பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு போட்டிப்பாடல் நிகழ்ச்சி. மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்., 'டேப்' என, அந்த காலத்தில் அழைக்கப்பட்ட பறையைத் தட்டி இசைத்த படியே கேள்வி கேட்பார். 'உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?' என்று... அதற்கு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 'கத்தி, ஈட்டி, கடப்பாரை, அக்னி திராவகம்' என கூறி, பதில் தெரியாமல் விழிக்க, எம்.ஜி.ஆர்., பதில் சொல்லுவார், 'நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது' என்று! 'யோசிக்காமல் பேசுவது, குறி பார்க்காமல் சுடுவது போன்றது' என்பது, ஒரு அறிஞரின் பொன்மொழி. அது யாரை எந்த அளவுக்கு காயப்படுத்தும்; என்ன விளைவை, சுட்டவருக்கு ஏற்படுத்தும் என்பதை சுட்டவராலேயே கணிக்க முடியாது. சமீப காலமாக, யாராவது ஒரு பிரபலம், ஏதாவது ஒரு கருத்தை, தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களின் கவனத்தைத் தன் பால் ஈர்ப்பதற்காக அல்லது தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக சொல்கிறார். அவருக்கு எதிரான கும்பல், அதற்காகவே காத்திருந்தது போல், அவரது உருவ பொம்மையை கொளுத்துவதும், அவர் சார்ந்த இயக்கத்தின் அலுவலகங்களை சேதப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. இது போன்ற வன்முறை காட்சிகளை, 'டிவி'களில் பார்க்கும் போது, போராட்டக்காரர்கள் யார் முகத்திலும் கோபாவேசம் இல்லை. மாறாக, சிரிப்பும், கும்மாளமும் தான் காணப்படுகிறது. எனவே, அவர்களின் செயல், கோபத்தின் வெளிப்பாடாக இல்லை; குதுாகலத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. தங்களுக்கு வேண்டாதவர்களின் மீது வெறுப்பைக் கொட்டுவதிலும், அவமானப்படுத்துவதிலும் அத்தனை மகிழ்ச்சி. கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டங்கள், மக்களாட்சியில் தவிர்க்க முடியாதவை; அவசியமானதும் கூட. ஆனால், அது வரம்பை மீறிப் போகும் போது, அதன் நோக்கம், முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. பெரும்பாலான சமயங்களில், பேசப்பட்ட கருத்துகளை விட, வார்த்தைகளை விட, பேசிய நபரைப் பொறுத்து தான் எதிர்ப்பு வெடிக்கிறது. 'கடமையைச் செய்யும் காவலரைத் தாக்குவது நியாயமல்ல; வன்முறையின் உச்சம் அது' என்பது, எல்லாராலும் ஒத்துக்கொள்ளக் கூடிய கருத்து தான்.ஆனால், அதை அந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவருக்கு எதிராக அந்த பிரபலமானவரால் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொண்டதால் தான், அந்த கருத்துக்கு அத்தனை எதிர்ப்பு. இன்றைய விவாதங்கள், எது சரி என்பதை விட, யார் சரி என்ற கோணத்தில் தான் உள்ளது. அண்ணாதுரை, காமராஜர் போன்ற தலைவர்களின் கருத்தாழம் மிக்க, எளிமையான, அரசியல் நாகரிகம் மிக்க உரையை, மணிக்கணக்கில் காத்திருந்து, கேட்டு ரசித்த காலம் போய், பேசும் ஒரு சில வார்த்தைகளே, கழுத்தறுப்பாக இருப்பதை எண்ணி, மக்கள் வெறுப்படைகின்றனர். நல்ல அரசியலை, நயமான, தரமான வார்த்தைகளால் பேசும் திறனற்றவர்கள், அடுத்தவரின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து முகத்தில் கரியைப் பூசிக்கொள்கின்றனர்.தன்னிடமுள்ள நல்ல தகவல்கள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறிக் கொள்வதற்காக பேசுபவர்கள் அறிவாளிகள். எதையாவது பேசி, அடுத்தவர் கவனத்தைத் தன் பால் ஈர்ப்பதற்காகவே பேசுபவர் அறிவிலிகள்.நகைச்சுவை கதை ஒன்று உண்டு... இரண்டு எதிரணித் தலைவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் மற்றவரை பார்த்து கோபமாக, 'நீ ஒரு முட்டாள்' என்பார். அடுத்தவர் பதிலுக்கு அவரைப் பார்த்து, 'நீ ஒரு அயோக்கியன்' என்பார்.நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் அவசரமாக குறுக்கிட்டு, ஒலிபெருக்கியில் அறிவிப்பார்... 'இரு தலைவர்களும் தாங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தி விட்டனர். இதனால், நம் பணி சுலபமாகி விட்டது. இனி அவர்கள் இருவருமே மக்களுக்கு தெரியாத, புதிய சங்கதிகளைமட்டுமே பேசும் படி கேட்டுக் கொள்கிறோம்' என்பார். நாகரிகம், பண்பாடு, கலாசாரம் எல்லாம், அணியும் உடைகளுக்கும், செயல்படுத்தும் நடத்தைகளுக்கு மட்டுமல்ல, பேசும் வார்த்தைகளுக்கும் பொருந்தும் என்பது இவர்களுக்கு ஏனோ புரிவதில்லை. ஒருவர் நாகரிகமில்லாமல் பேசி விட்டார் என்று குற்றம் சுமத்தி, வசை பாடுபவர்களும், நாகரிகமின்றி, முன்னவரையும் மிஞ்சும் விதத்தில் அதேதவறைச் செய்கின்றனர். இவர்களுக்கு அந்த அனுமதியை யார் கொடுத்தனர் என, தெரியவில்லை.