சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், வெவ்வேறு தீர்ப்புகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று பிறப்பித்தது. இதனால், பட்டாசு, இனிப்புடன் கொண்டாட தயாராக இருந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 'தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முடியாது' என, தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி, சபாநாயகர் உத்தரவை ரத்து செய்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட, 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து, கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, 2017 செப்டம்பர், 18ல், சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.
இடைக்கால உத்தரவு :
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். முதலில், இந்த வழக்கு, நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது என, நீதிபதி இடைக்கால உத்தரவிட்டார். பின், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், வழக்கு விசாரணைக்கு சென்றது.
நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் சட்ட முக்கியத்துவம் கருதி, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்தது.
சபாநாயகர், சட்டசபை செயலர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசு கொறடா சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினர். முதல்வர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆகியோரும், 18 பேர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோரும் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, 2018 ஜன., 23ல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. வழக்கின் தீர்ப்பு, நேற்று வழங்கப்பட்டது. பிற்பகல், 1:1௦க்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர், நீதிமன்ற ஹாலுக்கு வந்தனர். பிற்பகல், 1:40 மணிக்கு, வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முதலில், தலைமை நீதிபதி, தன் தீர்ப்பை வாசித்தார். பின், நீதிபதி, எம்.சுந்தர், தன் தீர்ப்பை வாசித்தார்.
தலைமை நீதிபதி உத்தரவில், 'சபாநாயகரின் முடிவு விபரீதமானதாக இல்லை என்றால், நீதிமன்றம் தலையிடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'தமிழக சபாநாயகரின் முடிவு, நியாயமற்றது எனக் கூற முடியாது; அதில், குறுக்கிடத் தேவையில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, கூறியுள்ளார்.
உள்நோக்கம் :
நீதிபதி சுந்தர் உத்தரவில், 'இயற்கை நீதி பின்பற்றப்படவில்லை. சபாநாயகரின் உத்தரவு, உள்நோக்கம் கொண்டது; எனவே, சபாநாயகரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, கூறியுள்ளார். மொத்தம், 325 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதியின் உத்தரவு, 192 பக்கங்களிலும், நீதிபதி சுந்தரின் உத்தரவு, 133 பக்கங்களிலும் உள்ளன. இரு நீதிபதிகளும், வெவ்வேறான உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இவ்வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மூன்றாவது நீதிபதி யார் என்பதை, தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக உள்ள, நீதிபதி எச்.ஜி.ரமேஷ் முடிவு செய்வார். உயர் நீதிமன்றத்தில் உள்ள மூத்த நீதிபதிகளில் ஒருவர், மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்படுவார். இரு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து, வழக்கின் முடிவு அமையும்.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், 18 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,
பி.எஸ்.ராமன், 'மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளிக்கும் வரை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர வேண்டும்' என்றார். இதை ஏற்று, இடைக்கால உத்தரவு தொடர்வதாக, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பில், தினகரன் வட்டாரம், பட்டாசு, இனிப்புடன் கொண்டாட தயாராக இருந்தது. தீர்வு கிடைக்காமல் போனதால், ஏமாற்றம் அடைந்தது.
அதேபோல், ஆட்சி கவிழும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, எதிர்க்கட்சிகள் முகாமும் களையிழந்தது. ஆவலுடன் எதிர்பார்த்த, ஆளும் கட்சி வட்டாரமும், இறுதி முடிவு தெரியாததால், அதிருப்தி அடைந்தது. ஆனாலும், மீண்டும் விசாரணை என காலம் கடத்தப்படும் என்பதால், அதுவரை, பதவிக்கு பாதிப்பில்லை என, ஆறுதல் அடைந்தது.
மாறுபட்ட தீர்ப்பை வழங்குவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே, தனியார், 'டிவி' சேனல்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வகுத்த விதிகளை எதிர்த்து, இரண்டு, 'டிவி' நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்தனர். இதையடுத்து, மூன்றாவதாக, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரணைக்கு சென்றது. தலைமை நீதிபதியின் உத்தரவில் உடன்படுவதாக, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தீர்ப்பு அளித்தார். தற்போது, இரண்டாவதாக, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கிலும், மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (99)
Reply
Reply
Reply