'கமிஷன்' வாங்கிட்டு, 'கமிஷனரை' ஓரங்கட்டு...போலீசாரின் 'உள்ளே... வெளியே' விளையாட்டு!

Added : ஜூன் 12, 2018
Advertisement
பள்ளிகள் திறக்கப்பட்டதால், திருப்பூர், குமரன் ரோடு முழுவதும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. அதே வழியில், சித்ராவும், மித்ராவும் சென்ற வண்டி நெரிசலில் சிக்கி கொண்டது. இருப்பினும், சமாளித்தவாறு வண்டியை ஓட்டிய சித்ரா, ''மித்து... டவுன்ஹாலில், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு, அப்புறம் போலாம். அதுக்குள்ள டிராபிக் ரெடியாயிடும்,'' என்றவாறு, டவுன்ஹால்
 'கமிஷன்' வாங்கிட்டு, 'கமிஷனரை' ஓரங்கட்டு...போலீசாரின் 'உள்ளே... வெளியே' விளையாட்டு!

பள்ளிகள் திறக்கப்பட்டதால், திருப்பூர், குமரன் ரோடு முழுவதும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. அதே வழியில், சித்ராவும், மித்ராவும் சென்ற வண்டி நெரிசலில் சிக்கி கொண்டது. இருப்பினும், சமாளித்தவாறு வண்டியை ஓட்டிய சித்ரா, ''மித்து... டவுன்ஹாலில், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு, அப்புறம் போலாம். அதுக்குள்ள டிராபிக் ரெடியாயிடும்,'' என்றவாறு, டவுன்ஹால் மைதானத்துக்குள் இருவரும் சென்றனர்.
அங்கு பூத்துக்குலுங்கும்
மே பிளவர் மரத்தின் கீழ் இருவரும் நின்றனர். வண்டிக்குள் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்த சித்ரா, ''இந்த அநியாயத்தை கேட்டீயா. கமிஷனரை சென்னைக்கு மாத்திட்டாங்க, அதுவும் டம்மி போஸ்ட்டாம்,'' என்று ஆதங்கப்பட்டாள்.''ஆமாங்க்கா.. நல்லது செஞ்சா இவங்களுக்கு புடிக்காதே. இதுக்கு முக்கிய காரணமே, 'சவுத்'தானாம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, சென்னையில் போய் 'டேரா' போட்டு, இந்த வேலையை பண்ணிட்டாராம்,'' என்று மித்ராவும் ஆமோதித்தாள்.''அரசியல்வாதிங்களுக்குத்தான் கமிஷனரை பிடிக்கலைன்னா பரவாயில்லை. லஞ்ச ஊழலில் திளைக்கிற சில போலீஸ் அதிகாரிங்கதான், இதுக்கு முக்கிய காரணமாம்,''''வர்ற கமிஷனர் எப்படியிருப்பாரு தெரியலை. அவர், 'ரிட்டயர்மென்ட்' ஆக, இன்னும் ஒரு வருஷம்தான் இருக்காம். சரி வரட்டும் பார்க்கலாம். நேர்மையான அதிகாரி வந்தால், திருப்பூர் நல்லாருக்கும்,'' என்று புலம்பினாள் சித்ரா.
