'போர்வையாளர்களை' விரட்டுங்கள் இளைஞர்களே!

Added : ஜூன் 02, 2018 | கருத்துகள் (8) | |
Advertisement
ஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியாக நடந்த போராட்டங்கள், வன்முறை பக்கம், யாரால், எதற்காக திசை திருப்பி விடப்பட்டது என்பதை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அனைத்து பிரச்னைகளிலும், தமிழக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியாக, தீர்வு கண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இளைஞர்களின் அமைதியான
'போர்வையாளர்களை' விரட்டுங்கள் இளைஞர்களே!

ஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியாக நடந்த போராட்டங்கள், வன்முறை பக்கம், யாரால், எதற்காக திசை திருப்பி விடப்பட்டது என்பதை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட அனைத்து பிரச்னைகளிலும், தமிழக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்ட ரீதியாக, தீர்வு கண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இளைஞர்களின் அமைதியான போராட்டத்தை கண்டு, நாடே மெச்சியது; அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு நடத்த, அனுமதியும் கிடைத்தது. அதன் பிறகும், போராட்டம் ஏன் தொடர்ந்தது... யாரால், எதற்காக தொடர்ந்து நடத்தப்படுகிறது? கோரிக்கை நிறைவேறிய பிறகும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட அவசியம் என்ன... அதுவும், ஆபாசமான வார்த்தைகளால் கோஷம். இது தான், தமிழர் பாரம்பரிய பண்பாடா? காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசு சரியான பாதையில் திட்டமிட்டு முன்னேறியது.அரசாணை வெளியீடு முதல், உச்ச நீதிமன்ற உத்தரவு வரை, தமிழகத்திற்கு படிப்படியாக நியாயம் கிடைத்துள்ளது. 'மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள், தேசிய சொத்து; இதற்கு, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அதற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்' என்பது உட்பட, காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கியுள்ளது.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தது வரை, காவிரி விவகாரம் சட்ட ரீதியாக முன்னெடுத்து செல்லப்பட்டது; மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டங்கள் நடந்தன.அவர் மறைவுக்கு பின், சமூக விரோதிகளுக்கும், தமிழ், 'போர்வையாளர்களுக்கும்' குளிர் விட்டு போனது. எதற்கெடுத்தாலும் போராட்டம்... எடுத்ததற்கெல்லாம் வன்முறை என, தமிழகத்தின் அமைதியை குலைக்கின்றனர். காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழக அரசின் சட்ட ரீதியிலான போராட்டம், குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்; அனைத்து கட்சி தலைவர்களும் இணைந்து, ஆலோசனை செய்து, அரசுக்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் இன 'போர்வையாளர்கள்' செய்தது என்ன... மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக, சமூக வலைதளங்களில், தவறான கருத்துகளை பரவ விட்டனர்; சாலை மறியலில் ஈடுபட்டு, மக்களை திண்டாட செய்தது போன்ற, 'நற்காரியங்களை' செய்தனர். பிரதமருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியோர், இப்போது வேறு விவகாரங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில், தொழில் துறைக்கு முக்கிய பங்குள்ளது. வேலை வாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவை, தொழிற்சாலைகளால் கிடைக்கின்றன. வீட்டில் சமைப்பது முதல், பெரிய ஆலை வரை, மாசு உருவாவது தவிர்க்க இயலாதது. மாசை, இயன்ற அளவு கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை, தொழிற்சாலைகளில் பின்பற்ற, அரசு கண்காணிக்க வேண்டும். மாசு ஏற்படுகிறது என்பதற்காக, தொழிற்சாலைகளே வேண்டாம் என்பது, தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்காது. ஊருக்கு நடுவே, தொழிற்சாலை அமைய, சட்டம் அனுமதிக்கவில்லை. குடியிருப்புகள் இல்லாத இடத்தில் தான், தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், தொழிற்சாலை அமைந்த பின், அதை சுற்றி, ஊர் உருவாகுவதை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் யாரும் மறுக்க முடியாது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம், 99 நாட்கள் அமைதியாக நடந்தது. மாநில அரசும், 'ஆலை இயங்க அனுமதி வழங்க மாட்டோம்' என, அறிவித்தது. ஆலை நிர்வாகம் தொடுத்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசு, சட்ட நடவடிக்கையில் இறங்கியது. மறுபுறம், துாத்துக்குடி மக்களின் போராட்டமும், அமைதியாக நடந்து வந்தது. 144 தடை உத்தரவு இருந்த போது, அந்த தடையை மீறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல வேண்டிய அவசியம் என்ன... அதற்கு, பொதுமக்களை துாண்டியோர் யார்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது... அதை செய்தது யார்... காவல் துறை மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் வாகனங்கள் தீ வைத்து எரிக்க, காரணம் என்ன? துாத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் பொதுமக்கள், 13 பேர், போலீசின் துப்பாக்கி சூட்டில் பலியானது, வருத்தம் தரும் சம்பவம் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தற்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு, தமிழக அரசு, 'சீல்' வைத்து விட்டது. சமூக விரோதிகள் துாண்டி விட்ட வன்முறையால், இழந்த உயிர்களை, மீட்க முடியுமா... போராட துாண்டியோர், அந்த உயிர்களை திரும்ப பெற்றுத் தருவரா? சாலையில் நடத்தப்படும் போராட்டங்களில், பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்; போர்வையாளரும், அரசியல் தலைவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப்படுவதில்லை என்பதை, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவகாரம், மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்றால், அதை எப்படி சரி செய்ய வேண்டும் என, சட்டத்தை அணுக, போர்வையாளர்களும், அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொடுப்பதில்லை. நீதிமன்றத்தில், எவ்வாறு முறையிடுவது, அரசிடம் எப்படி கோரிக்கை வைப்பது என்பது, போர்வையாளர்களுக்கு தெரியாது. தெரிந்தாலும், அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம், தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும்; தமிழகத்தை பதட்டமான சூழலில் வைத்திருக்க வேண்டும். அதில், தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பது தான். இதை இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல், போர்வையாளர்களின் சதி வலையில் சிக்கி, வன்முறையை கையில் எடுத்து விடுகின்றனர். ஜல்லிக்கட்டு, நெடுவாசல், காவிரி, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு, முடிவு கட்டியாகி விட்டது. ஆனாலும், போர்வையாளர்கள், தமிழகத்தை அமைதியாக இருக்க விட மாட்டார்கள். அடுத்து, எதை ஊதி பெரிதாக்கலாம், எங்கு போராட்டம் நடத்தலாம், எத்தனை பேரை, பலி கொடுக்கலாம் என, சிந்தித்து கொண்டே இருப்பர். சிந்தனையை ஒரு நிலைப்படுத்த, பக்குவமில்லாத இளைஞர்களை குறிவைத்து, போர்வையாளர்கள் கும்பல் களமிறங்கியுள்ளது. அதற்காகவே, சமூக வலைதளங்களில், அவர்கள் ஆதிக்கத்தை அதிகரித்து வருகின்றனர். முதலில் சற்று கிண்டலான பதிவுகளை வெளியிடுவது; சற்றே அரசியல் வாடையுடன், அடுத்து, 'மீம்ஸ்'களை வெளியிடுவது; அதன் பின், தங்கள் குரோத எண்ணங்களை வரைபடங்களாகவும், ஆவேச பேச்சுகளாகவும் வெளியிட்டு இளைஞர்களை தங்கள் வசப்படுத்து கின்றனர். 'மொபைல் போனில் வரும் எல்லாம் உண்மையே' என நம்பும், அப்பாவி மக்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், முகவரி கேட்டவர்களை, பிள்ளை பிடிக்க வந்த கும்பல் என கருதி, திருவண்ணாமலை அருகே சமீபத்தில் வேட்டையாடியது யாருக்கும் மறந்திருக்காது. அது போல, நம்முடனே காலம் காலமாக இருக்கும், நம் உணர்வு, உறவுகளுடன் கலந்திருப்பவர்களை, ஜாதி, மதம், இனம் என பிரித்து, வேறுபடுத்தி காட்டி, 'அவர்களை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் நாம் வளர முடியாது' என, துவேஷ பிரசாரம் செய்து வருபவர்களை, நம் இளைஞர்கள் எப்போது தான் அறிவரோ! இளைஞர்களை துாண்டி விட்டு, ஆட்சிக்கு எதிராக கோஷமிட செய்ய வேண்டும்; போலீசாரை தாக்க வேண்டும்; வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என, இளைஞர்களை துாண்டி விடும் போர்வையாளர்களால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானால், அவர்கள் தாங்கி பிடிப்பரா?

