நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE