பாதுகாப்பான ரயில் பயணங்கள்! இன்று லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்

Added : ஜூன் 07, 2018
Advertisement
பாதுகாப்பான ரயில் பயணங்கள்!  இன்று லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்

ஆரம்ப காலத்தில் அறியாமை யின் காரணமாக பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை கண்டு பயந்ததாக சொல்வார்கள். ஆனால் அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில், பொதுமக்களை கண்டு பயப்பட வேண்டியிருக்கிறது.
அலைபேசியில் பேசிக்கொண்டே ரயில்வே லெவல் கிராசிங்கை கடப்பது, ரயில் பாதையின் எந்த இடத்திலும் கவனமில்லாமல் கடப்பது போன்ற காரணங்களினால் விபத்துகள் ஏற்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகின்றன. வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கவனக்குறைவால் மற்றும் மோட்டார் வாகன சட்ட விதி முறைகளை கடைபிடிக்காததால் ரயில்வே லெவல் கிராசிங்கில் விபத்துகள் நடக்கின்றன.


பெர்மனன்ட் வே


ரயில் இருப்பு பாதையை ஆங்கிலத்தில் 'பெர்மனன்ட் வே' என்பார்கள். இந்த நிரந்தர பாதையில் ஓடும் ரயில்கள் தங்கு தடையின்றி ஓடி கொண்டிருக்கும். ரயில் இருப்பு பாதையில் பல இடங்களில் சாலைகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அவை 'லெவல் கிராசிங்' என அழைக்கப்படுகின்றன. சாலைகள் சந்திக்கும் இடங்களில் வாகன போக்குவரத்து அளவிற்கேற்ப ஆள் காவல் உள்ள மற்றும் ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங் அமைக்கப்படுகிறது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் லெவல் கிராசிங்கில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. அதற்கும் குறைவான வாகன போக்குவரத்து உள்ள ரயில்வே கேட்டுகள் ஆள் உள்ள லெவல் கிராசிங் மற்றும் சிறிய அளவிலான வாகன போக்குவரத்து உள்ள லெவல் கிராசிங், ஆள் இல்லாதவையாக பராமரிக்கப்படுகின்றன.

முன்னர் ரயில்வே கேட்டுகள், சாலையில் இருப்பு பாதைகளின் இருபுறமும் கதவுகள் திறப்பது போல, ரயில் வரும் போது மூடியும் ரயில் சென்ற பிறகு திறந்தும் சாலை வாகன போக்கு வரத்துக்கு பாதுகாப்பான வழி வகை செய்யப்பட்டன. தற்போது பெருகி வரும் வாகனங்களை கருத்தில் கொண்டு, இந்த கேட்டுகளில் விரைவான சாலை போக்குவரத்துக்கு வழி வகை செய்யும் நோக்கில், மேலும் கீழும் செல்லும் வகையில் 'லிப்ட் பேரிங்' கேட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. சில கேட்டுகளை நிலைய அதிகாரியின் அனுமதி இல்லாமல் மூடவோ, திறக்கவோ முடியாது.

மற்ற ஆள் உள்ள கேட்டுகளில், ரயில் வருவதை முன் கூட்டியே கேட்டில் உள்ள ஊழியர் களிடம் தெரிவித்து ஒரு சங்கேத எண்ணை பரிமாறி, தகவல் அனுப்பியதையும் பெற்றதையும் உறுதி செய்து கொள்வர். ஆகவே இந்த கேட்டுகளில் விபத்து நடப்பது அரிதிலும் அரிது. பிரேக் பிடிக்காமல் வாகனங்கள் பூட்டிய கேட்டில் மோதுவதுண்டு.


ஆளில்லா கிராசிங்

ஆனால் ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்கில், வாகன உபயோகிப்பாளர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும். ஒத்துழைப்பு என்றால் சட்டப் பூர்வமான ஒத்துழைப்பு.அதாவது மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 131-ன் படி ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் முன்பு வாகனத்தை நிறுத்தி வாகன ஓட்டுனரோ அல்லது கண்டக்டர், கிளீனர் இருந்தால் அவர்கள் லெவல் கிராசிங் அருகே சென்று இருபுறமும் பார்த்து ரயில் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வாகனத்தை பாதுகாப்பாக கடக்க செய்ய வேண்டும்.

இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 161 - ன் படி ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்கில் கவன குறைவாக கடக்கும் வாகன ஓட்டிகள் பிடிக்கப்பட்டு ஒரு ஆண்டு வரை சிறையில் வைக்க முடியும்.விபத்துகளை தவிர்க்கவும் ரயில் மற்றும் சாலை வாகன பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இது போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலை வாகன உபயோகிப்பாளர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போது செய்ய வேண்டிய விதி முறைகள், அதை மீறும் போது ஏற்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகின்றன. திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு விதி மீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுகின்றன.லெவல் கிராசிங்கை கவன குறைவாக கடப்பதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த உலக அளவில் ஒரு நாளாக கடைபிடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே நாமும் அதற்கான முக்கியத்துவத்தை அளித்தால் நல்ல பயன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

'பொறுத்தார் பூமியாள்வார்' என சொலவடை உண்டு. அதை கடைபிடிக்கும் வகையில் ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போதாவது, பொறுமையாக பார்த்து, விதிகளை கடைபிடிப்பது நலம் பயக்கும்.


மக்கள் ஒத்துழைப்பு

மக்கள் ஒத்துழைப்பு ஒரு பக்கம் இருக்க ரயில்வேயும் ஒரு பக்கம் இந்த லெவல் கிராசிங்கை மூடி மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங், ரயில் கீழ் பாலங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதுகாப்பான ரயில் மற்றும் சாலை போக்குவரத்து உறுதி செய்யப்படுகிறது. ரயிலின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது.

சாலை போக்குவரத்து நெரிசல் உள்ள நகர் பகுதிகளில் லெவல் கிராசிங், ஆள் காவல் உள்ளதாக அமைக்கப்பட்டிருக்கும். போக்குவரத்து குறைவாக உள்ள கிராம பகுதிகளில் பொதுமக்கள் உபயோகத்திற்காக அதிகமான ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங் கேட்டுகள் உள்ளன. மதுரை கோட்டத்தில் உள்ள இது போன்ற 95 ஆள் இல்லாத லெவல் கிராசிங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த 95 உள்ளூர் பிரதிநிதிகள் 'கேட் மித்ரா'க்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

இந்திய ரயில்வேயில் 2017--18 ம் ஆண்டில் 1565 ஆள் காவல் இல்லாத லெவல் கிராசிங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2018--19 ம் ஆண்டில் 1600 லெவல் கிராசிங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன. மூடப்பட்ட ஆள் காவல் உள்ள லெவல் கிராசிங் கேட்டுகளில் கூட பொறுமையில்லாமல் வளைந்து நெளிந்து சென்று விபத்தில் சிக்குபவர்களும் உண்டு; அவர்களும் சிரமப்பட்டு, ரயிலில் பயணம் செய்பவர்களையும் சிரமத்திற்கு ஆளாக்குகிறார்கள்.

சட்ட திட்டங்கள் மீறப்படாமல் கடைபிடிக்கப்படவேண்டும். எவ்வளவு சட்டங்கள் போட்டாலும் மனித மனங்கள் மாறினால் தான் விபத்தில்லாத பாதுகாப்பான பயணங்கள் உறுதி செய்யப்படும். மனித உயிர்களும் காப்பாற்றப்படும்.
வ. ராதா, வரவேற்பு ஆய்வாளர்தெற்கு ரயில்வே, மதுரை90038 62674

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X