மரம் -மனிதனின் மூன்றாவது கரம் : இன்று உலக சுற்றுச்சூழல் தினம்| Dinamalar

மரம் -மனிதனின் மூன்றாவது கரம் : இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

Added : ஜூன் 05, 2018
Advertisement

காலையில் எழுந்ததும் மரத்தின் முகத்தில் விழிப்பது மகிழ்ச்சியைத் தரும். ஒற்றைக் காலால் நின்று ஒவ்வொரு மரமும் 'என்னைப் பார் உன் ஆயுள் கூடும்' என்ற உண்மையை உரக்கச் சொல்கின்றன. மரங்களைப்பார்க்கும் போதும், மரங்களோடு பேசும் போதும் நாம் இளமையாகி விடுகிறோம். மரம் என்ற ஒற்றைச் சொல் பசுமையை, வளமையை, மனிதன் வாழ்க்கையைக் குறிக்கிறது.'மனம் போல் வாழ்வு' என்ற வாசகம் இன்று 'மரம் போல் வாழ்வு' என்றாகி வருகிறது. ஆம்! மரங்கள் பசுமையாக இருக்கும் போதெல்லாம் மனித வாழ்க்கை வளமையாக இருக்கிறது. தன் வீட்டைச் சுற்றி மரம் வைத்துஇருப்பவர் இந்த உலகின் மிகப் பெரும் செல்வந்தராக மாறிவிடுகிறார்.மரத்தைத் தேடி வரும் பறவைகள், தங்கள் மகிழ்ச்சியை ஒலி எழுப்பிச் சொல்கின்றன. வாகனங்களின் பேரொலியைக் கேட்டு காயம் பட்டுப்போன மனித மனத்தை மயிலிறகால் வருடுவது போல் வருடி, மனம் திருடுகின்றன பறவைகள். பறவைகளுக்கு மட்டுமல்ல, பல மனிதர்களுக்கும் மரங்கள்தான் வீடுகள்.பயணத்தை இனிமையாக்கும் 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்' என பாடலோடு ஒரு விளையாட்டு விளையாடி இருக்கிறோம். இருவர் எதிரெதிரே நின்று, இரண்டு கைகளையும் கோர்த்து தலைக்கு மேலே கோபுரம் போல் உயர்த்தி நிற்க, சிறுவர்கள் அவர்களிருவருக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒவ்வொருவராக நடந்து செல்வார்கள். சாலையின் இருபுறமும் நிற்கும் மரங்கள் தன் கிளைகரத்தால் கைகுலுக்கி, வெப்பத்தில்இருந்து நம்மைக் காப்பது, சிறுபருவ விளையாட்டை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கின்றன பூத்துக் குலுங்கும் மரங்கள். மணமக்களை பெரியோர்கள் பூக்கள் துாவி, 'வாழ்க பல்லாண்டு' என வாழ்த்துவதைப் போல, மரங்களடர்ந்த சாலையில் பயணம் செய்யும் போது நமது பயணம் சிறக்க பூக்களைத் துாவி வாழ்த்துகின்றன மரங்கள். காலையிலும் மாலையிலும் நடையாளர்களின் நண்பனாகவும், மதிய வேளையில் அன்னையாகவும் மாறிவிடுகிறது மரம்.உழைத்துக் களைத்துவருபவரின் உள்ளச் சோர்வையும், உடல் சோர்வையும் ஒரு நிமிடத்தில் நீக்கி, கட்டணமில்லா மருத்துவராக இருக்கின்றன மரங்கள். அன்னையின் அருமையை இல்லாத போதும், மரங்களின் அருமையை கோடையிலும் நாம் உணரலாம். வியர்த்து விறுவிறுத்து வருகின்ற போது, எங்கேனும் ஒரு மரம்இருக்காதா எனத் தேடி அலையும் நமது கண்கள். அப்போதுதான் மரத்தின் மாண்பினை நம் மனம் உணரும். அப்படி எங்கேனும் ஒரு மரம் தென்பட்டால், அந்த மரத்தின் நிழலில் ஒரு பெருங்கூட்டம் கூடி மகிழ்ந்து கொண்டிருக்கும்.மரங்களும் மாணவர்களும்மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வை முதலில் பள்ளி மாணவர்களிடம் இருந்து துவக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்களிடம் ஒரு ஓவியம் வரையச் சொன்னால், அவர்கள் உடனே வரைவது ஒரு மரமாகத்தான் இருக்கும். ஒரு இயற்கைக் காட்சி வரைந்து வா என்றுசொன்னால், ஒரு வீட்டை வரைந்து அதன் இருபுறமும் மரங்களை வரைந்து, வீட்டின் முன்புறம் ஓர் ஆறும், பின்புறம் மலையும், வானிலே நான்கைந்து பறவைகள் பறப்பது போலவும்தான் மாணவர்கள் வரைவார்கள்.'வீட்டிற்கொரு மரம்' என்பது இப்படியாகத்தான் விதைக்கப்பட்டிருக்கிறது மாணவர்களின் மன வயலில். இன்று பல பள்ளிகளில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக மாணவர்கள் பசுமைப்பணி செய்து வருகிறார்கள்.அரசு விழாக்களின் நினைவைப் போற்றும் வகையில் சுற்றுச்சூழல் தினங்களிலும், மாணவர்களின் பிறந்த நாட்களிலும் மரங்களை நட்டுவைத்துப் பராமரித்து வருகிறார்கள். இந்த மண்ணில் நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்ல வேண்டுமென்றால், அது ஆளுக்கொரு மரம் நடுவது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.