இன்று புதிதாய் படிப்போம்| Dinamalar

இன்று புதிதாய் படிப்போம்

Added : ஜூன் 06, 2018
Advertisement

புதிய கல்வியாண்டில் புதிய வகுப்பில் அடியெடுத்து வைத்துள்ள மாணவர்களே... புதிய நண்பர்களும் புதிய ஆசிரியர்களும் உங்களுக்குள் மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் ஏற்படுத்த காத்திருக்கிறார்கள். அத்துடன் வாசம் வீசும் புதிய பாடப்புத்தகம் உங்களுக்குள் புத்தொளி பரப்ப காத்திருக்கிறது. ஆண்டொன்று போனால் வயது ஒன்று அதிகரிப்பது போல கல்வியாண்டு ஒன்று கடந்து போனால், நம் கல்வியறிவும் ஒழுக்கமும் பண்பாடும் கூடியிருக்க வேண்டும். இதைத்தான் 'ஒழுக்க மேம்பாடே உண்மையான கல்வி' என்று உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள். மாணவர்கள் தங்களுடைய அறிவு மேம்பாடு அடையவும், செயல்கள் மேன்மை அடையவும் கல்வி, விளையாட்டு, இலக்கியம், போட்டிகள் ஆகிய தளங்களில் சாதனை சிகரங்களை எட்டிப்பிடிக்கவும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட வேண்டும்.படிப்பை நேசிப்போம்'தொழிலில் வெற்றி பெற நீங்கள் செய்யும் தொழில் உங்கள் மனதுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் முழுமையாக ஈடுபட்டு வெற்றி பெற முடியும்' என்று தொழில் செய்வோருக்கான வெற்றி பழமொழி படிப்புக்கும் பொருந்தும். நீங்கள் படிக்கிற படிப்பையும் பள்ளிக்கூடத்தையும் உங்களுடன் படிக்கும் நண்பர்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும். வேறு மாதிரியும் சிந்திக்கலாம். படிப்பில் வெற்றி பெற அந்தப் படிப்பும், படிக்கும் சூழலும் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதை விட முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு உள்ள மாணவர்கள் எந்த சூழ்நிலையையும் தங்களுக்குச் சாதகமாக்கி முன்னேறி சாதித்து விடுவார்கள். சூழ்நிலைகளை குற்றம் சொல்ல மாட்டார்கள்.எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளிலேயே போக வேண்டும் என்று நினைக்காமல் புதிதாய் சிந்திக்க வேண்டும். தனியாளாய் சாதிக்க வேண்டும் என்பதை விட குழுவாய் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். இந்தக் குழு முயற்சிக்கான களத்தின் அடித்தளத்தை பள்ளிப்பருவத்திலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பாடப்புத்தகங்களைப் படிப்பதும் தகவல்களை சேகரித்துக் கொள்வதுமே கல்வி என்ற எண்ணம் மாணவர்களிடம் இருக்கிறது. இதற்கு பெற்றோர்களும் துணை போகிறார்கள். 'நீ பாடத்தை மட்டும் படி. மற்ற விஷயங்களை எல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று சொல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் அறிவையும் ஆற்றலையும் மழுங்கடிக்கவே செய்கிறார்கள்.பெற்றோர் துணைமாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தேவையான புத்தகங்கள் வாங்குவது, கூடுதலாக ஸ்டடி மெட்டிரியல்ஸ் வாங்கிக் கொடுப்பது என்று தங்கள் பிள்ளைகளின் எல்லாத் தேவைகளையும் பெற்றோர்களே கவனித்து விடுகிறார்கள். இப்படி வளரும் மாணவர்களுக்கு புத்தகங்களைத் தாண்டி எதுவும் தெரியாமல் போவதால் படிப்பை முடித்தவுடன் சிக்கல் எழுகிறது. மாணவர்கள் எல்லாவற்றுக்கும் பெற்றோர்களின் துணையைத் தேடி நிற்கிறார்கள். காய்கறி வாங்கவும், பால் வாங்கவும், பாடக்குறிப்புகளை பிரதி எடுக்கவும் இண்டர்நெட்டில் டவுன்லோட் செய்யவும் பிள்ளைகளை அனுப்பலாம். அதுவும் அனுபவ அறிவு தான். எதிர்காலத்தைக் கணித்து அதன் தேவைகளுக்கு ஏற்றவாறு படிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைநோக்கு சிந்தனையோடு மாணவர்களைப் படிக்கத் துாண்டும் ஆற்றல் மையங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். கல்வி என்பது பல்வகைப்பட்ட அறிவை தேடிக் கொள்வது. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற முழுமையான மனிதனை உருவாக்குகின்ற குணத்தை மேம்படுத்துகின்ற கல்வியே சிறப்பான கல்வி. இப்படிப்பட்ட கல்வியைத் தான் மாணவர்கள் தேடிக் கண்டடைய வேண்டும்.