இந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

இந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா

Added : ஜூன் 05, 2018 | கருத்துகள் (1)
இந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா

சத்குரு, நிறுவனர் ஈஷா அறக்கட்டளை

வயது கூடும்போது ஞானம் வராமல், துன்பம் வருதேன்? / யார் ஆன்மீகவாதி? யார் லௌகீகவாதி? / 'நான் உடல் இல்லை' என்பதை உணராவிட்டால்...

நியாயமாக ஒரு மனிதனுக்கு, வயது ஏற ஏற ஞானமும் கூடிக்கொண்டே செல்ல வேண்டுமல்லவா? மாறாக, துன்பமும் மனக்காயங்களுமே அதிகரிக்கும் நிலை உள்ளது?! 'நான்' என்பது பற்றி மனிதன் அடிப்படையில் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!

கேள்வியாளர்: இந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா?

சத்குரு: உங்களிடமுள்ள இருதயம், நுரையீரல், கிட்னி ஆகியவற்றால் நீங்கள் நீங்களாக இல்லை. உங்கள் உடம்பினால் மட்டும் நீங்கள் நீங்களாக இருக்க முடியாது. உங்கள் எலும்புகள் மற்றும் சதைக்குவியல்களினால் நீங்கள் நீங்களாக இல்லை. உங்கள் உயிர்தான் உங்களை நீங்களாக உருவாக்கி இருக்கிறது. எனவே எதை வைத்து ஒருவர் ஆன்மீகவாதியா இல்லையா என்று கூற முடியும்? எல்லோருமே ஆன்மீகத்தில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், எல்லோருக்குமே உயிர் இருக்கிறது. இப்போதைய கேள்வி இதுதான். சிலர் உங்களுடைய உடம்பை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

உடல்நிலையில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பொருளியல் சார்ந்த உலகியல் வாழ்வில் சிறந்து விளங்குவார்கள். ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருந்தால், பேருந்தில் ஏற வேண்டுமென்றால் ஓடிச் சென்று ஏறிவிடுவான்.

மனநிலை சிறப்பாக இருந்தால், மனம் சம்பந்தமான காரியங்களைக் கடந்து செல்வீர்கள். உங்களுக்கு நிலையற்ற மனமிருந்தால், மனதளவில் துன்புறுவீர்கள். உங்கள் உணர்வுகள் வலிமையாக, சமநிலையிலிருந்தால், வாழ்வின் உணர்வு நிலைகளை அற்புதமாக உணர்வீர்கள். அதாவது நீங்கள் முழுமையான சமநிலையில் இருந்து கொண்டே ஒவ்வொரு உணர்வுகளில் உங்களை முழுமையாக ஈடுபடுத்தி, எல்லாவற்றையும் அனுபவித்து உணர முடியும்.

அதேபோல் உங்கள் சக்தி முறையாக இருந்தால் நீங்கள் வாழ்வில் வேறொரு பரிமாணத்திற்குச் செல்ல முடியும். இவையெல்லாம் இல்லாவிட்டால், நீங்கள் எதுவுமில்லாதவர்கள் போல்தான்.

ஆன்மீகவாதிக்கும், லௌகீகவாதிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்று மனிதர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். உண்மையில் அப்படி ஒருவகையான மனிதர்கள் கிடையாது. உடல், மனம், சக்தி ஆகிய அனைத்தும் ஒன்றுதான். யாராலும் இதைப் பிரிக்க முடியாது.

துப்பாக்கியால் சுட்டால்தான் இதைப் பிரிக்கமுடியும். அல்லது ஒருவர் விழிப்புணர்வில் வளர்ந்தால் இதனைப் பிரிக்கலாம், அது வேறு விஷயம். எந்த ஒருவராலும் 100% லௌகீகத்திலோ அல்லது ஆன்மீகத்திலோ இருக்க முடியாது.

சாகும் தருவாயில் உங்கள் வாழ்வை சிறிது திரும்பிப் பார்த்தால், நீங்கள் செய்தவைகள் எல்லாம், குழப்பான நிலையில் பிழைப்பிற்காகச் செய்ததாக உள்ளது. அதிலும் அப்படிச் செய்தவை எல்லாம் உயிரோடிருப்பதற்குத் தேவையானவை மட்டுமே.

வெறுமனே உயிரோடு இருப்பதற்கான முயற்சியில் மனிதனுக்கு நேர்ந்துள்ள அவலம் அளவற்றது. பெரும்பாலான மக்கள், வயது ஏற ஏற மனதளவில் அதிகம் காயப்படுகின்றனர். பெரும் வேதனை கொள்கின்றனர். வயதாக வயதாக அவர்களுக்கு ஞானம் அதிகரிக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களின் மனக்காயம்தான் அதிகரிக்கிறது.

'நீங்கள் யார்' என்பதை நிர்ணயிப்பதாக இருந்தால் உங்கள் வாழ்க்கை பயனற்ற ஒன்றாகிவிடும். 'நீங்கள் யார்' என்பது ஆனந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், இவைகள் எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X