ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?

Updated : ஜூன் 08, 2018 | Added : ஜூன் 07, 2018 | கருத்துகள் (100)
ஆர்எஸ்எஸ், பிரணாப் முகர்ஜி, மஹாத்மா காந்தி, கலாம், நேரு, காரியப்பா

நாக்பூர்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சில காங்., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று கட்சி தலைவர்கள் கலந்துகொள்வது இது முதல்முறை அல்ல. எனவே, பிரணாப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வரலாறு என்ன:


ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு 1925ம் ஆண்டு துவக்கப்பட்டது. மகாத்மா காந்தி கொல்லப்பட்ட 1948ம் ஆண்டு, நாட்டில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்ட 1975ம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ம் ஆண்டு என மூன்று முறை ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். 'ஷாகா' என்ற இந்த பயிற்சி முகாம் நான்கு நிலைகளாக நடத்தப்படும். ஆரம்ப நிலை, முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என நான்கு நிலைகளாக பயிற்சி முகாம் நடக்கும்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தான் இந்த அமைப்பின் தலைமையகம் உள்ளது. இங்கு தான் மூன்றாம் ஆண்டு பயிற்சி 25 நாட்களுக்கு நடத்தப்படும். இம்முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பது உண்டு.

இன்று நடக்கும் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்., தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். இதற்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரணாபின் மகள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பல்வேறு தலைவர்கள்:


வரலாற்றை திரும்பி பார்த்தால், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்வுகளில் பிற கட்சி தலைவர்கள் பங்கேற்றது புதிதல்ல என்பது தெரியும்.

* மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் 1934ம் ஆண்டு நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பங்கேற்றார். அதற்கு அடுத்த நாள் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவர், காந்தியை சந்தித்து பேசினார். மீண்டும் 1947 ம் ஆண்டு செப்., 16ம் தேதி நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற காந்தி, 'ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெக்டேவர் உயிருடன் இருந்த போது, வார்தா நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். ஜமன்லால் பஜாஜ் தான் என்னை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களிடம் காணப்படும் ஒழுக்கம், தீண்டாமையை பின்பற்றாதது, மிக எளிமை ஆகியவை என்னை கவர்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

* முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன், சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயண் உட்பட பல தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

* ராணுவ தளபதி கரியப்பா, 1959ம் ஆண்டு மங்களூருவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாமை பார்வையிட்டார். அவர் கூறுகையில்,' ஆர்.எஸ்.,எஸ்., அமைப்பின் செயல்பாடுகள் என் இதயத்தை தொடும் நிலையில் உள்ளன. இஸ்லாம் கொள்கைகளை, ஒரு முஸ்லிம் முன்னெடுத்து செல்லும் போது, இந்துத்வா கொள்கைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது' என்று கரியப்பா குறிப்பிட்டார்.

* 1962ம் ஆண்டு இந்திய - சீன போர் நடந்த போது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மேற்கொண்ட பணி, அப்போதைய பிரதமர் நேருவை கவர்ந்தது. அந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அணிவகுப்பு நடத்த நேரு அழைப்பு விடுத்தார்.

*1965ம் ஆண்டு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கருக்கு அப்போதைய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி அழைப்பு விடுத்தார்.

* முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் நிபுணர்கள் சிலர் கூறும்போது, ''மகாத்மா காந்தி உள்பட மற்றுக் கருத்து உள்ள தலைவர்களே ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, பிரணாப் கலந்து கொள்வதில் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ்.,-ஐ ஒரு பொதுவான சமூக சேவை அமைப்பாகத் தான் இந்த தலைவர்கள் எல்லாம் கருதி இருக்கின்றனர். பிரணாப்பை எதிர்ப்பவர்கள், வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள்'' என்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X