பெரிய ஆபீசருக்கு விஜிலென்ஸ் வச்ச பொறி... தெரியாமல் மாறிப்போயிருச்சு குறி!| Dinamalar

பெரிய ஆபீசருக்கு விஜிலென்ஸ் வச்ச பொறி... தெரியாமல் மாறிப்போயிருச்சு குறி!

Added : ஜூன் 05, 2018
Share
தொண்டாமுத்துார் அருகில், இயற்கை விவசாயம் செய்யும் தங்களது தோழியின் பண்ணைக்குப் போகலாம் என்று, சித்ராவும், மித்ராவும் திட்டமிட்டிருந்தனர். துங்கபத்ரா, காருடன் வந்து சேர, மூவரும் பயணத்தைத் துவக்கினர். மித்ராதான் அரட்டையை ஆரம்பித்தாள்...''என்னக்கா... நம்மூர் விஜிலென்ஸ்க்கு, திடீர்னு வேகம் வந்துருச்சு. துணை வேந்தர், அக்ரி ஆபீசர், கார்ப்பரேஷன்னு அடுத்தடுத்து, வரிசையா
பெரிய ஆபீசருக்கு விஜிலென்ஸ் வச்ச பொறி... தெரியாமல் மாறிப்போயிருச்சு குறி!

தொண்டாமுத்துார் அருகில், இயற்கை விவசாயம் செய்யும் தங்களது தோழியின் பண்ணைக்குப் போகலாம் என்று, சித்ராவும், மித்ராவும் திட்டமிட்டிருந்தனர். துங்கபத்ரா, காருடன் வந்து சேர, மூவரும் பயணத்தைத் துவக்கினர். மித்ராதான் அரட்டையை ஆரம்பித்தாள்...''என்னக்கா... நம்மூர் விஜிலென்ஸ்க்கு, திடீர்னு வேகம் வந்துருச்சு. துணை வேந்தர், அக்ரி ஆபீசர், கார்ப்பரேஷன்னு அடுத்தடுத்து, வரிசையா பல பேரை துாக்கிட்டு இருக்காங்க!''''ஏன்... கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரையே துாக்குனாங்களே... உண்மைய சொல்றதா இருந்தா, துாக்க வேண்டிய ஆளுங்க, இன்னமும் நிறைய்யப்பேரு இருக்காங்க. ஆனா, முன்னைக்கு இப்ப பரவாயில்லைன்னு தான் சொல்லணும்!'' என்றாள் சித்ரா.''ஆனா, கார்ப்பரேஷன்ல அவுங்க வச்ச பொறி தப்பிருச்சுக்கா... வடக்கு மண்டல ஆபீஸ்ல, ரெவின்யூவைப் பாக்குற ஒரு அம்மாளை பிடிக்கிறது தான் அவுங்களோட பிளான்... அந்தம்மா மேல தான் ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' வந்திருக்கு. எந்த புது கட்டடம்னாலும் வரி புத்தகம் போட, லட்சங்கள்ல தான் பேரம் பேசுவாங்களாம். கேட்டா, 'நான் மெயின் ஆபீஸ் வரைக்கும் பங்கு கொடுக்கணும்'னு சொல்லுவாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்ப மாட்டுன லேடி இல்லியா அவுங்க?'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.''ம்ஹூம்... பேரம் பேசுற பெரிய லேடி ஆபீசரைத்தான் பிடிக்கணும்னு வெள்ளிக்கிழமை போயிருக்காங்க. அன்னிக்கு, மெயின் ஆபீஸ்ல முக்கிய மீட்டிங்னு அவுங்க போயிட்டாங்களாம். சனிக்கிழமை 'லீவு' அன்னிக்கு, பில் கலெக்டரைக் கூப்பிட்டு, ஆபீஸ் போகச் சொல்லிருக்காங்க. அவுங்க, 'துணி துவைக்கணும்; வர முடியாது'ன்னு சொன்னதுக்கு, அந்த அம்மாதான், 'போயே ஆகணும்; ஒரு ஆள் ஒரு அமவுன்ட் கொடுப்பாரு; வாங்கி வை'ன்னு ஆர்டர் போட்ருக்கு,'' என்றாள் மித்ரா.''அப்பிடின்னா, அந்தம்மா மேல நடவடிக்கை இல்லியா?'' என்று கேட்டாள் சித்ரா.''நேரடியா மாட்டுனதால, பில் கலெக்டரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாங்க. கமிஷனர் வந்தா தான், அவுங்க மேல என்ன நடவடிக்கை எடுக்குறாங்கன்னு தெரியும். அந்தம்மாவுக்கு, 'ரெட்போர்ட் மினிஸ்டர்' சப்போர்ட் பலமா இருக்குறதால, அவரை யாராலயும் அசைக்க முடியாதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.கார் ஓட்டிக் கொண்டிருந்த பத்ராவுக்கு அலைபேசி அழைப்பு வர, ''என்னது... காலா டிக்கெட்டா... எனக்கு காலாவையும் தெரியாது; காலா அம்மாவையும் தெரியாது,'' என்றாள். சித்ரா தொடர்ந்தாள்...''