''அது சரிக்கா... கமிஷனர் டிரான்ஸ்பருன்னு தெரிஞ்சதும், ரெண்டு மூணு, அதிகாரிங்க ரகசியமா, 'பார்ட்டி' வச்சாங்களாம். அதிலே, ஆளுங்கட்சி பிரமுகர்களும் கலந்துட்டு, 'என்ஜாய்' பண்ணாங்களாம். இப்படியிருந்தா, நேர்மையான அதிகாரிங்க, எப்படிக்கா வேலை செய்ய முடியும்?'' என்றாள் மித்ரா.''நீ.. சொல்றது, நுாத்துக்கு நுாறு உண்மைதான். இப்பப்பாரு. அவர் இல்லைன்னு தெரிஞ்சதும், குறுநில மன்னர்கள், வசூல் வேட்டையில இறங்கி வாரிக்குவிக்கிறாங்களாம். குறிப்பா, கஞ்சா, ஒரு நம்பர் லாட்டரி... இப்படி சட்ட விரோத செயல்கள், கட்டப்பஞ்சாயத்து அமோகமாக நடக்குதாம்,''''பக்கத்தில் இருக்கிற வெண்ணெய்க்கு பேர் பெற்ற ஊரை சேர்ந்த ஒருவர், திருப்பூருக்குள்ள வந்து 'கஞ்சா' வித்து தள்ளுகிறாராம். இது சிட்டி போலீசுக்கு நல்லா தெரியும். ஆனா... வாங்க வேண்டியதை வாங்கிட்டு, கண்டுக்கறதில்லையாம். இப்படி நிறைய பேர், பல இடங்களில், விக்கிறாங்களாம்,''''சொல்லப்போனா, வட மாநில தொழிலாளர்கள் அதிகமா இருக்கிறதால, 'கஞ்சா' சேல்ஸ் கரைபுரண்டு ஓடுது. அதுக்கொரு அணை போட, யாரும் முன் வரமாட்டேங்கறாங்க,'' என்று விளக்கினாள் சித்ரா.''அக்கா... இந்த அக்கிரமத்தை கேளுங்க. தியாகி பழனிசாமி நகரில் உள்ள மளிகை கடையொன்றில், அனைத்து கம்பெனியோட காஸ் சிலிண்டர்களை முறைகேடாக வாங்கி, மெஷின் மூலமாக காஸ் ஏத்தி, கிலோக்கணக்கில விக்கிறாங்களாம்,''''இதைப்பத்தி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கூட, கண்டுக்கலையாம். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படுவதற்கு முன், இதை காக்கலாமே,'' என, மித்ரா கூறியதும், ''இந்த அதிகாரிங்களே இப்படித்தான். ஆரம்பத்திலேயே முடிக்காமல், அப்புறம் அவதிப்படுவாங்க,''என்றாள் சித்ரா.''அக்கா... எனக்கு பசிக்குது. வாங்க, டீயாவது சாப்பிடலாம்,'' என்ற மித்ரா, விறுவிறுவென்று, அருகிலிருந்த பேக்கரிக்குள் நுழைந்தாள். சூடாக இருந்த சமோசவை எடுத்து கொண்டு டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். ''நா... வர்றதுக்குள் அப்படி என்ன அவசரம்?'' என்ற சித்ரா, தன் பங்குக்கு சமோசா சாப்பிட ஆரம்பித்தவுடன், வெயிட்டர் வந்து நிற்கவே, ''ரெண்டு லெமன் டீ,'' ஆர்டர் செய்தாள்.'' நம்ம குணமான 'சவுத், தன்னோட ஆளை மட்டும், சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போனார்ன்னு பேசினோமே. அதேபோல, ஆனந்தமான 'மாஜியும்', தன்னோட முக்கியமான ஆதரவாளர்கள், 42 பேரை, மைசூருக்கு கூட்டிப்போய் 'பார்ட்டி' வெச்சாராம்,''''ரெண்டு நாள் முழுவதும், ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தானாம். என்ன விஷயமுன்னு விசாரிச்சா... 