குழம்பியது யார்?| Dinamalar

குழம்பியது யார்?

Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement

நாக்பூரில் நடைபெற்ற, ஆர்.எஸ்.எஸ்., முக்கிய வருடாந்திர பயிற்சி விழாவில், முன்னாள்ஜனாதிபதி, பிரணாப் பங்கேற்றதால் எழுந்த விவாதம், காங்கிரசின் மனப்போக்கை வெளிப்படுத்தி விட்டது. பிரணாப் நீண்ட நாள் அரசியல்வாதி, இந்திராவுக்கு வேண்டியவர், ராஜ்யசபாவில் காங்கிரஸ் முன்னவர், சிந்தனையாளர், சிதம்பரம் போன்ற சிலருக்கு பிடிக்காதவர் என்ற நீண்ட பட்டியல் உண்டு. பிரதமர் ஆக ஆசைப்பட்ட அவரை, காங்கிரஸ் தலைவர், சோனியா முதலில் அனுமதிக்காமல், பின்பு ஜனாதிபதியாக்க சம்மதித்தார். அதற்கும் காரணம் உண்டு. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன் காங்கிரஸ் செல்வாக்கு மங்கிய நிலையில், அடுத்த ஆட்சி எப்படி வருமோ என்பதை யூகிக்க முடியாமல், இப்பதவியாவது, பழுத்த காங்கிரஸ்காரரிடம் இருக்கட்டுமே எனக் கருதியதால், அவருக்கு இப்பதவி கிடைத்தது. பிரணாப்பிற்கு அது தெரிந்தாலும், பல்வேறு வாய்ப்புகளை இழந்தவர் என்ற முறையிலும், காங்கிரசில் முழுவதுமாக தோய்ந்தவர் என்பதாலும், அதை ஏற்றார்.ஜனாதிபதி பதவி நிறைவடைந்து, விடைபெறும் விழாவில், அத்வானி, பிரதமர் மோடியைப் புகழ்ந்த அவர், பேச்சின் இடைச் செருகலாக, சோனியா தன்னை முன்னிறுத்தியதையும் பாராட்டினார். இப்போது, ஆர்.எஸ்.எஸ் தலைமையக விழாவில் பங்கேற்கச் சென்ற, அவரைத் தடுக்க விரும்பிய சோனியா, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா மூலம், பேட்டி வெளியிட வைத்தார்.பொதுவாக, சோனியா, தன் முடிவுகளை அகமது படேல், டாம் வடக்கன் அல்லது மாஜி அமைச்சர் அந்தோணி போன்றவர் மூலமாக வெளிப்படுத்துவது வழக்கம்.இது ஒரு புறம் இருக்க, ஆர்.எஸ்.எஸ்சை பாசிஸ்ட் இயக்கமாக வர்ணித்த காங்கிரஸ், இன்றும் அதைத் தொடர்கிறது.ஆர்.எஸ்.எஸ்., விழாவில், 'இந்தியாவில் பல பிரிவு மக்கள் வாழ்வது, அதன் சகிப்புத் தன்மைக்கு அடையாளம்' என, அதில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல, '5,000 ஆண்டு காலத்தில், இங்கு வந்த பல்வேறு அன்னிய மக்களின் கருத்துகளை இணைத்துக் கொண்டது பாரத நாடு' என்றும் கூறியுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., இயக்க தேச வழிபாட்டு பாடலில், 'இந்துபூமி மற்றும் இந்து ராஷ்டிரம்' என்ற வாசகங்கள் உள்ளன. இந்துத்துவா என்றால் அது, இந்துக்களை மட்டும் அல்ல: இந்த நாட்டு கலாசாரத்தில் ஒன்றியவர்கள் என்பதை, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உறுதிபடுத்தியிருக்கிறது. அப்பாடலையும் மேடையில் இருந்து கேட்டுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தனது உரையில், 'பிரணாப் தன் கருத்தை தெரிவித்தார்; ஆர்.எஸ்.எஸ்., தன் பாதையில் அதன் பாரம்பரியத்தை தொடர்கிறது' என்று கூறி, இவற்றை பெரிதுபடுத்துவதற்கு ஒன்றும் இல்லை என, கூறிவிட்டார்.அது மட்டுமின்றி, அந்த இயக்கத்தை தொடங்கிய டாக்டர் ஹெட்கேவார், 'இந்தியத் தாயின் பெருமை மிக்க புதல்வன்' என்று, குறிப்பேட்டில் பிரணாப் எழுதியது ஏன் என்பதை, அவர் இனி விளக்கலாம்.அந்த கால காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை அறிந்த பிரணாப், விழாவில் பங்கேற்றபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினரும், லால் பகதுார் சாஸ்திரி குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தன் சிந்தனையை பலரிடம் பரவச் செய்வதில், சில அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது.அத்துடன் சங்கக் கிளைக்கு ஒருவர் ,ஏதோ சில நாட்கள் வந்தார் என்பதாலோ, அல்லது விழாக்களில் பங்கேற்றதாலோ, அந்த அமைப்பின் பதவியைப் பெறுவது சிரமம். பிரணாப் பங்கேற்றதை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி வரவேற்றிருக்கிறார்.சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பலருள், திலகர், கோகலே, வ.உசி., போன்றவர்களுக்கும், இன்று ராகுல் தலைமையில் உள்ள காங்கிரசுக்கும் என்ன தொடர்பு? பல்வேறு உணவுப் பழக்கங்கள், பல்வேறு வழிபாடுகள் கொண்ட மக்கள், இத்திருநாட்டில் உள்ளனர்.மற்றொரு முக்கிய விஷயமாக, இஸ்லாமில் கூட, 72 பிரிவுகள், கிறிஸ்தவத்தில், சி.எஸ்.ஐ., உட்பட பல பிரிவுகள் உள்ளன. இந்த நாட்டில், எளிதாக, இணக்கமாக காலம் காலமாக இவர்கள் வாழ்கின்றனர். இந்து மதத்தில் உள்ள கடவுள் எண்ணிக்கை, கணக்கில் அடங்காது. நாட்டு நலன் மட்டும் கருதி, ஆட்சிக்கு ஆசைப்படாத ஒரு சக்தியாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்திருப்பது ஏன் என்பதை சிந்திக்க வைத்திருக்கிறது பிரணாப் விஜயம்.அவரைக் கொச்சைப்படுத்திய காங்கிரஸ்தலைவர்கள், அதே நாளில் மாற்றிப் பேசியது,அக்கட்சியின் சிந்தனைக் குழப்பத்திற்கு

அடையாளமாகி இருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vadakkuppattu Ramanathan - Chennai ,இந்தியா
12-ஜூன்-201817:23:58 IST Report Abuse
Vadakkuppattu Ramanathan மிகவும் நடு நிலையான தலையங்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X