நமக்கல்லவா வேண்டும் கவனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நமக்கல்லவா வேண்டும் கவனம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 நமக்கல்லவா வேண்டும் கவனம்


'எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னைஇடற வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலேஅத்தனையும் தாண்டி காலை முன் வையடா- நீஅஞ்சாமல் கடமையிலே கண் வையடா...'இது சினிமா பாடல் தான். ஆனாலும் சிந்திக்க வைக்கும் வரிகள். எந்த மனிதரானாலும், எந்த நிலையிலும், எந்த நேரமும் கவனமாக இல்லையென்றால், சில பாதகமான நிகழ்வுகளும், எதிர்மறை சூழ்நிலைகளும், அவர்களை ஓங்கி அடித்து உட்கார வைத்து விடும். தேங்கி நிற்க வைத்து, தேம்பி அழ வைத்து விடும்.
மாணவர்கள்ஒவ்வொரு பரிட்சையிலும் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக ஓட வேண்டும். நல்ல மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்று நல்ல பதவியில் சேர வேண்டும். குடும்ப நிலையை உயர்த்துவதற்கு தந்தையோடு தோள் கொடுக்க வேண்டும். ஆனால், படிக்க உட்காரும் போதெல்லாம், மின்தடை, திருவிழா சத்தம், கட்சிக் கூட்டங்களின் பிரசார கூச்சல், சுற்றி நடக்கும் திருமண விழாக்களின் திரைப்பாடல்களின் சத்தம், விருந்தாளிகளின் வருகை, நண்பர்களின் கட்டாய சினிமா அழைப்புகள், வீட்டு பிரச்னைகள்... இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சிறப்பாக படித்து, சிறந்த மதிப்பெண் வாங்க வேண்டுமானால், மாணவர்களுக்கு வேண்டும் படிப்பின் மீது கவனமும் அக்கறையும்.

இளைஞர்கள்நல்லது கெட்டது அறியாத வயது. அட்வைஸ்களை அலட்சியம் செய்யும் வயது. எளிதில் கவர்ச்சிகளுக்கு இரையாகும் வயது. உணர்ச்சிகளுக்கு உணவாகும் வயது. எதிர்கால இலக்குகளை தீர்மானித்து கொள்ள வேண்டிய வயது. ஆனால், அவர்களை சுற்றி எத்தனை சூழல்கள்? சூறாவளிகள்? புதை குழிகள்? காலத்தையும் கவனத்தையும் திசை திருப்பும், அதிநவீன அலைபேசிகள், வாட்ஸ் ஆப், இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் மயக்கம், அளவுக்கு மீறிய கிரிக்கெட்மோகம், பிடித்த கதாநாயகனின் படமா? முதல் நாளே முதல் காட்சியை நண்பர்களுடன் பார்த்தே ஆக வேண்டும். டிக்கெட் விலை? அப்பா தானே தருகிறார். பார்த்தால் மட்டும் போதாதே.
நடிகர்கள் கோடிகளில் புரள, இவர்கள் தெருக்கோடிகளில் கட் அவுட் வைத்து, பால் அபிேஷகம் செய்கிறார்கள்.தாய்க் குலத்தை தண்ணீருக்கு அலைய வைத்து, குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரிக்கை செய்து கொண்டே, வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்து,'டார்கெட்' போட்டு மார்க்கெட் செய்து வரும் நாற்காலி ஆசைகளோடு நாட்களை நகர்த்தும் தலைவர்களிடம் அப்படி என்ன தான்விசுவாசமோ இந்த இளைஞர்களுக்கு? தங்கள் வருங்கால வண்ண கனவுகள் வானவில் போலவே மறைந்து போவது தெரியாமல் வாழும் இவர்களுக்கல்லவா வேண்டும் எதிர்காலம் பற்றிய கவனம்?
குடும்பத்தலைவன்வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அடுத்து ஒரு பெண் குழந்தை, மூன்றாவதும் பெண் குழந்தை. குடும்ப தலைவனோ மாத சம்பளக்காரன். முப்பதுநாள் செலவுகளுக்கே மூச்சு முட்டுகிறது. இதில் மூன்று பெண் குழந்தைகளின் கல்வி செலவு, கல்யாண செலவு. கவலைப்பட்டால் போதுமா? பையனோ, பெண்ணோ, வளர்ந்துவிட்டார்கள், அவர்களுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகி விட்டது. பழக்க வழக்கங்களில் மாறுதல் வந்து விட்டது.
இந்த நிலையில் பெற்றோருக்கு வர வேண்டாமா, பொறுப்பும் கவனமும்? பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள்? எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அதுதானே குடும்ப தலைவனுக்கு வேண்டிய கூடுதல் கவனம்?