'சவுத்'துக்கு பலம் கூடிட்டே போகுதாம். அதனால, உள்ளாட்சி தேர்தல் வந்தால், தன்னோட பலத்தை காட்ட, இந்த அலப்பறையாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, பேக்கரியில் இருந்த 'டிவி' மக்கர் ஆகவே, ''என்ன.. மித்து. எந்த சேனலும் தெரிய மாட்டீங்குது. அரசு கேபிள் விவகாரத்தில, அதிகாரிகள் காட்டில் செம மழை பெய்யுது. தனியார் சேனல்களுக்காக, கேபிள் அதிகாரிங்களே வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியே போனா, எல்லோரும் 'டிஷ்' வாங்கி மாட்டிக்குவாங்க. பொதுசேவை மையத்துல 'சர்ட்டிபிகேட்' ரெடி பண்ற வேலைய மட்டும்தான், கேபிள் அதிகாரிங்க பார்க்கப்போறாங்க பாரு,'' என்று சித்ரா கூறி முடிக்கவும், டீ வரவும் சரியாக இருந்தது.இருவரும் டீயை குடிக்க ஆரம்பித்தவுடன், ''எதற்காக, திருப்பூர்ல மட்டும் வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் நடத்தறாங்கனு தெரியுமாக்கா?'' என கேள்வி எழுப்பினாள் மித்ரா''அங்கே கோஷ்டி பிரச்னைதான். மூணு மாசத்துக்கு முன்னாடிதான் கவுன்சிலிங் நடத்தி 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காங்க. அதுக்குள்ள, ஒரு சங்கத்து ஆட்களுக்காக, சப்-கலெக்டர் 'டிரான்ஸ்பர்' போட்டிருக்காரு. அதுல, மற்றொரு சங்கத்து ஆளுங்க அதிகம் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதனால கோபமான வி.ஏ.ஓ.,க்கள், 'டிரான்ஸ்பர்' உத்தரவை வாபஸ் பெறணும்னு சொல்லி, போராட்டம் நடத்திட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''கார்ப்ரேஷனில் வி.ஏ.ஓ. ஒருத்தர், 'லா அண்ட் ஆர்டர்' பிரச்னையில போலீசுக்கு சப்போர்ட் பண்றதில்லைனு, போலீசே புகார் கொடுத்திருக்காங்க. அதனாலதான், சப்-கலெக்டர் டிரான்ஸ்பர் பண்ணியிருக்காரு. 'டிரான்ஸ்பர்' ஏற்க முடியாது. அதுவுமில்லாமல், வில்லேஜ் துாரமா இருக்குனு, சங்க நிர்வாகிகள் பேசியிருக்காங்க''''துாரமா இருக்கற வில்லேஜ்க்கு போனா, சம்பளம் குறையுமா? ஒருவேளை குறைஞ்சாலும், நான் கொடுக்கறேன். நிர்வாக வசதிக்காக 'டிரான்ஸ்பர்' பண்ணியிருக்கோம். இதை மாத்த முடியாதுன்னு, சப்- கலெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். அதனால்தான், போராட்டம் நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.''ஏன்... மித்து.. புது எஸ்.பி., மேடம் என்ன சொல்றாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.''ரூரல் எஸ்.பி., பேர் மட்டுந்தான் மாறியிருக்கு. மத்தபடி, பெரிசா எந்த நடவடிக்கையும் இல்ல. வழக்கம்போல, 24 மணி நேர 'சரக்கு' விற்பனை, 'டிராபிக்' வசூல், கட்டப்பஞ்சாயத்து... இப்படி 'மாமூல்' மேட்டரில், ஒரு 'சேஞ்சும் இல்லை,'' என்று, 'உச்' கொட்டிய மித்ரா, ''அக்கா... கேட்க மறந்துட்டேன். 'குட்கா' விவகாரத்துல, பண மழையா கொட்டுதாம்,'' என்றாள் மித்ரா.''