கொக்கு பறக்குதடி பாப்பா! நாளை தியாகி விஸ்வநாததாஸ் பிறந்ததினம்| Dinamalar

கொக்கு பறக்குதடி பாப்பா! நாளை தியாகி விஸ்வநாததாஸ் பிறந்ததினம்

Added : ஜூன் 15, 2018
கொக்கு பறக்குதடி பாப்பா!  நாளை தியாகி விஸ்வநாததாஸ் பிறந்ததினம்

தம்மிடம் இருக்கும் செல்வம், புகழ், திறமை இவற்றை நாட்டின் விடுதலைக்காக பயன்படுத்தி மக்களிடம் எழுச்சியுண்டாக்கி அவர்களை தேசவிடுதலைப் பணிக்கு பலதலைவர்கள் அழைத்துச்சென்றனர்.
ஆர்ப்பாட்டம், மறியல், கடையடைப்பு, பொதுக்கூட்டம், ஊர்வலம் என்று நகர்ந்தன விடுதலைப் போராட்டக் களங்கள். ஆனால் மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் மூலம் விடுதலைநெருப்பைப் பற்றவைக்க திலகர் போன்ற தலைவர்கள் தீபாவளி,விநாயகர் சதுர்த்தி விழாக்களைபயன்படுத்தினர். அப்பண்டிகைகள் மூலம் நமது மண்ணின், மக்களின் வரலாற்று பெருமையை உணர்த்தி மக்களை ஒருங்கிணைத்தனர்.
இப்படி அடிமைக்கால இந்தியாவின் துயர் துடைக்க துடிப்புடன் களம் கண்ட தியாகத் தலைவர்கள் ஏராளம்.ஆனால் இன்னும் பல தியாகிகளின் வரலாறு ஒரு பெட்டகத்தில் அடைத்து வைத்துஇருக்கும் புத்தகத்தைப் போலபலருக்கும் தெரியாமலே ஒளிந்துகிடக்கிறது. அப்படிபலரால் அறியப்படாமல் வரலாற்று ஏடுகளில் மறைந்து கிடக்கும் ஒருவர் தான் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்.

நாடக அரங்கு
தியாகி விஸ்வநாததாஸ் 1886ம் ஆண்டு ஜூன் 16ல் அன்றைய ஒருங்கிணைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் சிவகாசியில் ஒரு ஏழை முடிதிருத்தும் மருத்துவர் குடும்பத்தில் பிறந்தார். இயற்பெயர் தாசரிதாஸ். சிறுவயதிலேயே இசை, நாடக, நாட்டியத்தில் ஈடுபாடுகொண்டார். இதை அறிந்த தந்தை சுப்பிரமணியம் கலைத்துறையில் தேர்ச்சிபெற கல்வியறிவு அவசியம் எனக் கருதிமகனைப் பள்ளிக்கு அனுப்பினார். மருத்துவக் குலத்தில் பிறந்ததால் திண்ணைப் பள்ளியில் கூட ஒதுக்கப்பட்ட மாணவனாக இருந்தார். மனம் நொந்தார். இதனால் பள்ளிப்படிப்பில் நாட்டம் குறைந்தது. மனம் நாடகக் கலையைநோக்கி நடைபோட்டது.
சிவகாசிமற்றும் அருகிலுள்ள கிராமங்களில் நாடகம், கூத்து எங்கு நடந்தாலும் அவற்றைப் பார்க்கச் சென்றுவிடுவார். பின் நாடகஅரங்கமே அவரின் கல்விக்கூடமாகியது. நாடகக்கலையில் தேர்ந்து சிறப்பினைப் பெற்றார்.காந்தி துாத்துக்குடி வந்தபொழுது நாடக மேடையொன்றில் பாடிய பாடல் ஒன்றுமக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது. பெரும் மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் இவரின் திறமையை கண்டுவியந்தார் காந்தி.
“உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தேசசேவைக்கு உன்னை அர்ப்பணித்துக் கொள்”என்று காந்தியிடம் பாராட்டுப் பத்திரம் வாங்கிய பின்னர் விஸ்வநாததாஸ், தான் மேடையேறும் ஒவ்வொரு நாடகத்திலும் தேசவிழிப்புணர்வு பாடல்களைப் பாடினார்.பாமரர்களை ஈர்த்த பாமரன்வயலுக்கு நீர் பாய்ச்சிகளைப்பில் அமர்ந்து நாடகம் பார்க்கும் பாமரமக்களின்உள்ளத்தில் தன் அசாத்திய நடிப்பிலும் கம்பீரமானகுரல் வலிமையாலும் தேசபக்தியை புகுத்தினார் தாஸ்.