ஒருவரின் கடுமையான, நாகரிகமற்ற, மிக மோசமான, கோபாவேச வார்த்தைகள், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரைச் சார்ந்திருக்கும் இளைஞர் பட்டாளத்தை வெகுண்டு எழச் செய்யும், துாண்டுகோலாக அமையும் என்பது பேசுபவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.உண்மையில், அந்த விளைவை எதிர்பார்த்தே சிலர் அப்படி பேசுவதாக தான் கருத வேண்டியிருக்கிறது.எதிரணியிலும் இளைஞர்கள் இருப்பர். அவர்கள் மனதிலும் இதே தாக்கத்தை தான், தங்கள் பேச்சு ஏற்படுத்தும் என்பதையும் உணர்வதில்லை.உன் ஆள்காட்டி விரல் அடுத்தவரைச் சுட்டிக்காட்டும் நேரத்தில், மற்ற விரல்களில் மூன்று, உன்னை நோக்கியிருப்பதை உணர வேண்டும் என்றுசொல்வர். தங்கள் பக்கமும்,அந்தக் குற்றச்சாட்டுக்கு பொருத்தமானவர்கள் இருப்பர் என்பதை சிந்திப்பதில்லை.இருளைப் போக்கும் விளக்குக்கு, தன் கீழ் இருக்கும் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.பேசுபவர்களுக்கு மேடை கிடைக்கவில்லை என்ற குறையைப் போக்க வந்த, 'டிவி' மீடியாக்களும், சமூக ஊடகங்களும், மிக அதிகமாகவே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன.அது, எரியும் தீயில் எண்ணெய் விட்ட கதையாகி விட்டது. முகம் தெரியாத, 'முகநுாலில்' பலர் தங்கள் மனதுக்குள் சேர்த்து வைத்திருந்த குப்பைகளை கொட்டித் தீர்க்கின்றனர்.போராட்டம் என்ற பெயரில், சாலைக்கு வந்து தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள வாய்ப்பைத் தேடி கொண்டிருந்தவர்களுக்கு, வெறும் வாயில் அவல் போட்ட கதையாகி விட்டது... காத்திருந்த கொக்குக்கு கிடைத்த உறுமீனாகி விட்டது.ஒன்றுமில்லாததை கூட ஊதிப் பெரிதாக்கும் அரிய பணி, சில, 'டிவி' ஊடகங்களால் இனிதே செய்து முடிக்கப்படுகிறது.தீக்குச்சியின் தலையில் உறங்கும் தீ போல, சிலரது உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் குரூர எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கப்படும் போது, மிக மோசமான விளைவுகளை இந்த சமுதாயம் சந்திக்கவேண்டியிருக்கிறது.உணர்ச்சிப்பூர்வ வசனங்களும், வார்த்தை ஜாலங்களும், வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம்; நிஜ வாழ்க்கைக்கு, அவற்றில்நல்ல நோக்கம் பொதிந்திருப்பது அவசியம். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே, கண்டதை எல்லாம் கருத்தாக சொல்லும்இந்த அவலம். பொதுவான கருத்துக்கும், தனி மனிததாக்குதலுக்கும் பேதம் தெரியாத அறியாமை. பொதுவாக ஒருவரால் தெரிவிக்கப்படும் கருத்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனதைப் புண்படுத்தி, கிளர்ந்தெழச் செய்து, வன்முறையில் ஈடுபடத் துாண்டும் வகையில் அமையுமானால், அதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வழி வகுக்குமானால், சட்டம் அதை அனுமதிக்காது. இந்திய தண்டனைச் சட்டப்படி இது குற்றமாகும். இதனால் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்கும் பணி காவல் துறைக்கு கட்டாயமாக திணிக்கப்பட்டு, அவர்களின் மற்ற,மக்கள் நலம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த இயலாமல் செய்கிறது.காவல் துறைக்கும், மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.இதனால் எழும் போராட்டங்களால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தேவையற்ற சிரமங்கள், அப்பாவி பொதுமக்கள் மீது சுமத்தப்படுகிறது.தவறாக பேசியவர்களே தங்கள் தவறை உணர்ந்து, அந்த பேச்சுக்கு விளக்கமோ, மறுப்போ தெரிவித்தாலும், போராடத் துவங்கி விட்டவர்கள் காதில் அது விழுவதில்லை.பேசியவர்களுக்கும் அவர்கள் எண்ணம் நிறைவேறி விட்டது; அதை எதிர்த்துப் போராடியவர்களுக்கும், அவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது.இருவருமே, மக்களின் கவனத்தை தங்களின் பக்கம் திருப்பி பிரபலமடைந்து விட்டனர். அப்பாவி பொது மக்கள் தான், தங்களின் அமைதி வாழ்க்கையைத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கின்றனர். எனவே, யாராக இருந்தாலும், பேசும் வார்த்தையில் கவனம் தேவை.
மா.கருணாநிதி
காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வு
இ - மெயில் : spkaruna@gmail.com