குடும்பத் தலைவி
குடும்ப தலைவி என்றால் வேலைக்கு சென்று சம்பாதித்து வராமல், வீட்டிலேயே இருப்பவர் மட்டுமல்ல வேலைக்கு போனாலும் வீட்டு வேலைகள் மொத்தமும் இவர் தலையில் தானே. குழந்தைகளை வளர்ப்பதிலும் பெரும் பங்கு இவருடையது தான். குழந்தைகளை குளிப்பாட்டி, உடையணிவித்து... குளிப்பாட்டினால் மட்டும் போதுமா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதில் அல்லவா இருக்க வேண்டும் கவனம்? இவர் கவனமாக இருக்க வேண்டிய இன்னொரு விஷயம், கேஸ் ஸ்டவ். அடுப்பை அணைக்க மறந்து, அடுத்த வீட்டு பெண்ணோடு அரட்டை அடிக்க போகலாமா? பகல் நேரங்களில் அநேகமாக குடும்ப தலைவிகள் தனியாக தான் இருப்பார்கள்.
அந்த நேரத்தில் கதவை தட்டுபவர்கள் எல்லோரும் கண்ணியமானவர்கள் என்று சொல்லமுடியுமா? கொஞ்சம் அசந்தால் போதும். வீடும் காலி, உயிரும் காலி. வெளியில் இருப்பதை விட, வீட்டில் இருப்பது பாதுகாப்பானது தான். அங்கும் கவனம் தேவை தானே!
வாகன ஓட்டிகள்முக்கியமாக டூவீலரை ஓட்டுபவர்கள். இரண்டடி அகல இடம் கிடைத்தால் கூட போதும் இவர்களுக்கு. ஆனால், அதில் தானே ஆபத்தும் இருக்கிறது. தவிர சாலைகளும் சரியில்லை.ஆங்காங்கே பள்ளங்களுக்கு பஞ்சமில்லை. சாலை விதிகளை பற்றி சற்றும் கவலைபடாத சில சாரதிகள் சகட்டுமேனிக்கு திடீரென்று குறுக்கே பாய்வார்கள். சடன் பிரேக் போடுவார்கள். அதிலும் பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுவர்கள் வண்டி ஓட்டுவது இன்று வழக்கமாகிவிட்டது.
சைக்கிள்?
அதுவும் ஒரு வாகனம் தானே! அதில் முன் விளக்கும் இருக்காது. பின் விளக்கும் இருக்காது. இடது, வலதை காட்டும் இண்டிகேட்டரும் இருக்காது. கையை காட்டாமல் திடீரென்று திரும்புவது சாதாரணம். பின்னால் வருகிறவர்கள் என்ன தான் செய்வார்கள்? மோதி விழுந்த பின், சத்தம் போட்டு, சண்டை போட்டு என்ன ஆகப்போகிறது? நமது பாதுகாப்பு தானே நமக்கு முக்கியம்? நமக்கு தானே இருக்க வேண்டும் நாலு பக்கமும் கவனம்?
வாக்காளர்கள்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை அல்லது அதற்கு முன்னால் தேர்தல் வருகிறது. அதாவது நாட்டை நல்ல விதமாக ஆட்சி செய்து நமக்கு எல்லா நன்மைகளும் செய்வார்கள் என்று நம்பித்தானே தேர்ந்தெடுக்கிறோம். அதாவது 'என்னை நீ ஆட்சி செய்' என்று நாமே ஒருவனை அரியணையில் அமர்த்துகிறோம். எவ்வளவு பெருமையான பொறுப்பான விஷயம் இது. போயும் போயும் தவறு செய்யலாமா? செய்தால் என்ன ஆகும்? பணம், கவர்ச்சியான வாக்குறுதிகள், ஜாதி சார்பு, இதற்கெல்லாம் அடிமையாக இருக்க போவது யார்? இவர்கள் தானே! அவர்கள் கோடிகளில். இவர்களும் கோடியில்; இலவசங்களுக்கான வரிசையில் கோடியில்! ஓட்டு கேட்கும் போது வாசல் தேடி வந்தவர்களை, கோரிக்கையோடு பிறகு தேடி போனால் குறுக்கே பலர். ஆக ஓட்டளிக்கும் போது நமக்கு வேண்டாமா கவனம்?
