முன்னேற்றப் பாதையில் முன்னேறுவோம்!| Dinamalar

முன்னேற்றப் பாதையில் முன்னேறுவோம்!

Added : ஜூன் 16, 2018 | கருத்துகள் (3)
Share
 முன்னேற்றப் பாதையில் முன்னேறுவோம்!

சுதந்திரமடைந்த நாள் முதல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு நிர்வாகத்தின் கீழ் தான், நாடு நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் பிப்ரவரியில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, புதிய வரி போடுவது மீதிருந்த ஆர்வத்தில், 1 சதவீதம் கூட, மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில், காங்கிரஸ் காட்டியதில்லை.இங்கே தமிழகத்தில், நிலைமை வேறு விதமாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தால், தி.மு.க.,வாக இருந்தாலும், அ.தி.மு.க.,வாக இருந்தாலும், அரசு அறிமுகப்படுத்தும் மக்கள் நல திட்டங்களை கண்ணை மூடி, எதிர்ப்பது தான் வழக்கமாக உள்ளது. இப்போது, தி.மு.க.,வின் முறை...பழனிசாமி அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு அது நன்மை பயப்பதாக இருந்தாலும், தி.மு.க.,வுக்கு பிடிக்காது. தானும் எதிர்த்து, கூட்டணி கட்சிகளையும், கூட்டாளி அமைப்புகளையும் துாண்டி விட்டு, தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருப்பதில், இப்போதைய தலைவர் ஸ்டாலினுக்கு கொள்ளை மகிழ்ச்சி.மத்தியில், முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த, பாரதிய ஜனதாவின், வாஜ்பாய் அரசு, 13 நாட்களில், ஜெயலலிதாவின் முரட்டுப் பிடிவாதத்தால் கவிழ்க்கப்பட்டாலும், மீண்டும் ஆட்சியில் அமர்ந்த போது, தங்க நாற்கர சாலைத் திட்டத்தை அறிமுகம் செய்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, சாலை அமைக்கும் திட்டம் வந்தது.அதன் பின், நாட்டின் சாலை போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அதற்கு முன், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு, 173 கி.மீ., சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால், குறைந்தது, 4 - 5 மணி நேரம் ஆகும். அதுவும், குண்டும், குழியுமான, வளைவுகள், திருப்பங்கள் நிறைந்த சாலையில் தான் பயணிக்க வேண்டும்.தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, இ.சி.ஆர்., எனப்படும், கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கப்பட்ட பின், சென்னை டூ பாண்டிச்சேரி சாலை மார்க்க பயண நேரம், மூன்று மணி நேரமாக குறைந்துள்ளது.அதே காலக்கட்டத்தில், செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையும் சீரமைக்கப் பட்டதில், தெற்கு நோக்கி, சாலையில் வாகனங்கள் வழுக்கிச் செல்கின்றன.புதிய பாலங்களும், சாலைகளும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், போக்குவரத்துக்கும் மிகவும் அவசியம்.சென்னையில், சாந்தோம் பகுதியிலிருந்து, ராஜா அண்ணாமலைபுரம் பகுதி வழியாக, அடையாறு செல்ல, திரு.வி.க., பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அந்த பாலத்தைக் கடக்கும்போது, பக்கவாட்டில், இடது புறமாக ஒரு பழைய பாலம் இருப்பதை பார்க்கலாம்.