ஆமாம்... மித்து. அரிசிக்கடை வீதியில, போலீஸ்காரங்க, 'பான் மசாலா' ரெய்டு செஞ்சாங்க. ஒரு பெட்டிக்கடையில, கொஞ்சூண்டு, 'பான்பராக்' பாக்கெட்டை கண்டுபிடிச்சு, அதன் உரிமையாளரை அரெஸ்ட் பண்ணி, 'ரிமாண்ட்' பண்ணீட்டாங்க,''''இதனால, ஆவேசப்பட்ட, அந்த கடைக்காரரு, 'நா மட்டுமா விக்கிறேன். ஊருபூரா விக்கிறாங்க. இதோ.. அந்த கடையில போய்ப்பாருங்கன்னு, கைகாட்டுனாராம். 'டக்'குன்னு போன அதிகாரிகள், 'என்ன, குட்கா விக்கிறீங்களா?'ன்னு மிரட்டினாங்க,''''குடோன் வைச்சு, குட்கா விக்கற அந்த கடைக்காரரு, கமுக்கமாக, ஆறு இலக்க 'அமவுண்ட்' கொடுத்து தப்பிச்சாராம். நம்ம போலீசும், சிரிச்சுகிட்டே 'மேட்டரை' வாங்கிட்டு, பறந்து போய்ட்டாங்களாம்,''என்றாள் சித்ரா.''ஓ... விஷயம் அப்டி போயிடுச்சா...! காசு கொடுத்தா 'வெளியே'.. கொடுக்காட்டி 'உள்ளே'ன்னு, நல்லாவே பரமபதம் விளையாட்டை போலீஸ் விளையாடறாங்க. நல்ல பார்முலா.. போங்க,'' என்று சலித்து கொண்டாள் மித்ரா.இருவரும் டீயை குடித்து, பணம் கொடுத்துட்டு வெளியே வந்தனர். ''அக்கா... சீக்கரம் வாங்க, போலாம். பெருமாநல்லுார் ரோட்டிலுள்ள ஒரு கடையில, 'காஸ்மெட்டிக்ஸ்' வாங்கணும்,'' என்றாள் மித்ரா.''பறக்காதடி. பெருமாநல்லுார் பேரை கேட்டதும், ஒரு விஷயம் நினைவுக்கு வருது. அங்க பக்கத்துல இருக்கிற பொடாரம்பாளையத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருத்தர், ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, சூதாட்ட கிளப் நடத்துறாராம். ''அங்க வர்றவங்களுக்கு, 'சரக்கு'ம் சப்ளை பண்றாங்களாம், இதைப்பத்தி, போலீசுக்கு தெரிஞ்சும் கூட, கண்டுக்காம 'கல்லா' கட்டிட்டு, 'பிரபு'போல் இருக்காங்களாம். சொல்லப்போனா, ஏட்டு, பல ஆண்டுகளாக இங்கேயே பலமான அஸ்திவாரம் போட்டு, 'ஆனந்தமா' உட்கார்ந்திருக்காராம். இதெல்லாம், எஸ்.பி.,க்கு தெரியுமான்னு தெரியலையே,''என்று வண்டியை ஓட்டியவாறு சொன்னாள் சித்ரா.''ஆமாங்க்கா... நாம மறந்தே போயிட்டோம். லிங்கேஸ்வரர் ஊரில், ரெண்டு மண்டபங்களை மீட்டு, கோவிலுக்கு சேர்த்த மேட்டரில், காலியாக உள்ள நிலத்தைப்பத்தி அதிகாரிகள் யாரும், ஒண்ணும் கண்டுக்கலையாம். அதனால, நிலத்தையும், மண்டபத்தையும் சொந்தம் கொண்டாட, மறுபடியும், கோர்ட் படி ஏறியிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.''ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கோவில் சொத்தை மீட்டதுல இருந்த அக்கறை, மண்டபங்களை வாடகைக்கு விடுறதில், காட்டலையாம். சட்டுப்புட்டுன்னு, சுத்தம் பண்ணி, பொருளை வாங்கிப்போட்டு, மக்களுக்கு வாடகைக்கு விட்டா பரவாயில்லைதானே,'' என்ற சித்ரா, 'காஸ்மெட்டிக்ஸ்' கடை முன், வண்டியை பார்க் செய்தாள். சித்ரா, வருவதற்கு கூட, காத்திருக்காமல், கடைக்குள் வேகமாக நுழைந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X