அரசு ஊழியர்கள்
அரசு பணிகள் அத்தனையுமே கோப்புகள் மூலம் தான் நடக்கின்றன. ஒரு சில உத்தரவுகள் வாய்மொழி- அவை விதிவிலக்கு. ஒவ்வொரு கோப்பும் பல மட்டங்களில், பலருடைய ஒப்புதலும் கருத்துக்களும் கொண்டது தான். இதில் கையெழுத்திடுவதும், குறிப்பெழுதுவதும் பல வருடங்களுக்கு பேசுமா இல்லையா? ஆகவே, இதில் ஆசை, அலட்சியம், அறியாமை காரணமாகவோ, சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தாலோ, மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவோ, இவர்கள் போடும் ஒரு கையெழுத்து, எழுதும் ஒரு தவறானகுறிப்பு, என்றைக்காவது ஒருநாள் உபத்திரவம் தராமல் விடாது.பணி நிறைவுக்கு முதல் நாள் கூட, பதவியில் உள்ள பலர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி களைப் படிக்கிறோமே. கோப்புகளில் குறிப்பெழுதும் முன், கையெழுத்திடுமுன் இவர்களுக்கு இருக்க வேண்டாமா கவனம்?
பதவி என்றாலே அங்கே பந்தாவுக்கு பஞ்சமேஇருக்காது. எந்த பதவியாக இருந்தாலும், கீழே இருப்பவர்களிடம் பந்தா காட்டுவதும், மேலே இருப்பவர்களிடம் பணிந்து நடப்பதும், தவிர்க்க முடியாத ஒரு நடைமுறை.இந்த சூழ்நிலையில் அதாவது நெருங்கினால் சூடுபட்டு கொள்ள வேண்டும். விலகினால் குளிர் காய முடியாது என்கிற சூழ்நிலையில், அரசு பணியில் இருப்பவர்கள் மேலிடத்தில்எப்படி நடந்து கொள்ளவேண்டும்? மிகமிக எச்சரிக்கையாக!
பொதுவாக
உடல்நலன் பேணுவது வாழ்வில் முக்கியமானது. இரண்டாவது பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது, வீட்டிலும் வெளியிலும் நிம்மதியாக காலம் தள்ள மனித உறவுகளில் இணக்கமாக மட்டுமல்ல, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காட்டில் சிங்கம் எது, சிறுத்தை எது, மான் எது, மயில் எது என்பதை பார்த்தாலே தெரிந்து விடும். மனிதர்களில் யார் பூனை, யார் கழுதை, யார் பசு, யார் எருமை என்பது எப்படி தெரியும்? நெருங்கிப் பழகுவதா, விலகியிருப்பதா என்பதில் மிகமிக கவனமாக இருக்க வேண்டியது நாம் தானே!''வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்துாறு போலக் கெடும்'
தீங்கு வருவதற்கு முன்பே கவனம் காட்டாதவனின் வாழ்க்கை நெருப்பின் முன் வைத்த வைக்கோல் போல அழிந்து விடும்.
-தங்கவேலு மாரிமுத்து
எழுத்தாளர், திண்டுக்கல்93603 27848

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
14-ஜூன்-201817:20:13 IST Report Abuse
madhavan rajan மிகவும் சிறப்பான அறிவுரைகள். கேட்டுக்கொள்வதற்குத்தான் இன்றைய இளைய தலைமுறைக்கும், ஏன் பெரியவர்களுக்கு கூட நேரமில்லை, பொறுமையில்லை, சிந்தித்து சீர்திருத்தம் செய்து கொள்வதற்கு தயாரில்லை. பிள்ளைகள் கெட்டுப்போவதில் பல பெற்றோர்களுக்கும் பெரும்பங்குண்டு. சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு எவ்வளவு பெற்றோர்கள் சாலை சிவப்பு விளக்குகளை மதிக்காமல் வண்டி ஓட்டுவது நாம் தினந்தோறும் காணும் காட்சியாகும். மூன்று, நான்கு நபர்களை வைத்து இரு சக்கர வாகனம் பல பெரியவர்கள் ஓட்டுவது அன்றாடம் எல்லா ஊர்களிலும் காணலாம். தலைக்கவசம் நம்முடைய பாதுகாப்பிற்கு என்று பலர் உணர்வதே இல்லை. தெரிந்தாலும் அலட்சியம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். வருமுன் காப்போம் என்பதைக் கடைப்பிடிப்பதில் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயம் அக்கறையில்லை. நம் தவறுக்கு தண்டனை கிடைத்தபிறகு அரசைக் குறை சொல்வது மற்றவர்களைக் குறை கூறுவது அதிகம். நீதிமன்றத்தின் ஆணையைக்கூட பல நேரங்களில் மதிப்பதில்லை. என்று திருந்துவார்களோ .. இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X