முட்டையோடு வீட்டுக்கு சரக்கு, டெலிவரி மூடப்பட்ட கடைகளுக்கு புது முகவரி!| Dinamalar

முட்டையோடு வீட்டுக்கு சரக்கு, 'டெலிவரி' மூடப்பட்ட கடைகளுக்கு புது முகவரி!

Added : ஜூன் 12, 2018
Share
எந்தெந்த குளம் நிரம்பியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, தனது நண்பன் தமிழ்ச்செல்வனை காரை எடுத்துக் கொண்டு, வரச்சொல்லி இருந்தாள் மித்ரா. காலையிலேயே சித்ராவும் வந்து சேர, சித்திரைச்சாவடி சென்றனர் மூவரும். லேசான சாரலில் நனைந்தபடி, புது வெள்ளத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். சித்ரா கேட்டாள்...''ஏன் மித்து... இங்க தண்ணி பெருக்கெடுத்து ஓடுன மறுநாளே, வெறும் மேடு தான்
முட்டையோடு வீட்டுக்கு சரக்கு, 'டெலிவரி' மூடப்பட்ட கடைகளுக்கு புது முகவரி!

எந்தெந்த குளம் நிரம்பியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, தனது நண்பன் தமிழ்ச்செல்வனை காரை எடுத்துக் கொண்டு, வரச்சொல்லி இருந்தாள் மித்ரா. காலையிலேயே சித்ராவும் வந்து சேர, சித்திரைச்சாவடி சென்றனர் மூவரும். லேசான சாரலில் நனைந்தபடி, புது வெள்ளத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். சித்ரா கேட்டாள்...''ஏன் மித்து... இங்க தண்ணி பெருக்கெடுத்து ஓடுன மறுநாளே, வெறும் மேடு தான் தெரியுதுங்கிறாங்க. ஏன் இந்த அணைக்கட்டை சரியா துார் வாரலையா?''''அப்பிடித்தான் விவசாயிகள் வருத்தப்படுறாங்க. ஆனா, மத்த குளம் எல்லாமே, கொஞ்சம் கொஞ்சமா நிரம்பிட்டு இருக்கு. ஏற்கனவே, வாலாங்குளம், பெரியகுளம், சிங்காநல்லுார் குளமெல்லாம் நிரம்பிட்டதால, குறிச்சி குளத்துக்கு தண்ணிய திருப்பி விடுறதுக்கு வேலை நடக்குதாம்!'' என்றாள் மித்ரா.''கரெக்ட் தான்... குறிச்சி குளத்துல பசுமை பூங்கா திட்டம் அறிவிச்ச நேரமா என்னன்னு தெரியலை. மழை அடிச்சு ஊத்துது... தண்ணி நிரம்புனா, குறிச்சி குளமே அழகாயிடும். அது நிரம்புனா அடுத்து வெள்ளலுார் குளம் நிரம்பிடும். ரெண்டும் நிறைஞ்சா, சுத்து வட்டாரம் முழுக்க 'கிரவுண்ட் வாட்டர்' நல்லா 'ரீ சார்ஜ்' ஆயிடும். பார்த்தாலே, ரொம்ப சந்தோஷமா இருக்கு மித்து!'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... நிஜமாவே, நீர் நிலைகளைக் காப்பாத்துறதுல, நம்ம ஊரு தான், தமிழ்நாட்டுக்கே முன் மாதிரின்னு சொல்லலாம். இந்த வருஷம், குடிதண்ணிக்கும் பிரச்னை இருக்காது... ஏன்னா, சிறுவாணியில மழை தட்டி எடுக்குதாம். சனி, ஞாயிறு ரெண்டு நாள்ல மட்டும் 300 எம்.எம்., மழை அடிச்சிருக்கு. பில்லுாரும் நிரம்பிடுச்சு. அடுத்த வருஷம் எலக்ஷன் வரைக்கும் பிரச்னை இல்லை!'' என்றாள் மித்ரா.''எலக்ஷன்னு சொன்னதும் தான், ஞாபகம் வருது. எம்.பி., எலக்ஷனுக்கு எல்லாக் கட்சியும் வேகமா ரெடியாகுறாங்க. பெங்களூரு 'டபுள் டெக்கரை' ஒரு வழியா துவக்கிட்டாங்க. ஸ்மார்ட் சிட்டி வேலையும் 'ஸ்டார்ட்' ஆயிட்டா, பா.ஜ., காரங்க பிரசாரம் பண்ண கொஞ்சம் 'ஈஸி'யா இருக்கும். உக்கடம் பாலம் வேலை, பஸ் போர்ட், வெஸ்டர்ன் பை-பாஸ் எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டா, ஏடிஎம்கேகாரங்களும் தெம்பா ஓட்டுக் கேப்பாங்க,'' என்றாள் சித்ரா.''தி.மு.