகாயாக இருப்பதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்பதே நிகழ்கால பெண் சமூகத்தின் ஓராயிரம் கேள்விகள்.தாய்வழிச் சமூகத்தையும், தாய்தெய்வ வழிபாட்டையும் அறிமுகம் செய்தது இந்த மண்ணில் தான். பெண்மையின் அன்பையும், அடையாளத்தையும் சுட்டிக்காட்டியதும் இந்த மண்தான். இன்று கழுத்தில் கிடக்கும் தாலியை கூட அறுத்துக்கொண்டு ஓடுவதும், ஆள் அடையாளம் தெரிந்துவிட்டால் கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதும் இந்த மண்ணில் தான்.குற்றங்களும், வன்மங்களும் நிறைந்த இந்த சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன் அடிப்படை வாழ்வியலுக்காக அல்லல்படுகிறாள். அதிகார வளையத்திற்குள் சிக்கி அணுஅணுவாய் தன்னை உருக்கிக்கொள்கிறாள். ஆபாசத்திலிருந்து தன்னை காத்துக்கொள்ள போராடுகிறாள். பெண்ணே... நான்கு திசைகளிலிருந்தும் அம்புகள் வீசப்படுகிறது. துணிவோடு எதிர்கொள், உளியின் வலியில் தான் கல்லானது சிற்பமாகிறது. நீ விடியலுக்காக காத்திருக்க வேண்டாம். அன்புத்தோழியே விழித்தெழு! விடியல் உனக்காக காத்திருக்கிறது.-எம்.ஜெயமணிஉதவி பேராசிரியர்ராமசாமி தமிழ் கல்லுாரிகாரைக்குடி. 84899 85231

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X