போர்வையாளர்களின் ஆசை வார்த்தைகளில் இளைஞர்கள் சிக்குவதற்கும் காரணம் இருக்கிறது... தங்களுக்கான தலைவர் யார் என, அவர்கள் தேடிக் கொண்டே இருக்கின்றனர்... அந்த தேடலில் உள்ள பக்குவமின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, போர்வையாளர்கள், தலைவர்களாக உருவெடுக்கின்றனர்.அப்படி உருவாகும் நபர்களை வளர்த்து விடுவதே, சில ஊடகங்கள் தான். பரபரப்பு செய்திகளுக்கு, 'ஆள் பிடிக்கும்' வேலையை தான், சில, 'டிவி' சேனல்கள் செய்து வருகின்றன. அவர்களுக்கு எளிதாக கிடைப்பது, தமிழ் இன போர்வையாளர்கள் தான்.'விவாதங்களில் காரசாரமாக பேசுவர்; புரியாத தகவல்களை சத்தமாக சொல்வர்; அதனால், தங்களின், டி.ஆர்.பி., ரேட்டிங் கூடும்' என, கருதும் சில, லவுட் ஸ்பீக்கர், 'டிவி'கள் தான், போர்வையாளர்களின் முகங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன. நாட்டை துண்டாட நினைக்கும் அந்த போர்வையாளர்களிடம், 'நீட்' என்பதற்கான விரிவாக்கம் என்ன என கேட்டால் தெரியாது; ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக போராடுவர்.காவிரி நதி நீர் வாரியத்திற்கும், ஆணையத்திற்கும் என்ன வேறுபாடு என, கேட்டால் தெரியாது. ஆனால், அதற்காக போராடுகிறோம் என, தமிழகத்தில் சாலை மறியல் செய்வர். சமீபத்தில், ஒரு அரைவேக்காடு தலைவர், 'எங்களின் போராட்டத்திற்கு பயந்து, விமானத்தில் பாதை மாறி பிரதமர் சென்றார்' என, ஆக்ரோஷமாக பேசினார். நம் தலையில், நாம் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.இன்னொருவர், 'என் அப்பத்தா விற்கும், ஊறுகாய் பொட்டலத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி போடுகின்றனர்' என்றார். எந்த அப்பத்தா, மாதம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறார் என, தெரியவில்லை. இப்படிப்பட்ட, தெளிவில்லாத பேர்வழிகளின் பின்னால், இளைஞர்கள் சிலர் செல்கின்றனர். அவர்களின் அர்த்தமில்லாத, ஆக்ரோஷமான பேச்சால், மதி மயங்கும் இளைஞர்கள், தங்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதுவரை எந்த தலைவரும், எவ்வளவு பெரிய பிரச்னைக்கும், தீக்குளித்து மாய்ந்து போனதில்லை என்பதை, இளைய சமுதாயம் இனி மேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த மோசடி தலைவர்கள், எங்கேயாவது தவறு நடந்தால், உடனே வெகுண்டெழுவதில்லை. தவறு செய்தவன் யார், எந்த ஜாதி, என்ன மதம் என, தெரிந்த பின் தான், போராட்டக் களத்திற்கு வருவர். எனவே, தங்களின் தலைவர் யார், அவரின் பின்னணி என்ன, அவர்களை இயக்குவது யார் என்பதை, இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தவறான சித்தாந்தத்தை, ஆக்ரோஷமாக பேசி, உணர்வை துாண்டி, இளைய சமுதாயத்தை, விட்டில் பூச்சிகளாக பலி வாங்கும், தமிழ் இன போர்வையாளர்களிடம் இருந்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.அதை ஊடகங்களும், இளைஞர்களின் பெற்றோரும் தான் செய்ய வேண்டும்!