மரமும் மனிதனும்மரத்திற்கும் மனிதனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நம் வீட்டில் ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறப்பதைப் போல மண்ணிலிருந்து வெளிவருகிறது ஒரு மரம், சின்னஞ்சிறு செடியாக. மண்ணை முட்டிவரும் ஒரு விதை தனக்கான முதல் தன்னம்பிக்கையை மனிதகுலத்திற்கு விதைக்கிறது. குழந்தைகளிடம் பிள்ளைப் பருவத்திலேயே தன்னம்பிக்கையை விதைத்திடுங்கள் என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. சற்றே வளரத் தொடங்கும் போது, நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்வதை உணர்த்துகிறது. செடிவளர்ந்து கிளை பரப்பி தன்னைச் சுற்றி நிழலால் நிரப்பி பூக்கத் தொடங்குகிறது. குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்து மணமாவதற்குத் தயாராவதை இது காட்டுகிறது. மணமாகி குழந்தை பெறுவதை, மரமானது பூத்துக் காய்த்து, கனியாகி தன் சந்ததியைப் படைக்க உள்ளோம் என்பதைக் காட்டுகிறது.தன் செல்வத்தை வறியவர்களுக்கு அள்ளித் தரும் வள்ளல் போல, மரம் தன்னிடம் உள்ள பூக்களை, காய்களை கனிகளை தன்னை நாடிவருகிறவர்களுக்குத் தந்து பசி தீர்க்கிறது. தந்தையால் கிடைக்கும் சொத்தையும், சுகத்தையும் அனுபவிக்கும் ஒரு மகன் அவரது முதுமைக் காலத்தில் தாங்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் ஆலமரம், மனித இனத்திற்கு உணர்த்துகிறது. இப்படியாக மரமும் மனிதனும் ஒன்று.மனிதம் வளர்க்கும் மரம்மரம் மனிதனின் முதல் நண்பன். மனிதன் மரத்தின் முதல் எதிரி. மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகிப்பது மரங்களின் மீதுதான்.நம்மை மனிதனாக, மாண்புஉடையவனாக வழி நடத்திச் செல்வது மரங்கள்தான். மரங்களிடம் எந்தப் பேதமும் இல்லை. மரங்களால் மனித குலத்திற்கு என்றும் சேதமும் இல்லை. நம் வீட்டின் முன் பகுதியிலோ, பின் பகுதியிலோ ஒரேயொரு மரத்தை மட்டும் நட்டு வைத்து வளருங்கள் நண்பர்களே! அந்த மரம் இளமைப் பருவத்தை அடைந்ததும் நம்மில் பல மாற்றங்கள் நிகழும். அது கண்டு உள்ளம் மகிழும். மரத்தைத் தேடிவரும் சிட்டுக் குருவிகள் சிறகடித்துப் பறப்பதையும், அணில்கள் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவதையும், மைனாவின் மனம் மயக்கும் மொழியையும், இலை மறைவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன் இசையால் நம்மைப் பரவசப்படுத்தும் குயிலின் குரலையும் கேட்டு நம்மால் பேரின்பம் எய்த முடியும். பறவைகளின் வாடகை இல்லா வீடு மரம். காற்றைச் சுத்தப்படுத்தி நம் கவலைகளை அப்புறப்படுத்துகிறது. கூண்டுக்குள்ளே பறவைகளை அடைத்து வைத்து அதன் குரல் கேட்டு குதுாகலம் அடைவதில் அர்த்தமில்லை. மரம் வளர்த்தால் போதும்; பறவைகள் நம்மைத் தேடிவரும்.மரமெனும் தெய்வம்இயற்கை வழிபாட்டில் மரங்கள் தெய்வமாக வழிபடப்பட்டது. மரங்கள் காக்கும் தொழிலைச் செய்து வருகின்றன. இன்றும் மரங்களுக்கு ஆடை கட்டி அழகு பார்க்கும் சமூகமாக நம் தமிழ்ச் சமூகம் உள்ளது. தொப்புள் கொடி உறவுக்குப் பின் தொட்டில் கட்டி ஆடவும், தோழர்களோடு ஒன்று கூடவும், உறவைப் பலப்படுத்தவும், நலப்படுத்தவும் செய்கின்றன மரங்கள். மரத்தின் கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடும்போது ஏற்படும் மகிழ்ச்சியானது, அம்மா தன் கையில் வைத்துத் தாலாட்டுப்பாடும் போது ஏற்படும் உணர்வைத் தரும்.மனிதர்களின் வெளிமூச்சுத்தான் மரங்களின் உள்மூச்சாகவும், மரங்களின் வெளிமூச்சு மனிதனின் உள் மூச்சாகவும் இருந்து வருகிறது. ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன. நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது.மரமும் மனிதனும் உடலளவில் ஒன்றுதான். ஒரு மரத்தின் பட்டை மனிதனின் தோல், நடுப்பகுதி மனிதனின் எலும்பு, தண்டு மனிதனின் சதைப் பகுதி, வேர் மனிதனின் நரம்புகள், பூக்கள் நாளமில்லாச் சுரப்பிகள், பழங்கள் உடலின் வளம், வித்து மனிதனின் உயிரணுக்களைக் குறிக்கிறது.ஒரு காகம் தன் வாழ்நாளில் பல்லாயிரம் மரங்களைத் தன் எச்சத்தின் மூலமாக உருவாக்குகிறதாம். மரங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எத்தனை மரங்களை உருவாக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே! மரம் மனிதனின் மூன்றாவது கரம்.ஆளுக்கொரு மரம்!ஆனந்தமாய் இணையட்டும் நம் கரம்!மரம் வளர்க்க மழை பொழியும்!மழை பொழிய வறுமை ஒழியும்!மரங்களை நேசிப்போம்!மனித மனங்களை நேசிப்போம்!--மு.மகேந்திர பாபுபசுமைப்படைஒருங்கிணைப்பாளர்அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி

இளமனுார். 97861 41410வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X