கார்ப்பரேஷன்ல இப்பிடி நாலஞ்சு பேரை விஜிலென்ஸ்ல துாக்கி, 'சஸ்பெண்ட்' பண்ணுனா, கொஞ்ச நாளைக்காவது, 'கரப்ஷன்' குறையும்!''''அதெல்லாம் நடக்காது... கார்ப்பரேஷன்னாலே, கரப்ஷன் தான். ரெவின்யூவை கவனிச்சிட்டு இருந்த ஒருத்தரை, வடக்கு மண்டலத்துக்கு முக்கியப் பொறுப்புல போட்டாங்களே... அவரு இன்னமும், முக்கியமான கோப்புகள்ல, பழைய தேதி போட்டு கையெழுத்துப் போடுறாராம். ஏ.ஆர்.ஓ.,க்கள் தான், இதுக்கு 'டீல்' பேசி, அவர்ட்ட கையெழுத்து வாங்கி, பெரிய 'அமவுன்ட்' பார்க்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்போ இருக்குற ஏ.சி.,ரெவின்யூ என்ன பண்றாராம்?'' என்று கேட்டாள் சித்ரா.''எல்லாம் ஒரே குரூப்பாம்... அதனால, அவரும் கண்டுக்கிறது இல்லையாம்!'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல எல்லா வேலையையும் ஒரே 'குரூப்'தான் எடுக்குது. வேற வேற கம்பெனி பேருல, மாத்தி மாத்தி 'டெண்டர்' எடுக்குறாங்களாம். ஒரு சில வேலைகளை செய்யாமலே, செஞ்சதா பல லட்ச ரூபா, பணம் எடுத்திருக்காங்க. இந்த 'லோக்கல் ஆடிட்' டிபார்ட்மென்ட் இருக்கா, இல்லையான்னே தெரியலை,'' என்றாள் சித்ரா.''நீ சொல்றது உண்மை தான்க்கா... இப்பல்லாம், எல்லாத்துலயும் கூட்டணி போட்டுத்தான், வசூலே நடக்குது. வ.உ.சி., 'பார்க்'ல இருக்குற, 150 தள்ளு வண்டிக் கடைகள் தான் இதுக்கு உதாரணம்,'' என்று நிறுத்தினாள் மித்ரா.''அதுக்கும், இதுக்கும் என்னடி சம்மந்தம்?'' என்றாள் பத்ரா.''அங்க இருக்குற, 150 கடைகள்லயும், 'எக்ஸ்' கவுன்சிலரோட ஹஸ்பெண்ட் தான், கடைக்கு நுாறு வீதமா வசூல் பண்றாராம். பெரும்பாலான நாளு, அவரே வருவாராம்; சில நாள்ல, ஆள் அனுப்புவாராம்... அது மட்டுமில்லாம, ஒரு கூட்டத்தோட வந்து, சாப்பிட்டு, காசு கொடுக்காமப் போயிருவாராம்,'' என்றாள் மித்ரா.''இதுல வேற யாரு கூட்டணி?'' என்று கேட்டாள் சித்ரா.''வேற யாரு... போலீஸ்காரங்க தான். அவுங்க பங்குக்கு, கடைக்கு 20 ரூபா வாங்குறாங்களாம். மொத்தமா வசூல் பண்ணிக் கொடுக்குற கடைக்காரரு, அன்னிக்கு மாமூல் தர வேண்டியதில்லையாம்!'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா... ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சுண்டல், சூப் விக்கிறவுங்ககிட்டயே, தினமும் 60 ரூபா வாங்குறாங்களாம்... வரவர அதுவும் சந்தை மாதிரி ஆயிட்டு இருக்கு,'' என்றாள் சித்ரா.''சிட்டிக்குள்ள அங்கங்க, புதுப்புது சந்தை உருவாகிட்டே இருக்கு. ஒவ்வொரு ஏரியாவிலயும், ஒவ்வொரு நாளு நடத்துறாங்க. ஊருக்குப் பொதுவா இருக்குற, பொது இடத்தை சுத்தம் பண்ணிக்கொடுத்து, ஆளுங்கட்சி 'எக்ஸ்' கவுன்சிலர்களும், வட்டம், பகுதிக்கழக நிர்வாகிகளும், போலீஸ்காரங்களுக்கு கடைக்கு 100ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வசூல் பண்றாங்க,'' என்றாள் மித்ரா.''ஏற்கனவே, 'ஆவின் பார்லர்'ங்கிற பேர்ல, பேக்கரிகளுக்கு எல்லாம் வேட்டு வச்சாங்க. இப்போ, சந்தைகளை வச்சு, சின்னச்சின்ன பல சரக்குக் கடை நடத்துற சிறு வியாபாரிகளுக்கு மொட்டை அடிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''கடைக்கு அட்வான்ஸ், வாடகை கொடுத்து, கரன்ட் பில், வரி கட்டுற வியாபாரிங்க, தலையில துண்டைப் போட்டு போக வேண்டியது தானா... வியாபாரிகள் அமைப்பெல்லாம் இதெல்லாம் எதிர்த்து போராட மாட்டாங்களா?'' என்று ஆதங்கத்தோடு பேசினாள் பத்ரா.''இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி சந்தைகள்லயும், டாஸ்மாக் சரக்கு விக்கிற 'இல்லீகல் பார்'கள்லயும் தான், கள்ள நோட்டு புழக்கம் அதிகமா இருக்காம். லேட்டஸ்ட்டா, ரெண்டாயிரம் ரூபா நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தவுங்களும், இப்பிடித்தான் பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து... இதுவரைக்கும் அஞ்சு கோடி ரூபாய்க்கு ஜெராக்ஸ் எடுத்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல மாத்திட்டாங்களாம்... இவ்ளோ 'பர்பெக்ட்'டா ஜெராக்ஸ் எடுக்கிறதுக்கு, வங்கதேசம் பார்டர்ல தான், வெள்ளைப்பேப்பர் வாங்கிருக்காங்களாம்... அதனால, பயங்கர வாதிகள் யாருக்காவது இதை 'சப்ளை' பண்ணுனாங்களான்னு கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு போலீஸ்காரங்க தீவிரமா விசாரிச்சிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.சற்று நேர அமைதிக்குப் பின், 'துங்கா! பாரஸ்ட் மேட்டர் ஒண்ணும் இல்லியா' என்று கேட்டாள் மித்ரா.''பெருசா இல்லை... நம்ம பாரஸ்ட் டிவிஷன்ல இருக்குற சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச்களுக்கு, புது ஜீப் கொடுத்து, 11 வருஷமாச்சாம். ஓட்டை உடைசலான அந்த வண்டிகளை வச்சு தான், யானை விரட்டுறது, களப்பணிக்குப் போறதுன்னு ஒப்பேத்துறாங்க. வருஷத்துக்கு, 20 பேராவது யானை மிதிச்சு சாகுறாங்க. ஆனா, பாரஸ்ட் டிபார்ட்மென்டை இந்த கவர்மென்ட்ல ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லை,'' என்றாள் துங்கபத்ரா.''பள்ளிக் கல்வித்துறை நிலைமையும் அப்பிடித்தான் இருக்கு. பில்டிங், வண்டிங்க எல்லாமே, அறுதப்பழசுல தான் ஓட்றாங்க. இதுல, ரெண்டா இருந்த கல்வி மாவட்டத்தை, நாலாக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''அதுலயும் ஒரு பிரச்னை கிளம்பிருக்கு... எங்களை எதுவுமே கேக்காம, கல்வி மாவட்டங்களைப் பிரிச்சிருக்காங்க. அதனால, எங்களைக் கேட்டு, மறுபடியும் ஏரியா பிரிக்கணும்னு டீச்சர்ஸ் கொந்தளிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஸ்கூலைப் பத்திப் பேசவும் இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு... ஒவ்வொரு பிரைவேட் ஸ்கூலும், வருஷா வருஷம், கார்ப்பரேஷன்ல சுகாதாரச்சான்று வாங்கணும்ல... அதுக்காக, ஒவ்வொரு சேனிட்டரி இன்ஸ்பெக்டருக்கும் ஒரு 'சீட்' கொடுப்பாங்க. இந்த வருஷம்... ஸ்கூல்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யச்சொல்லி மேலிடம் உத்தரவு வந்திருக்கிறதால, எங்களுக்கும் ஒரு 'சீட்' வேணும்னு ஏ.ஆர்.ஓ.,க்கள் கொடி துாக்கிருக்காங்க!'' என்றாள் சித்ரா.''பல ஸ்கூல்கள்ல மதிக்க மாட்டாங்களே?'' என்று கேட்டாள் மித்ரா.''மதிக்கலைன்னா, தாறுமாறா சொத்து வரி போடுவேன்னு மெரட்டுவாங்க; கொடுத்து தானே ஆகணும்!'' என்றாள் சித்ரா.அதை ஆமோதித்த மித்ரா, 'அக்கா! தாகமா இருக்கு. இளநீர் குடிக்கலாமா' என்று கேட்க, மரத்தடியில் இருந்த இளநீர்க் கடையில், வண்டியை ஓரம் கட்டினாள் துங்கபத்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X