- சி. கலாதம்பி,

சமூக ஆர்வலர்

இ - மெயில்: sureshmavin@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (8)

shanmugasundaram - Baltimore,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201801:19:16 IST Report Abuse
shanmugasundaram Dear Kalathambhi, Salute to your comments and the way of expression. You reflected my mind as it is. I completely agree with your points and share the same thoughts as well. My concern is why is that the truth-speakers or genuine well-wishers of people never say a word against the violence that was perpetrated by criminal in all these (otherwise peaceful) protests? When the perpetrators of crime are bold and in public as well as media and record their statements, those who knew that this wrong or abusive of emotion of misguided youths, are keeping silent and never say anything. One celebrity ed the mouth and said frankly what I meant, then the so called antinational elements started targeting the celebrity. The media seems to enjoy and take advantage of it. Someone should tie the bell to the nonsense cat. That is possible only when genuinely concerned people also become vocal. Just sharing my thoughts.
Rate this:
Cancel
faiz - colombo,இலங்கை
06-ஜூன்-201805:37:49 IST Report Abuse
faiz இதைத்தான் தர்ட்போதைய ஆட்சியில் இருக்கும் தலைவர்ஹளும் எதிர்கட்சியில் இருக்கும் போது பல பாமரார்ஹளை பலி கொடுத்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.. இது கமேற்சியால் (மனி மைண்டெட்) வேர்ல்ட் . இவ்ரகளுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் .
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
03-ஜூன்-201810:34:44 IST Report Abuse
shyamnats மிகவும் சரியான பதிவுகள். மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கும் தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, மக்களின் நிலையை உயர்த்த அவசியமான சிந்தனைகள். தனி மனிதர்களின் ஒழுக்கமும் தொலை நோக்கும் அவசியமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X