தற்போது மிக வேகமாக ஒரு நோய் பரவி வருகிறது. வைரஸ் இல்லாத ஒரு நோய். எல்லாவற்றையும் கேலி செய்வதும் பொறுப்பின்மையுமான அந்த நோய் நம்மை பீடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது சமூக ஒழுக்கத்தின் ஒரு பகுதி. இந்தச் சமூக ஒழுக்கம் இல்லையென்றால் தனி மனித வாழ்வு நிச்சயம் பாதிக்கப்படும். சமூக ஊடகங்களிலும் தேவையற்ற விவாதங்களிலும் இருந்து மாணவர்கள் உலகம் விலகி இருக்க வேண்டியது அவசியம்.நல்ல வாய்ப்புபள்ளிப் பருவம் என்பது உங்களுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்ள நல்ல தருணம். இதை நழுவ விட்டு விடக் கூடாது. இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பு, நேர்மை, பொறுமை இவற்றின் வழியில் நின்று உயர்லட்சியங்களுக்காக உழைக்கவும் கனவு காணவும் உரிய பக்குவத்தை மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் தான் வளர்த்துக் கொள்ள முடியும்.புதிய திசைகளை நோக்கி பயணிப்பதற்காக மாணவர்கள் கண்களையும் காதுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடிய யோசனைகள், அறிவுரைகள், போதனைகள் ஆகியவை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஒரு பரபரப்பான திரைப்படத்தில் முக்கியமான திருப்பங்கள் வந்து செல்லும் சில நிமிடக் காட்சிகள், மாதிரி வாழ்க்கையில் வரும் சில முக்கியமான தருணங்களை நாம் தவற விட்டு விடக் கூடாது. அதனால் வகுப்பறையில் மட்டுமல்லாது வகுப்பறைக்கு வெளியேயும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.உழைப்பும் முயற்சியும்உழைப்பையும் முயற்சியையும் தவிர வேறு எந்த குருட்டு அதிர்ஷ்டமும் உங்களை உயர்த்தாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். படிப்புக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் இது அவசியம். பொறாமை இல்லாத போட்டி உணர்வு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். ஆரோக்கியமான போட்டி பள்ளிப் பருவத்தில் அழகானதும் கூட. உங்கள் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க நண்பர்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு படிக்கலாம். போட்டியின் நிறைவில், 'தீவிரமாக முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதை நீங்களே உணர்ந்து கொள்ள முடியும். சில பாடங்களை கடினமான பாடங்கள் என்று முத்திரைக் குத்தி ஒதுக்கி வைக்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆர்வமின்மையும் முயற்சியின்மையும் தான் இதற்கு காரணம். எந்த ஒரு பாடத்தையும் பயிற்சியே செய்து பார்க்காமல் இது முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். முயற்சி செய்து பார்க்காமல் முடியாது என்று சொன்னால் வெற்றி கிடைக்காது.திறன்களின் மையம்பாடப்புத்தகங்களில் கிடைக்கும் தகவல்களில் இருந்து திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வேறுபட்ட சூழ்நிலைகளில் உங்களை எப்படி பொருத்திக் கொள்வது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் வாழ்க்கை அறிவு. எந்த நோக்கத்திற்காக படிக்க வேண்டும் என்று உளவியல் அறிஞர் பிரான்ஸிஸ் பேகன் கூறுகின்ற கருத்தை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்கும். 'மறுப்பதற்காகவோ குழப்புவதற்காகவோ படிக்காதே!நம்புவதற்காகவோ தலையாட்டுவதற்காகவோ படிக்காதே!உறங்குவதற்காகவோ உபதேசம் செய்யவோ படிக்காதே!சீர்துாக்கிப் பார்க்கவும் சிந்திக்கவுமே படி! படி! படி!மிகப்பெரிய விஷயங்களை சாதிக்க விரும்பினால் எப்போதும் அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்க வேண்டும். இலக்குகளை தெளிவாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இலக்கை அடைய தெளிவான திட்டங்கள் வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மைக் கல்வி' என்று எது குறித்த கனவுகள் இருக்கிறதோ அதை அடைவதற்கான தெளிவான திட்டங்களை ஆரம்பத்திலேயே வகுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து கொண்டே இருங்கள்.படிப்பில் முதல் இடம், இரண்டாம் இடம் என்பதும் வெற்றி, தோல்வி என்பதும் இயல்பானது. வெற்றி பெறும் போது இருக்கும் மன வலிமை தோல்வியின் போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஜெயிக்க முடியும்.- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலுார்

98654 02603வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X