சாந்தோமிலிருந்து அடையாறு பகுதியை அடைய,வெள்ளைக்காரன் கட்டிய அந்த பாலத்திற்கு, 'லாட்டைஸ் பிரிட்ஜ்' என்று பெயர். இரும்பு கிராதிகளால் இணைக்கப்பட்டிருக்கும் அந்த பாலம், மிகக் குறுகலாக இருக்கும்.திரு.வி.க., பாலம் மட்டும் கட்டப்படாமலிருந்தால், இன்றைய போக்குவரத்து நெரிசலில், அந்த குறுகிய, லாட்டைஸ் பாலத்தில் வாகனங்கள் சென்று வர முடியுமா... பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, பாதி அளவே இருந்த, திரு.வி.க., பாலத்தின் அகலத்தை, ஒரு பங்கு கூடுதலாக்கியும், 'பீக் அவர்ஸ்' எனப்படும் நெரிசல் நேரங்களில், பாலத்திலிருந்து, ஆர்.கே. சாலையை அடைவதற்குள் வாகன ஓட்டிகளுக்கு, இப்போது மூச்சு முட்டிப் போகிறது.வாஜ்பாய் அரசு அறிமுகப்படுத்திய தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போதைய மோடி அரசு, 'பாரத் மாலா பிரயோஜனா' என்ற பெயரில், 5.35 லட்சம் கோடி ரூபாய் செலவில், பாரத நாட்டின் மீது போடப்படும் மாலை போல, சாலை அமைக்க திட்டமிட்டு, பல மாநிலங்களில் விரைவாக செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு அங்கமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சென்னை- - சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க, மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 கி.மீ., - திருவண்ணாமலையில், 123 கி.மீ., - கிருஷ்ணகிரி, தர்மபுரியை கடந்து, சேலத்தில், 36 கி.மீ., என, எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்ட வரைவு, இறுதி வடிவத்தை எட்டியுள்ளது.தற்போது, சென்னையில் இருந்து காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ஆம்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாகவோ அல்லது செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, ஆத்துார் வழியாக சேலம் சென்றடைய, ஐந்து மணி நேரம், 350 - 360 கி.மீ.,யை கடந்தாக வேண்டும்.அதே சமயம், பாரத் மாலா திட்டத்தின் மூலம் அமைக்கப்படும், எட்டு வழிச் சாலை பயன்பாட்டுக்கு வரும் போது, ஐந்து மணி நேரப் பயணம், மூன்று மணி நேரமாக குறைந்து விடும்!இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; சேலம் கஞ்ச மலை, திருவண்ணாமலை கல்வராயன் மலைகளின் கனிமங்கள் சுரண்டப்படும்; விளை நிலங்கள் பாதிக்கப்படும் என, சில கட்சிகளும், 'போர்வையாளர்களும்' எதிர்ப்பு தெரிவித்து, போராட, பொதுமக்களை துாண்டி விடுகின்றனர்.துாத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை, போராட்டத்தின் மூலம் இழுத்து மூடிய பெருமையில் இருக்கும் போர்வையாளர்களும், தங்களுக்கு அடுத்த ஆயுதம் கிடைத்து விட்டது என கருதி, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை செயல்படுத்த விட மாட்டோம் என, கங்கணம் கட்டி, செயல்பட துவங்கி விட்டனர்.இந்த சாலை அமைக்க, சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்படும் என, பீதியும் கிளப்பப்படுகிறது. வாஸ்தவம் தான்... மரங்கள் வெட்டப்படத்தான் போகின்றன... சாலையோர மரங்களை வெட்டாமல், எட்டு வழி சாலை அமைக்கும் வழிமுறையை யாரேனும் வைத்திருந்தால், அரசிடம் சமர்ப்பிக்கலாம்!வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக, அதற்கும் மேலாக, ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசை எதிர்த்து போராட்டம் என்றால், ஆர்வமுடன் அணி திரண்டு நிற்போர், மரங்களின் மீதுள்ள தங்களின் பற்றை, பறை சாற்ற, அரசு நட உள்ள மரக்கன்றுகள் வாடி வதங்கி விடாமல், மரங்களாக தழைக்க, நீருற்றி பராமரிக்க முயலலாம்!மக்களுக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஒருவருக்கு கூட இடையூறு இல்லாமல் நிறைவேற்ற இயலாது.
'ஒரு குடும்பத்திற்காக ஒருவரை, ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தை, ஒரு நகருக்காக ஒரு கிராமத்தை, ஒரு நாட்டுக்காக ஒரு நகரத்தை இழக்கலாம்' என, தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.இந்த சாலை திட்டத்திற்கு, நிலங்களை வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க, அரசு முன் வந்துள்ளது; தாராளமாகவே தொகையை நிர்ணயித்துள்ளது. நகர்ப்புறங்களில் சந்தை மதிப்பை விட, 2 மடங்கும், கிராமப் பகுதிகளில், 2.5 - 4 மடங்கு வரையிலும் பணம் கொடுக்க முன் வந்துள்ளது.இதற்கு முன், நான்கு வழிச் சாலை அமைக்கும் போது, 2.47 ஏக்கர் நிலத்திற்கு, எட்டு லட்ச ரூபாய் தான் வழங்கப்பட்டது; தற்போது, 20 லட்ச ரூபாய் வழங்க முன் வந்துள்ளது. அது போல, ஒவ்வொரு தென்னை மரத்திற்கும், 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது.

அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை, கமிஷன் வாங்காமல், உரியவர்களுக்கு, அரசியல் கட்சியினர் வாங்கித் தர முன் வந்தால் நலமே!சென்னை, கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில், தற்போதுள்ள பிரமாண்டமான பாலம் கட்டப்பட்ட போது, ஏராளமான கண்டனங்கள் எழுந்தன. தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, பாலத்திற்காக இடிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து, தன் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், தவிர்க்க இயலாததால், விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்; பாலமும் கட்டப்பட்டது.
அவ்வளவு பிரமாண்டமாக பாலம் கட்டப்பட்டும் கூட, வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியவில்லை; ஊர்ந்து தான் செல்கின்றன. அந்த பாலமும் கட்டப்படாமலிருந்தால், நிலைமையை யோசித்துப் பாருங்கள்...ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களும், நுாற்றுக்கணக்கான கார்களும் விற்பனை செய்யப்பட்டு, வீதிக்கு வருகின்றன. அவை பறக்கக் கூட வேண்டாம்; ஓடுவதற்காவது சாலைகளை சீர்படுத்த வேண்டியது அவசியமல்லவா... அது அரசின் கடமையல்லவா?கடந்த, 1967ல், தமிழகத்தில், தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது, அதில் பொதிந்திருந்த அரசியல் சூழ்ச்சி புரியாமல், படித்துக் கொண்டிருந்த பள்ளிகளின் மீது கல்லெறிந்து, கலவரம் நடத்திய லட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன்.சிலர், 'உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு' என, ஆவேசமாகக் கோஷமிட்ட படி, தங்களுக்குத் தாங்களே நெருப்பு வைத்து, வெந்து மாய்ந்தனர். இன்றைக்கு அவர்களது குடும்பங்கள் எவ்வளவு வறிய நிலையில் உள்ளன... போராடத் துாண்டியவர்களின் குடும்பங்கள், எந்த அளவுக்கு செல்வ செழிப்பாக உள்ளன என, சற்று சிந்தித்துப் பாருங்கள்.அப்போது, என் போன்றோரை துாண்டி, ஹிந்திக்கு எதிராக போராட வைத்த கட்சி தலைவர்களின் வாரிசுகள், ஹிந்தியில் பேசவும், படிக்கவும், எழுதவும் நிபுணத்துவம் பெற்று, அரசியல், தொழில், வியாபாரத்தில், நாடு முழுதும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர்; எங்களாலோ, திருத்தணியைக் கூடத் தாண்டி செல்ல முடியவில்லை.எனவே, தமிழக அரசு செயல்படுத்த முன் வந்துள்ள, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை வரவேற்போம். நாட்டின் வளர்ச்சிக்கு அது அவசியம். இலங்கை போன்ற குட்டி நாடுகள் கூட, விசாலமான சாலைகள், ஒய்யார பாலங்கள், பிரமாண்ட துறைமுகங்கள், வானளாவிய கட்டடங்கள் என, சீனா போன்ற நாடுகளின் நிதியுதவியுடன் வேகமாக வளர்ந்து வருகின்றன.ஆனால், நம் நாட்டில், எடுத்ததற்கு எல்லாம், முட்டுக்கட்டை போட்டு, வளர்ச்சி திட்டங்களை வர விடாமல், நாட்டை பின்னுக்குத் தள்ளும் போராட்ட தொழில்நுட்பத்தை, சமீப காலமாக கடைபிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எப்போது தான் திருந்துவரோ தெரியவில்லை!தமிழகத்தில், தாங்களால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என, கருதும் சில கட்சிகள், இருக்கும் வரை குழப்பங்கள் செய்து, 'பாப்புலாரிட்டி'யை தேடிக் கொள்வோம் என்ற போக்கில் செயல்படுகின்றன. அந்த கட்சிகளின், தலைவர்களின் ஆவேச பேச்சுகளை, உண்மை என நம்பும் அப்பாவி மக்களால், வளர்ச்சித் திட்டங்கள் முடங்கினால், இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கி போவோம் என்பதை, பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.உள்கட்டமைப்பு, தொழில்கள், வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி என, எல்லா விதத்திலும் முன்னேற்றம் வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அரசியலை, பாலையும், தண்ணீரையும் பிரிக்கும் அன்னப்பறவை போல, பிரித்து வைப்போம்; முன்னேற்றப் பாதையில் முன்னேறுவோம்!இ-மெயில் essorres@gmail.comஎஸ். ராமசுப்ரமணியன்எழுத்தாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X