அசிஸ்டென்ட் வேலைக்கு அஞ்சு லட்சம்... ஆளுங்கட்சி சிபாரிசுன்னா ஒரு லட்சம் மிச்சம்!| Dinamalar

அசிஸ்டென்ட் வேலைக்கு அஞ்சு லட்சம்... ஆளுங்கட்சி சிபாரிசுன்னா ஒரு லட்சம் மிச்சம்!

Added : ஜூன் 19, 2018
Share
தொலைக்காட்சியில் சத்தமாக பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க, 'லேப்டாப்'பில் படு தீவிரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தாள் மித்ரா; இரு கைகளிலும் நிறைய பைகளுடன், உள்ளே நுழைந்த சித்ரா, ''ஏய்...என்னடி ஸ்கூல் புள்ளைங்க 'பிராஜக்ட்' பண்றது மாதிரி எதையே தீவிரமா படிக்கிற?'' என்று கேட்டபடி, பைகளை மேசையில் இறக்கி வைத்து ஆசுவாசமானாள்.''இதுவும் ஸ்கூல் மேட்டர்
அசிஸ்டென்ட் வேலை, அஞ்சு லட்சம்,  ஆளுங்கட்சி, சிபாரிசு, ஒரு லட்சம், மிச்சம், சித்ரா, மித்ரா

தொலைக்காட்சியில் சத்தமாக பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க, 'லேப்டாப்'பில் படு தீவிரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தாள் மித்ரா; இரு கைகளிலும் நிறைய பைகளுடன், உள்ளே நுழைந்த சித்ரா, ''ஏய்...என்னடி ஸ்கூல் புள்ளைங்க 'பிராஜக்ட்' பண்றது மாதிரி எதையே தீவிரமா படிக்கிற?'' என்று கேட்டபடி, பைகளை மேசையில் இறக்கி வைத்து ஆசுவாசமானாள்.


''இதுவும் ஸ்கூல் மேட்டர் தான்க்கா...எனக்குத் தெரிஞ்ச ஒரு டீச்சர், இந்த 'கவுன்சிலிங்'ல நடக்குற குளறுபடிகளைப் பத்தி, மெயில் போட்ருந்தாங்க. அதைத்தான் படிச்சிட்டு இருக்கேன்'' என்றாள் மித்ரா.''அதுல நடக்குற வசூல் தான், ஊரறிஞ்ச விஷயமாச்சே...'' என்றாள் சித்ரா.''அதில்லைக்கா...இது, நம்ம ஊருல இருக்குற பள்ளிக் கல்வித்துறை அதிகாரி பத்தின மேட்டர்...அவர் தான், டீச்சர்ஸ் சங்கத்து நிர்வாகிகளை மரியாதையே இல்லாம பேசுறாராம். ஏதாவது டீச்சர்கள் டிரான்ஸ்பர் பத்திப் பேசுனா, 'நீங்க என்ன அவுங்களுக்கு ஏஜன்ட்டா'ன்னு கேக்குறாராம்'' என்றாள் மித்ரா.

''டீச்சர்களுக்காக, அவுங்க தான வந்து பேசியாகணும்'' என்றாள் சித்ரா.

''அவுங்களையே வந்து பேசச் சொல்லுங்கன்னு சொல்றாராம். ஆனா, ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்' இல்லாம, எந்த வேலையும் அங்க நடக்காதாம்'' என்றாள் மித்ரா.

''அவரைப் பத்தி, விஜிலென்ஸ்க்கு ஒரு புகார் போயிருக்கு மித்து...சிங்காநல்லுார்ல இருக்குற ஒரு 'எய்டடு ஸ்கூல்' விவகாரத்துல, ரெண்டு குரூப் மோதிட்டு இருக்கு. அதுல, பள்ளி நிர்வாகத்துக்கு சில வேலைகளைச் செய்யுறதுக்கு, ஆதரவா செயல்பட்டதா, புகார் பண்ணிருக்காங்க'' என்றாள் சித்ரா.

''நம்ம ஊர்ல இந்த 'எய்டடு ஸ்கூல்'களோட பஞ்சாயத்தே பெருசாப் போயிட்டு இருக்கு; இந்த பிரச்னைகளைத் தீர்க்கிறதுக்கே, தனியா ஒரு ஆபீசரைப் போடலாம்'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்' பத்தி சொன்னியே...நிஜம் மித்து...நம்மூர்ல இருக்குற எம்.எல்.ஏ., பையன் ஒருத்தரு, ஒரு டீச்சர் டிரான்ஸ்பருக்கு மூணு லட்ச ரூபா வாங்குறாராம்; கட்சி ஆளுங்களையும் மதிக்கிறதே இல்லியாம்; துட்டு இல்லாம செய்ய முடியாதுன்னு சொல்றாராம்.

''அவரு மேல கட்சிக்காரங்க செம்ம கடுப்புல இருக்காங்க; அந்த பையன் கவுன்சிலர் எலக்ஷன்ல கூட ஜெயிக்கக்கூடாதுணு, கோனி அம்மனைக் கும்பிடுறாங்க'' என்றாள் சித்ரா.