அந்நியப் பொருட்களை வாங்காமல் சுதேசி பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வ.உ.சி.,சுப்பிரமணிய சிவா மேடைகளில் முழங்கியதைக் கேட்டு தான் நடித்த ஒரு நாடகத்தில்“அந்நியத் துணிகளை வாங்காதீர்உள்நாட்டுத் துணிகளை வாங்குவீர்…''எனப் பாட, பார்வையாளர் ஒருவர் தான் அணிந்திருந்த அந்நியத் துணியை கழற்றி மேடை யிலேயே தீவைத்து எரித்தார். இதனையறிந்த விஸ்வநாததாஸ் தனது கதராடையை அவரிடம் தந்து அணியச் செய்தார்.புராணம், சரித்திரம் என எந்தநாடகமாக இருந்தாலும் தேசபக்தி பாடல்களைப்பாடும் படிமக்கள் தாஸிடம் கேட்கஆரம்பித்தனர்.
வள்ளி திருமண நாடகத்தில் வேடனாக வந்த விஸ்வநாததாஸ் தாய் நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளையனைப் பற்றி,''கொக்கு பறக்குதடி பாப்பா-நீயும்கோபமின்றி கூப்பிடடி பாப்பாகொக்கென்றால் கொக்குகொக்கு - அதுநம்மைகொல்ல வந்த கொக்கு வர்த்தகம் செய்ய வந்த கொக்கு-நமது வாழ்க்கையைக் கெடுக்கவந்த கொக்கு! அக்கரைச் சீமைவிட்டுவந்து - இங்கே கொள்ளைஅடிக்குதடிபாப்பா!''என்று பாடியவுடன் அரங்கம் அதிர எழுந்த பாமர மக்களின் கைதட்டல் ஆங்கில காவல்துறையின் காதுகளைத் தொட்டது,நெஞ்சைத் துளைத்தது. இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக்கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.
மகனுக்கு ஓர் கடிதம்
தடையாணையில் “விஸ்வநாததாஸ் மேடைகளில் தொடர்ந்து ராஜ துரோக பாடலை பாடி வருகிறார். அவ்வாறு பாடுவதை அவர் நிறுத்தவேண்டும், காவல் துறையினர் அவரைபுலிகள் போல் பின் தொடர்ந்து வருகின்றனர்” எனகுறிப்பிடப்பட்டிருந்தது. எத்தனை புலிகள் வந்தாலும் அஞ்சப் போவதில்லை என முழங்கியதோடு, “போலிஸ் புலிக்கூட்டம் நம்மேல்போட்டு வருகிறது கண்ணோட்டம்”என்றுபாடி ஆங்கில அரசை அதிரவைத்தார். இதனால் விஸ்வநாததாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும் பொழுது அவரின் மூத்தமகன் சுப்பிரமணிய தாஸ் மேடைகளில் தேசபக்திப் பாடல்களை தொடர்ந்துபாடினார். மகனையும் கைது செய்தனர்.
அப்பொழுதுதான் திருமணமாகியிருந்த சுப்பிரமணியதாஸிடம்,“இனிமேல் தேசவிடுதலை பற்றி எந்த மேடையிலும் பேச மாட்டேன், பாடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் உன்னைவிடுதலைசெய்கிறோம்'' என்றனர் ஆங்கில அதிகாரிகள். தனதுதந்தையிடம் இது பற்றி கருத்து கேட்டபோது பட்டாசாக வெடித்த விஸ்வநாததாஸ்,“மகனே! நீமன்னிப்புகேட்டு மானமிழந்துமனைவியுடன் வாழ்வதை விட சிறையிலேயேமாவீரனாகச் செத்துவிடு”. என்று கடிதம் அனுப்பினார்.
முருகப் பெருமானுக்கு ஒரு வாரண்ட்
நெல்லையில் வள்ளி திருமண நாடகத்தில் கொக்குபறக்குதடி பாப்பா பாடலைபாடுகிறார் விஸ்வநாததாஸ். முடிவில் மேடைக்கு வந்த போலிஸ் ஆங்கில அரசுக்கு எதிராக பாடியதால் உங்களைக் கைதுசெய்கிறோம் எனக் கூற யாருக்கு வாரண்ட் எனக் கேட்க விஸ்வநாததாஸ்க்கு என காவலர்கள் பதிலளித்தனர். இந்தப் பாடலைப் பாடியதுநான் இல்லை; முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் வந்துபாடினார்.
எனவே முருகப்பெருமான் பேரில் வாரண்ட் கொண்டாங்க என்று விஸ்வநாததாஸ் கூறியதும் குழம்பிப் போயினர் காவலர்கள். மிகவும் சாமர்த்திய கலைஞர் விஸ்வநாததாஸ். ஒவ்வொருமுறை அவருக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடனே வார்த்தைகளைச்சேர்க்கும் ஆங்கில அரசு.வயது 52; சிறைச்சாலை 29சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நாடகம் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஸ்வநாததாஸ் மூன்றாம் நாள் மேடையேறினார். வள்ளிதிருமண நாடகத்தில் முருகன் வேடத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து தேசபக்திபாடல்களைப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரின் உயிர் பிரிந்தது.
பாமர மக்களின் மனதைகலை என்னும் உளிகொண்டு திறந்து அதில் தேசபக்தியை நிரப்பிவிட்டு விஸ்வநாததாஸ் மறைந்தநாள் டிசம்பர் 31, 1940. அவர் 52 ஆண்டுகளே இந்தமண்ணில் வாழ்ந்தபோதிலும் இருபத்தொன்பது முறை சிறைசென்று இந்ததேசத்தின் விடுதலைக்காக போராடியவர். கிராமங்கள் தோறும் தேசபக்திமணம் பரப்பிய இவரைப் போல் வரலாற்றில் மறக்கப்பட்ட தியாகிகளை நினைவு கூர்வோம்.
முனைவர்.சி.செல்லப்பாண்டியன்
உதவிப் பேராசிரியர்
அருப்புக்கோட்டை
78108 41550

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X