சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர். நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மேலும் இந்த வழக்கில் புதிர் எழுந்துள்ளது. இந்த வழக்கு 3வதாக ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட விரிசலில், சசிகலா அணியில் இருந்த பழனிசாமி, முதல்வராக நியமிக்கப்பட்டார்; பன்னீர்செல்வம், எதிர் அணியில் இருந்தார். ஒரு கட்டத்தில், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கை கோர்த்தனர். பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து, சசிகலாவை
நீக்கினர்.
இந்நிலையில், சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த, நீதிபதி துரைசாமி, 18
தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தார். பின், அந்த மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. வழக்கை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, அந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சபாநாயகர், சட்ட சபை செயலர், கொறடா,
முதல்வர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள், அரிமா சுந்தரம், முகுல் ரோஹத்கி, வைத்தியநாதன் ஆகியோரும் ஆஜராகினர்.
தினகரன் கருத்து
தமிழகமே எதிர்பார்த்த இந்த தீர்ப்பு இது. ஆனால் மாறுபட்ட தீர்ப்பால் மக்கள் விரோத அரசு நீடிக்க நீதிமன்றம் வழி செய்துள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எங்களோடு தான் இருக்கின்றனர். இவ்வாறு தினகரன் கூறினார்.
தீர்வு இல்லாத தீர்ப்பு : தமிழிசை
இன்று வெளியான தீர்ப்பால் எந்த தீர்வும் இல்லாமல் போனது. அணுகுண்டும் இல்லை, புஷ்வானமும் இல்லை. ஊசிவெடியாய் போனது. 3 வது நீதிபதி என்ன சொல்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் என பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (12)
Reply
Reply
Reply