க.,வும், தேர்தலுக்குத் தயாராகுறாங்க... அதனால தான், பல பேரை பொறுப்புல இருந்து துாக்கிட்டு, புது ஆளுகளுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மத்தவுங்களை விடு... மீனா லோகு நல்லா 'ஆக்டிவ்'வாத்தான கட்சி வேலை பார்த்தாங்க. அவுங்க மேல 12 கேசு இருக்கு... வேற யாரு மேலயும் இத்தனை கேசு இருக்குமான்னு தெரியலை; அவுங்களையும் ஏன் மாத்துனாங்க?'' என்று கேட்டாள் மித்ரா.''அதான் புரியலை... குறிச்சிக்காரரை மாத்துனதும் பலருக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு. விசாரிச்சா, அவருக்கு, ஆளுங்கட்சியோட பிஸினஸ் பார்ட்னர்சிப் இருக்குற விஷயம் தெரிஞ்சு போச்சாம். அதனால தான் துாக்கிட்டதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.''அறிவாலயத்துல, புகார் வாங்குனப்போ, நம்ம ஊருல இருந்து சீனியர்ஸ் நிறைய்யப்பேரு, புகார் பண்ணிருக்காங்க... ஒரு வருஷமா, உறுப்பினர் சேர்க்கையே சுத்தமா நடக்கலையாம். வடக்குல, பணம் வாங்கிட்டு, பல பேருக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்களாம். ஆனா, முத்தான 'மாவட்டம்' என்ன சொல்றார்ன்னா, 'எனக்கு எதுவுமே தெரியாது; தளபதியே பாத்துப் போட்டதுதான்'கிறாராம். உடன் பிறப்புகளுக்கு ஒண்ணும் புரியலை,'' என்றாள் மித்ரா.''ஜாதிரீதியா பல பேரு ரகசிய தொடர்புல இருக்காங்க... சிலருக்கு டாஸ்மாக் காசு போகுதுன்னு ஏகப்பட்ட புகார் போயிருக்கு. இளங்கோன்னு சென்னை அட்வகேட் தலைமையில, சில வக்கீல்கள் இங்க வந்து ரகசிய விசாரணை நடத்தி, 'இப்ப இருக்குற 'டீம்' இருந்தா, எம்.பி., எலக்ஷன்ல தேர்றது ரொம்ப கஷ்டம்'னு ரிப்போர்ட் கொடுத்ததாலதான் இந்த நடவடிக்கைன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.''நான் கேள்விப்பட்ட வரைக்கும், இப்போ இருக்குற நாலு மாவட்டத்தை மூணா மாத்தப் போறாங்களாம். வடக்கு, தெற்கு, சிங்காநல்லுாரை மாநகர் மாவட்டம்னும், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துாரை வடக்கு மாவட்டம்னும், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலுாரை கோவை தெற்கு மாவட்டம்னும் பிரிக்கப் போறாங்களாம். இதுல, எம்.எல்.ஏ., கார்த்திக் மட்டும், மாநகர் மாவட்டமா நீடிக்க வாய்ப்பிருக்காம்,'' என்றாள் மித்ரா.லேசாக மழை வலுக்கவே, மூவரும் காருக்குள் ஓடினர். கார் புறப்பட்டு, நகரை நோக்கி வந்தது. அடாது மழையிலும், டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில், விடாது கூட்டம் மொய்த்தது. அதைக் காண்பித்த தமிழ்ச்செல்வன், 'பார்த்தீங்களா கூட்டத்தை' என்றான்.''மித்து! இப்போ, அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சிக்காரங்களுக்கும் காசு மழை கொட்டுறது, டாஸ்மாக்ல தான். கருமத்தம்பட்டியில, ரோட்டோரம் இருந்த 12 கடைகளை மூடுனதும், அந்த ஏரியாவுல இருக்குற மளிகைக்கடை, பெட்டிக்கடை, பேக்கரி, ஓட்டல்னு பல இடங்கள்ல சரக்கு விக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா! அதெல்லாம் பழைய நியூஸ்... இப்போ, சுகி, யூபர் ஈட்ஸ் மாதிரி, வீட்டுக்கே வந்து வண்டியில 'டெலிவரி' கொடுக்குறாங்களாம். அதுல போட்டியா, முட்டை, மிக்சர் பாக்கெட் எல்லாம் 'விலையில்லாம' தர்றாங்களாம்,'' என்று சிரித்தாள் மித்ரா.''இப்போ போலி சரக்கும் நிறையா புழங்குதாம்... என்னிக்காவது, உயிர்ச்சேதம்னு வர்றப்பதான், நம்ம ஆளுங்க, 'அலர்ட்' ஆவாங்க; அதுவரைக்கும் போலீஸ்காரங்க அள்ளித்தட்டுவாங்க,'' என்றாள் சித்ரா.''கோர்ட் உத்தரவுல, நம்ம மாவட்டத்துல, 49 கடைகளை மூடுனாங்களே; அதை மறுபடியும் திறக்கிறதுக்கு, 'கமர்சியல் ஏரியா'ன்னும், 'பக்கத்துல பள்ளிக்கூடம், காலேஜ், ஆஸ்பிடல் இல்லை'ன்னும் 'சர்ட்டிபிகேட்' வாங்கணுமாம். அதுக்கு தான், இப்போ எல்.பி.ஏ., சர்வே, எக்சைஸ் டிபார்ட்மென்ட்ன்னு வசூல் தட்டி எடுக்குறாங்க. ஒரு கடைக்கு, 'சர்டிபிகேட்' வாங்க, ஒரு லட்ச ரூபா செலவாகுதாம். அதுல, 'கமர்சியல் ஏரியா'ன்னு வாங்கத்தான், 70 ஆயிரம் ரூபாயாம்'' என்றாள் மித்ரா.ஒரு பேக்கரியின் முன் காரை நிறுத்தினான் தமிழ். மூவரும் இறங்கி, டீ குடிக்கச் சென்றனர். சுடச்சுட ராகி வடையையும், டீயையும் சுவைத்துக்கொண்டே கேட்டாள் சித்ரா...''கோவைக்குற்றாலத்துக்கு எப்போ அனுமதிப்பாங்க?''''அது தெரியலை... ஆனா, அங்க போலி பில் அடிச்சது, கும்கி முகாம் நிதியில விளையாடுனது சம்மந்தமா, மறுபடியும் ரகசிய விசாரணை நடக்குதாம்,'' என்றாள் மித்ரா.''அங்க பொறுப்புல இருக்குற மலை மன்னன் தான், விசாரிச்சிட்டு, 'தப்பு நடக்கலை'ன்னு அறிக்கை கொடுத்துட்டாரே. அப்புறம் இப்போ யாரு விசாரிக்கிறாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.''அங்க ரேஞ்சரா இருந்து ஏ.சி.எப்., புரமோஷன்ல போனவர் தான் விசாரிக்கிறாராம். அவர் எப்பிடியும் உண்மையான 'ரிப்போர்ட்' கொடுப்பார்னு நம்புறாங்க,'' என்றாள் மித்ரா.''இப்போ இருக்கிறவரு, திண்டுக்கல்காரருக்கு, 18 லட்ச ரூபா கொடுத்து தான் இங்க வந்தாராம். அதனால, பழைய முறைகேடுகளை தொடங்குறதுக்கு பலமா வேலை நடக்குதாம்,'' என்றாள் சித்ரா.''இப்போ இருக்கிற ரெண்டு பெரிய ஆபீசர்களுக்குமே இவரு மேல சரியான அபிப்பிராயம் இல்லியாம். ஆனா, ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்'ல வந்ததால அமைதி காக்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சி ரெகமண்டேஷன்ல வர்ற ஆபீசர்கள் ஆட்டம் தான் தாங்க முடியலை... தொண்டாமுத்துார்லயும், வடவள்ளியிலயும் பத்திரம் பதியுற ஆபீசர்கள், வசூல்ல பின்னி பெடல் எடுக்குறாங்களாம். அதுலயும், வடவள்ளி ஆபீசுல, நடுராத்திரியில எல்லாம் 'லைட்' எரியுதாம்; கேமரா சத்தம் கேக்குதாம்; ரிஜிஸ்ட்ரேஷன் நடக்குதாம்,'' என்று 'சந்திரமுகி' வடிவேலு பாணியில் இழுத்தாள் சித்ரா.பலமாக சிரித்த மித்ரா, ''அங்க விடிய விடிய வேலை நடந்தாலும் பிரச்னையில்லை; ஏன்னா, அதே ஊர்ல இருக்குற அவரோட பிரதரே பாதுகாப்பு கொடுத்திருவாரு,'' என்றாள்.''மித்து! நம்ம ஊருல மக்களுக்கு தான் பாதுகாப்பு இல்லாமப் போச்சு... 'டிவி டிபேட்'ல, தகராறு பண்ணுனவுங்க எல்லாரையும் விட்டுட்டு, நிகழ்ச்சி நடத்துன சேனல் மேல கேஸ் போட்டதெல்லாம் ரொம்பவே அநியாயம். கண்டிப்பா கேஸ் போடணும்னு உத்தரவு போட்டது யார்னு போலீஸ் ஆபீசர்கள்ட்ட ஒரு தகவல் 'சீக்ரெட்'டா பரவிட்டு இருக்கு; விசாரிச்சு சொல்றேன்!'' என்றாள் சித்ரா.பில் கொடுத்து விட்டு வந்த தமிழ்ச்செல்வன், 'மழை பெருசாகுறதுக்குள்ள கிளம்பலாம்' என்றான். மூவரும் காருக்கு ஓடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X