''நீ சொல்றது யாரைன்னு எனக்குத் தெரியும்; அவரைப் பத்தி இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன். அவரும், ஒரு முக்கியமான ஆபீசரோட பையனும் ரொம்பவே நெருக்கமா இருக்காங்களாம். ரெண்டு பேரும் சேர்ந்து, மண் கடத்தல்ல தட்டி எடுக்குறாங்களாம். பெரும்பாலும் அந்த ஆபீசரோட பங்களாவுல தான், எம்.எல்.ஏ., பையனும் இருக்குறார்ங்கிறாங்க'' என்றாள் மித்ரா.

''மித்து...போன வாரம் நம்ம பேசுனதுக்கு மறுநாளே, நீ சொன்னது மாதிரியே, 'டிஎம்கே'ல நாலு மாவட்டத்தை மூணா மாத்திட்டாங்க; கார்த்திக்குக்கு மாநகர் மாவட்டத்தைக் கொடுத்துட்டாங்க. உடன் பிறப்புகள் எல்லாம் அசந்துட்டாங்க'' என்றாள் சித்ரா.

''ஆனா, கார்த்திக்கே இந்தத் தடவை, ரொம்பவும் அடக்கிதான் வாசிச்சிருக்காரு. ஏர்போர்ட்ல எந்த வரவேற்பும் வேணாம்னுட்டாராம்; அண்ணா, ஈ.வே.ரா, சிலைக்கு மாலை போட்டதோட ஆபீஸ் போயிட்டாரு்'' என்றாள் மித்ரா.

''சிலரோட பதவியைப் பறிச்சதுல, தொண்டர்களே அதிருப்தியில தான் இருக்காங்க...மோஸ்ட் சீனியர் ராமநாதனோட மகன் பதவியையே பறிச்சிட்டாங்களாம்.

''ஒரு காலத்துல, ஊர் ஊராப் போயி, கட்சிக்காகப் பேசுனவரு...இப்போ வயசான காலத்துல, தன்னோட மகனுக்கு பகுதிக்கழகச் செயலாளர் பதவியைக்கூட வாங்க முடியலையேன்னு ரொம்பவே வேதனையில இருக்காராம்'' என்றாள் சித்ரா.
இருவரது பேச்சுச் சத்தத்தை மிஞ்சும் அளவுக்கு, விமான சத்தம் கேட்டதும், மித்ரா ஞாபகமாய்க் கேட்டாள்...

''அக்கா...சி.எல்.ஏ., ஜெயக்கொடி வந்து, மீட்டிங் நடத்துனதுல, ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷனுக்கு 'லேண்ட்' கொடுக்கிறவுங்க, கொஞ்சம் தெம்பாயிருக்கிறதா கேள்விப்பட்டேன்...நிஜமாவா?''

''உண்மை தான் மித்து...கவர்மென்ட்ல, ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷனை சீக்கிரமாப் பண்ணனும்கிறதுல, ரொம்பவே ஸ்பீடா இருக்காங்க; அதனால தான் அவரே வந்து 'மீட்டிங்' நடத்திருக்காரு. ஆபீசர்கள் சொன்னதைக் கேட்டு, திருப்தியாகாம, 'லேண்ட் ஓனர்கள்ட்ட முழு விபரத்தையும் கேட்ருக்காரு. அப்புறம் அவரே, ஏரியாவுக்கு நேரா 'விசிட்' அடிச்சுப் பாத்துட்டு, 'நல்ல ரேட் வாங்கித்தர்றேன்; நீங்களும் ஒத்துழைப்பு கொடுங்க'ன்னு பேசிட்டுப் போனாராம்''

''தொழிற்கூடம் வச்சிருக்கிறவுங்களுக்கு, கொடிசியா தொழிற்பூங்காவுல முன்னுரிமை தரச் சொல்றோம்னு சொன்னாராமே!''

''அது தெரியலை...ஆனா, பாலம், பை பாஸ் திட்டங்களுக்கு, நிலம் எடுக்கிறது சம்மந்தமா ஹைவேஸ் அதிகாரிகள்ட்ட விபரம் கேட்டப்போ, சரியா விபரம் தரலைன்னு அவுங்களை சத்தம் போட்டதா கேள்விப்பட்டேன்''

''எனக்குத் தெரிய, இப்போ இருக்குற 'ஸ்டேட் ஹைவேஸ்' ஆபீசர்கள் டீம் சூப்பர்...அவுங்க முயற்சியில தான், காந்திபுரம், உக்கடம் பாலங்களை 'டிசைன்' மாத்துறதுக்கு 'டிபிஆர்' தயாரிக்க நிதி ஒதுக்கிருக்காங்க!'' என்றாள் சித்ரா.

இருவருக்கும் சுடச்சுட சுண்டலும், டீயும் வைத்து விட்டுப் போனாள் அம்மா. சுவைத்துக் கொண்டே, பேசினாள் மித்ரா...

