குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே!| Dinamalar

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே!

Updated : ஜூன் 12, 2018 | Added : ஜூன் 12, 2018
Advertisement
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சாத்தியமே!

உண்மையில் குழந்தை தொழிலாளர் என்பவர் யார்? ஒரு குழந்தை கூலிக்காக வேலை பார்த்தாலும், குடும்பத்தினருடன் பணிபுரிந்தாலும் அக்குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும் அவ்வேலை இடையூறாக அமைந்தால் அக்குழந்தையை 'குழந்தை தொழிலாளி' எனக்கூறலாம். தவிர, குறைந்த கூலிக்கு நீண்டநேரம் உழைப்பது, ஆரோக்கியம், உடல், மன வளர்ச்சிக்கு பாதிக்கும் சூழலில் பணிபுரிவது, சில நேரங்களில் குடும்பத்தை பிரிந்தும், கல்வி, பயிற்சி வாய்ப்புகளை இழப்பதும் குழந்தை தொழிலாளர் நிலை என்கிறது உலக தொழிலாளர் அமைப்பு.
நம் நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை பல வடிவங்களில் உள்ளது. நேரடி குழந்தை தொழிலாளர் முறை ஒரு நிலை என்றால், மறைமுக குழந்தை தொழிலாளர் முறை ஒரு நிலை. சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத இடங்களில் குழந்தைகளை பணியில் அமர்த்தி உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வேலை செய்ய வைத்தல் மறைமுக குழந்தை தொழிலாளர் முறை எனலாம். இக்குழந்தைகள் பெரும்பாலும் பள்ளி செல்லாதவர்கள். குழந்தை தொழிலாளர் முறையில் இன்னொரு நிலை, இடம்பெயர்ந்து வேலை செய்பவர்கள். வேலை வாய்ப்புக்காக கிராமம், நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் குடும்பங்கள், தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கின்றனர். இதில் பல குழந்தைகள் பள்ளி செல்லாமல் பெற்றோர் பார்க்கும் பணிகளை பார்க்கின்றனர். அல்லது வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுவும் ஒருவகை குழந்தை தொழிலாளர் நிலையாகும்.

மூன்றாவது நிலை, மிகவும் கொடூரமான, பரிதாபமான கொத்தடிமை முறை. ஆலை உரிமையாளர்களிடம் பெற்றோர் வாங்கிய கடனுக்கு ஈடாக பெற்றோருடன் குழந்தையும் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் என்கிறார்கள். மற்றொரு நிலை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள். தவறான வழியில் பிறந்தவர்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தைகள் அனாதைகளாக திரியும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் அனாதை குழந்தைகள். சில நேரங்களில் தவறான வழிகாட்டுதலால் மோசமான பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை சிலர், பணம் ஈட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர். இவர்களும் குழந்தை தொழிலாளர்களே.


பள்ளி, கல்விச்சூழல் இல்லை

இன்னும் சிலர் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டில் வேலைக்கு வைத்துள்ளனர். இது குழந்தை தொழிலாளர் நிலையில் மோசமானது. இவ்வகையில் குழந்தைகள் சம்பளத்திற்காகவும், குடும்ப பிரச்னைகளை தீர்க்கவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர் முறைக்கு காரணம் வறுமை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், அதனால் குழ்தைகளுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த கேடுகளை அறியாதவர்களாக உள்ளனர். பள்ளி அருகாமையில் இல்லாததும் குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணமாகிவிடுகிறது. ஆர்வமூட்டும் கல்விச்சூழல் இல்லாததும் ஒரு காரணம்.இப்படி பல்வேறு காரணங்களால் முட்செடியாக வளர்ந்திருக்கும்குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டாமா? கல்வி, விளையாட்டு, குதுாகலத்திற்குமான இக்குழந்தை பருவத்தில் அவர்கள் தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் நோக்கி அனுப்பப்படுவது வேதனைக்குரியது.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்களை தீட்டி நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. தொழிலாளர் துறை சார்பில் இதற்கென மாநில குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடக்கின்றன. மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த கலெக்டர் தலைமையில் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட குழந்தைகள்மீட்கப்பட்டு, தற்போது பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனாலும் இப்பிரச்னை முற்றிலும் தீர்ந்தபாடில்லை.


32 ஆண்டுகளாகியும் பலனில்லை

தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றிட, கண்காணிப்பு முறையை செயல்படுத்துதல் என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க முடியாததற்கு காரணம் மக்கள் ஒத்துழைப்பு இல்லை. 1986ல் இயற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்து 32 ஆண்டுகளாகிவிட்டன. கடைகள் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம் இவைகளில் இருந்த வயது முரண்பாடுகள் களையப் பட்டுவிட்டன.தொழிற்சாலைகள் சட்டத்தை ஒத்தபிரிவுகளை கொண்ட பொதுச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. தொழிலாளர் துறை அலுவலர்களும், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களும் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் ஆய்வாளர்கள் என்ற நிலைமை மாறி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலர்களும் ஆய்வாளர்களே என்றசட்டதிருத்தம் மூலமாக அறிவிக்கப்பட்டனர்.


வாங்க, விற்க அனுமதிக்கக்கூடாது

இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த தொழிலும், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால், இந்தஆய்வாளர்கள் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை அறிவிக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அதுபோன்ற சூழல் ஏற்பட குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற மக்கள் இயக்கம் எழுச்சி பெற வேண்டும். ஒருபுறம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பாடுபட வேண்டும். மறுபுறம் சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் தயாரிக்கும் எந்த பொருளையும் நாம் வாங்கக்கூடாது. விற்கவும் அனுமதிக்கக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து வழக்கு தொடர தொழில்துறை, தொழிற்சாலை துறை முன்வர வேண்டும். 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை மருத்துவ துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சிகளில் உரிமம் பெற தொழிற்சாலைகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது, 'குழந்தை தொழிலாளர் பணி அமர்த்தப்படவில்லை' என உறுதி அளிக்க வேண்டும். அரசு உயர் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் குழந்தை தொழிலாளர் இல்லை என துறை தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.


மக்கள் இயக்கமாக மாறவேண்டும்

பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் ஆசிரியர்கள், குழந்தை தொழிலாளர் பிரச்னைகளை பெற்றோருக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசு விடுதிகளில் வயது வித்தியாசமின்றி தங்க அனுமதிக்க வேண்டும். ஊக்கத்தொகையும் தர வேண்டும். இவ்வாறு அரசின் அனைத்து துறைகளும், ஒரே சிந்தனையுடன் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டால், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறும். இன்றைய நாளில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சபதம் ஏற்போம்.
- எஸ்.எம். சம்சுதீன் இப்ராகீம்
சமூக ஆர்வலர், மதுரை
crescentIIc123@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X