பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். சாலையோரங்களில், ஆதரவின்றி வசிப்போர், இன்றும் மூன்று வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுவதை, பார்க்கிறோம்.
நம்மில் அநேகம் பேர், அனுதாபத்தோடு நின்றுவிடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமானவர், கோவை ரமேஷ். இவர் ஒரு படி மேலே போய், தினந்தோறும், 300 ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்து, அவர்களின் பசியாற்றி வருகிறார்.
ராம்நகர், விஜய் பார்க்இன் ஓட்டல் நிர்வாக இயக்குனரான இவர், நம்மிடம் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்... ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப்பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது பழைய சாதம். அதிலும் கல்யாண மண்டபங்களில், வீட்டு விழாக்களில், ஓட்டலில் மீதமாகும் உணவுகள் தினந்தோறும் வீணாவதை கண்டுகூடாக பார்க்கும்போது வேதனையாக இருக்கும். அதற்கும் வழியில்லாமல் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதவற்றவர்கள் நிலையை யோசிக்கும்போது, இந்த ஐடியா வந்தது. தெருவில் உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்துபவர்களும், சாலையில் பராமரிப்பின்றி வாடும் முதியவர்களுமே எங்களுடைய இலக்கு.
எங்கள் விருந்தினர்களுக்கு செய்யும் அதே தரத்தில் இட்லி, பொங்கல், கிச்சடி, சேவை, உப்புமா என, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வெரைட்டீஸ் தயார் செய்து இப்பகுதியை சுற்றியுள்ள ஆதவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏழை எளிய மக்களுக்கு, சுடசுட காலை உணவளித்து வருகிறோம். முதலில் 150ஆக இருந்த இந்த எண்ணிக்கை, ஓரிரு நாட்களில், 300 ஆக உயர்ந்தது. சரியாக காலை 9:00 மணி ஆனதும் அனைவரும் ஆஜராகி விடுவர். பெரிய பிசினஸ் ஆட்கள் முதல் எத்தனையோ பேர் எங்கள் ஓட்டலில் பசியாற்ற வருகின்றனர். இருப்பினும், ஏழை மக்களின் பசியாற்றி பின்னரே அனைவருக்கும் விருந்தளிக்கிறோம்.
ஆரம்பத்தில் ஆதரவற்றவர்கள், குழந்தைகளுக்கு மட்டும்தான் வழங்கினோம். ஒருமுறை, பேன்ட் சர்ட்டோடு, ஷூ போட்டு, 80 வயது முதியவர் ஒருவர் வந்து நின்றார்.
நாங்கள், 'ஆதரவற்றவர்களுக்கு மட்டும்தான் உணவு' என்றதும், சுருங்கிய முகத்துடன், 'எங்க பசங்க வீட்டுல சோறு போடமாட்டீங்கராங்க தம்பி' என்றார் அந்த முதியவர். 'இந்த காலத்தில் வயதானவர்களுக்கும், ஆதரவற்றவர்கள் நிலைதான் போல' என, முதியவர்களுக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தோம்.
மாற்றுத்திறனாளி சிறுவன், வீட்டுக்கு அருகில் வசிக்கும் படுத்த படுக்கையில் வாடும் மூதாட்டிக்கு எங்களிடம் இருந்து உணவு வாங்கி செல்வான். தேவையான நேரத்தில் தேவைப்படும் நபருக்கு செய்தால்தானே உதவி. அதை சரியான முறையில் செய்கிறோம் என்பதை உணர்ந்த தருணம் அது.கூடவே, நண்பர்கள் உதவியுடன், 2,400 ஆதரவற்றவர்கள மற்றும் அரசு மருத்துவமனை பொது வார்டில் அவதிப்படுவோருக்கு பெட்சீட், கம்பளிகள் தானமாக அளித்தோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், மதிய உணவு வழங்கும் ஐடியாவும் உண்டு.
எங்களுடன் கரம் கோர்க்க 98422 57177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேறு எதிலும் கிடைக்காத மனநிறைவு, பிறர் பசியை போக்கும்போது கிடைக்கிறது. பசித்தவருக்கு உணவு கொடுங்கள்... ருசியான வாழ்வு உங்களை தேடி வரும்!