''அக்கா...நம்ம ஊருல டீத்துாள் கலப்படம் எக்கச்சக்கமா நடக்குதாம். புட்சேப்டி ஆபீசர்ஸ் நடத்துன 'ரெய்டு'ல, பெரிய பெரிய ஓட்டல்கள், பேக்கரிகள்லயே, கலப்பட டீத்துாள்னு தெரியாமலே வாங்கிப் பயன் படுத்துறதைப் பாத்து, ஆச்சரியப்பட்ருக்காங்க''

''அதே ஆபீசர்கள் தான், பாலித்தீன் தாள், கேரி பேக் பயன் படுத்துறதுல, பெரிய ஓட்டல்கள் எதுவுமே ஒத்துழைப்பு கொடுக்குறதே இல்லை; ரோட்டுக்கடைக்காரங்க, தள்ளு வண்டிக்கடைக்காரங்க எவ்வளவோ பரவாயில்லைன்னு புலம்புறாங்க!''

''முதல்ல நம்ம மக்களும் திருந்தணும்...பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு போனா என்னவாம்?'' என்
றாள் சித்ரா.

''ஆமாக்கா...ரொம்ப நாளா போராடி, டபுள் டெக்கர் டிரெயினைக் கொண்டு வந்தா, முத வாரத்துலயே அதுல இருந்த 25 ஆட்டோமேடிக் குழாய்களைக் கழட்டிட்டுப் போயிட்டாங்களாம். ஒண்ணோட விலை, 2500 ரூபா இருக்குமாம். சில பேரு செய்யுற தப்புன்னால, ஊர்ப்பேரே கெடுது!'' என்றாள் மித்ரா.

''அந்த டிரெயின் வந்ததுல, ஆம்னி பஸ்காரங்களுக்கு செம்ம அடியாம். 962 'சீட்' போச்சுல்ல... பஸ்சுல மினிமமே 800 ரூபா வாங்குவாங்க...பண்டிகைன்னா, ஆயிரம், ரெண்டாயிரம்னு போகும்.
டிரெயின்ல 600 ரூபாய்க்கு 'சேப்டி'யா போயிரலாமே'' என்றாள் சித்ரா.

அம்மாவின் அலைபேசியில் அழைப்பு வர, 'மருதமலை மாமணியே முருகய்யா' என்று பாட்டு அலறியது. அதை எடுத்துக் கொடுத்து விட்டு வந்த மித்ரா, ''அக்கா! மருதமலையில அசிஸ்டென்ட்டுக்கு ஆள் எடுக்குறாங்களாம். ஒரு போஸ்ட்டிங்குக்கு மூணுல இருந்து அஞ்சு வரைக்கும் வசூல் நடக்குதாம். ஆளுங்கட்சி 'ரெகமண்டேஷன்'ல வந்தா, அஞ்சுக்குப் பதிலா நாலு வாங்குறாங்களாம்'' என்றாள்.

''இந்த 'ரெகமண்டேஷன்' தொல்லை தாங்கலை மித்து...நம்ம ஜி.எச்.,ல ஏற்கனவே, டாக்டர்கள் பற்றாக்குறை தலைவிரிச்சாடுது. இதுல ஏஆர்எம்ஓ மூணு பேரைப் போட்ருக்காங்க; அதுல ஒருத்தர் மட்டும் தான், வேலை பாக்குறாராம். ரெண்டு லேடி டாக்டர்களும், கையெழுத்துப் போடுறதைத் தவிர வேற வேலையே பாக்குறதில்லையாம்'' என்றாள் சித்ரா.

''நிர்வாகத்துக்கு இதெல்லாம் தெரியாதா?'' என்று கேட்டாள் மித்ரா.

''அதுல ஒருத்தரு, நிர்வாகத்துல முக்கியப் பொறுப்புல இருக்குற மயக்க டாக்டரோட வீட்டுக்காரம்மாவாம்.

''அந்த டாக்டரே வேலையே பார்க்காமல் தான் ஓட்டிட்டு இருப்பாராம்; இப்போ, ரெண்டு பேரும் வேலையே பாக்கிறதில்லையாம். இவுங்களை நம்பி வர்ற ஏழைங்க பாடு தான் பாவம்!'' என்றாள் சித்ரா.

''ஏழைங்க பாடு எப்பவுமே திண்டாட்டம் தான்...ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி சார்புல, நேரு ஸ்டேடியத்துல ஒரு ஹாஸ்டல் இருக்கே. ஸ்போர்ட்ஸ் பசங்க 60 பேரு தங்கி படிக்கிறாங்க.

''அங்க இருக்குற ரூம்களையும், அவுங்களுக்குப் போடுற சாப்பாட்டையும் பார்த்தா, கண்ணீரே வந்துடும். இத்தனைக்கும் ஒரு பையனுக்கு ஒரு நாளுக்கு 250 ரூபா அதாரிட்டி கொடுக்குது'' என்றாள் மித்ரா.

''சாப்பாடுன்னதும் ஞாபகம் வந்துச்சு...வீட்டுக்குப் போய், சாப்பாடு பண்ணனும்; நாளைக்கு பார்க்கலாம்'' என்று கிளம்பினாள் சித்ரா.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X