சென்னை - சேலம் இடையே, எட்டு வழிச்சாலை அமைக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டத்திற்கு, 296 ஏக்கர் வனப்பகுதி நிலங்களை பயன்படுத்த, கட்டுப்பாடுகளுடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது.சென்னையில் இருந்து சேலத்திற்கு, 277 கி.மீ., எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக, இச்சாலை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தச் சாலை திட்டம், தாம்பரம் - அரூர், அரூர் -- சேலம் என, இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடந்தது.இதன்படி, 277 கி.மீ., எட்டு வழிச்சாலை திட்டத்தில், 13 கி.மீ., வனப்பகுதி வாயிலாக செல்கிறது. இதற்காக, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில், 296 ஏக்கர் வனப்பகுதி நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது.இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஆய்வுக்குழு, சமீபத்தில் பரிசீலித்தது. பின், சுற்றுச்சூழல் துறை அளித்துள்ள பரிந்துரைகள்: முழுமையாக ஆய்வுக்கு பின், சில நிபந்தனைகள் அடிப்படையில், இத்திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்க, பரிந்துரைக்கப்படுகிறது இத்திட்டத்தில், கல்வராயன் குன்றுகளை ஒட்டிய வனப்பகுதி வழித்தடத்தை, மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் இந்த வழித்தடத்தில் ஏரிகள், குளம் போன்ற நீர் நிலைகள் பாதிக்காத வகையில், நில எடுப்பு திட்டத்தில், உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் வனவிலங்குகளின் வழித்தடத்துக்கு பாதிப்பில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக, தலைமை வன விலங்கு பாதுகாவலரின் தடையின்மை சான்று பெற வேண்டும்.
இவ்வாறு, சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement