அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைவால்...அல்லல்படும் பயணிகள்!  தனியார் வாகனங்களில் கட்டணம் உயர்வு| Dinamalar

தமிழ்நாடு

அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைவால்...அல்லல்படும் பயணிகள்!  தனியார் வாகனங்களில் கட்டணம் உயர்வு

Added : ஜூன் 13, 2018

பந்தலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ளூரில் இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மழை காலத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.தமிழகம் மற்றும் கேரளா- கர்நாடகா மாநிலங்கள் இணையும் சந்திப்பு பகுதியில் கூடலுார் அமைந்துள்ளது.
கூடலுார், பந்தலுார் என இரண்டு தாலுகாக்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதியில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள மக்களின் பயனுக்காக, மாநில அரசின் போக்குவரத்து கழக, கூடலுார் கிளை அலுவலகத்தில் இருந்து, 48 பஸ்கள் இயக்கப் படுகின்றன.இந்த பஸ்கள், கூடலுாரில் இருந்து, கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர், உடுமலை உள்ளிட்ட நகரங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து, பெங்களூரு, மைசூர் பகுதியில் இருந்து கூடலுார் வழியாக, ஊட்டிக்கு பஸ் இயக்கப்படுகிறது.கேரள மாநிலம் கோழிக்கோடு, பெருந்தல்மன்னா, சுல்தான்பத்தேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, கூடலுாருக்கு கேரள அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதனால், மூன்று மாநில பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதை தவிர, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிரமப்படும் உள்ளூர் மக்கள்
இந்த சூழ்நிலையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போதிய அரசு பஸ் வசதி இல்லை. இதனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களை கிராம மக்கள், கூடுதல் கட்டணம் கொடுத்து பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பஸ் குறைவு காரணமாக, கூடலுாரில் மட்டும், பயணிகளுக்காக, 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, நாடுகாணி, தேவாலா,பந்தலுார், உப்பட்டி, கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, பிதர்காடு, நெலாக்கோட்டை,தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில், 3,000 ஆட்டோக்கள்; 200 டாக்சி ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பயண கட்டணமும் அதிகரித்து வருவதால், தனியார் வாகனங்களில் செல்லும் பயணிகள், தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை வாகனங்களுக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மாற்றம் வந்தும் மாறவில்லை
இப்பகுதிகளில் பஸ் கட்டணத்தைவிட, இரண்டு மடங்கு அதிக கட்டணம் வசூலித்ததால், இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 'டாக்சி' ஜீப்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்கு பதில், கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதன் காரணமாக, பயணிகள் மீண்டும் தனியார் வாகனங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உள்ளூர் பஸ்கள் அவசியம்
இப்பகுதி மக்கள் கூறுகையில், ' கூடலுார், பந்தலுார் பஸ் பிரச்னைக்கு தீர்வு காண, கூடலுார் அரசு மருத்துவமனை, முதல்மைல், நாடுகாணி, பந்தலுார்,தேவர்சோலை பகுதிகளுக்கும் டவுன் பஸ் இயக்க வேண்டும்.மேலும், பந்தலுாரில் இருந்து பொன்னானி, பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, கையுன்னி,எருமாடு, தாளூர் வழித்தடத்திலும் மினி பஸ்களை இயக்க வேண்டும்.அப்போது, ஓரளவு பிரச்னை குறையும். நாள்தோறும் கூடலுாரிலிருந்து இயக்கப்படும், குறைந்தளவிலான பஸ்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணிப்பதால், பிற பயணிகளால் பயணம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது.இந்த பிரச்னைக்கு கலெக்டர் தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
35 ஆயிரம் பேர் பயணம்!
கூடலுார் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகி சிவசுப்ரமணியம் கூறியதாவது:'கூடலுார்- பந்தலுார் வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்க வேண்டும்,' என்ற கோரிக்கை, கடந்த, 2004ம் ஆண்டு முதல் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பந்தலுார், பொன்னானி, குந்தலாடி, பாட்டவயல் மற்றும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி வழித்தடம், சேரம்பாடி, தாளூர் வழித்தடங்களில் குறைந்து, 150 பயணிகளுடன் அரசு பஸ் இயக்கப்படுகிறது. நாள்தோறும், 5,000 மாணவர்கள்; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு இயக்கப்படும் குறைந்த பட்ச அரசு பஸ்களை நம்பியுள்ளனர்.
கூடலுார்- பந்தலுார்- பாட்டவயல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில், நிர்வாகம் நிர்ணயித்துள்ள வருவாயை விட கூடுதலாக வருவாய் இருந்தும், பழைய பழுதடைந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, பிற பகுதிகளை போலவே, இப்பகுதிகளுக்கு புதிய பஸ்களை இயக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X