டிரைவருக்கு பொறுப்பு; உடன்பிறப்புகள் கடுப்பு!| Dinamalar

டிரைவருக்கு பொறுப்பு; உடன்பிறப்புகள் கடுப்பு!

Added : ஜூன் 19, 2018 | |
நகத்தை கடித்து துப்பியபடியே, 'டிவி' பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. அப்ேபாது, காலிங் பெல் அழைக்கவே ''இதோ.. ஒரு செகன்ட். வந்துடறேன், என்றவாறு, கதவில் உள்ள லென்ஸ் வழியே பார்த்து விட்டு,'' அடடே.. சித்ராவா? வா.. வா..'' என்றவாறே, கதவை திறந்து வரவேற்றாள்.உள்ளே நுழைந்ததும், ''என்னடி, 'டிவி' வால்யூமை இவ்வளவு அதிகமாக வச்சு கேட்கற. அப்படி என்ன முக்கிய நியூஸ்,'' என்றாள்.
சித்ரா, மித்ரா

நகத்தை கடித்து துப்பியபடியே, 'டிவி' பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. அப்ேபாது, காலிங் பெல் அழைக்கவே ''இதோ.. ஒரு செகன்ட். வந்துடறேன், என்றவாறு, கதவில் உள்ள லென்ஸ் வழியே பார்த்து விட்டு,'' அடடே.. சித்ராவா? வா.. வா..'' என்றவாறே, கதவை திறந்து வரவேற்றாள்.

உள்ளே நுழைந்ததும், ''என்னடி, 'டிவி' வால்யூமை இவ்வளவு அதிகமாக வச்சு கேட்கற. அப்படி என்ன முக்கிய நியூஸ்,'' என்றாள்.

''ஒன்றுமில்லை, சும்மாதான்,'' ''ஆமாம். திருப்பூரில் எதிர்க்கட்சியில் கோஷ்டி பிரச்னை இருந்தது. ஓரளவுக்கு அது கொஞ்சம் குறைஞ்சுது. இப்போது, மீண்டும் ஆரம்பிச்சிருச்சு. முக்கிய நிர்வாகி மீது அவரது ஆதரவாளர்களே அதிருப்தியில் இருக்காங்களாம். அதான் நேரடியாக தலைமையிடம், வண்டி வண்டியாக புகார் சொல்லியிருக்காங்க' என்றாள் மித்ரா.

'ஓ... அப்புறம் என்னாச்சு'' என்றாள் சித்ரா.

''அக்கா, முழுக்கூத்தையும் கேளுங்க. பக்கத்திலுள்ள 'நல்ல' ஊர் நகர நிர்வாகி மீது குற்றச்சாட்டு சுமத்தி புகார் போயிருக்கு. ஆனால், தலைமை நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வது என, அவரை நீக்கி விட்டு அவரோட, டிரைவரை நிர்வாகியா போட்டிருக்காங்க. இதென்ன... தி.மு.க.,வா, 'பேபிம்மா' பேரவையா? டிரைவருக்கெல்லாம் கட்சிப்பதவி கொடுக்கறதுக்கு?' அப்படின்னு உடன்பிறப்புகள் புலம்பறாங்களாம்'

'அது மட்டுமில்லீங்க்கா. இங்கே எந்த அதிருப்தியும் இல்லை என்று காட்ட, அதே பகுதியை சேர்ந்த சிலரை கூட்டிட்டு போய், அறிவாலயத்தில் வாழ்த்தும் வாங்கிட்டு வந்துட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.

''ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியில், இப்படி பொறுப்பில்லாமல், பொறுப்பாளர்களை போட்டா, எப்படி, பொறுப்பு வரும்?'' என்று சித்ரா படபடவென கூறவே, ''அக்கா.. என்ன இப்படி திருக்குறள் மாதிரி சொல்றீங்க. என் தலையே சுத்துது,'' என்று சிரித்தாள் மித்ரா.

''இல்லப்பா... தி.மு.க., விஷயம்ங்கறதால, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். மித்து, இந்த, இ.பி., ஆபீஸ் முகாமில், மின் வாரிய ஊழியர்கள் படாத பாடு பட்டாங்க தெரியுமா' என்றாள் மித்ரா.

'நானும் கேள்விப்பட்டேங்க்கா. மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாமுக்கு ரெண்டு நாளா, ஊழியர்கள் பலரும் வேலை செஞ்சிருக்காங்க. ஆனால், ஒரு வேளை டீ, காபி, டிபன், சாப்பாடு என எதுவும் ஆபீஸ் சார்பில் தரலையாம். சொந்த காசுல தான் எந்த அதிகாரியும் செலவு செய்ய மாட்டாங்க. முகாம் செலவுல கூடவா சாப்பாடு வாங்கித் தர மாட்டாங்க,' என்றாள் மித்ரா.

''மித்து.. அதிகாரிங்களுக்கு வாங்க மட்டுந்தான் தெரியுங்கறது உனக்கு தெரியுதா. ஒவ்வொண்ணுக்கும் பட்டியல் போடாத குறையா கறாரா வசூல் பண்ணிக்கிறாங்க. அவங்க எப்பவுமே ஒன்வே தான். உனக்கு புரிஞ்சா சரிதான்,'' என்றாள் சித்ரா.

அப்போ, கோவிலுக்கு போய்விட்டு, வீடு திரும்பிய மித்ராவின் அம்மா, “அடடே... சித்ராவா. வாம்மா.. இப்பதான் வந்தியா?,'' என்றதும், “ஆமாங்க ஆன்ட்டி,'' என்றாள் சித்ரா.

“ஏண்டி, மித்து, சித்ராவுக்கு டீ கொடுத்தியா?''

“சாரிம்மா... பேச்சு சுவாரசியத்துல மறந்துட்டேன். ப்ளீஸ்.... நீங்களே வைச்சு கொண்டாங்க....''என்று மித்ரா சொன்னதும், “நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்,'' என்று எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் பாட்டுப்பாடினாள் சித்ரா.

ஏங்க்கா... சிரிக்கிறீங்க. சுடு தண்ணீர் கேளுங்க. சூப்பரா வச்சு தர்றேன்,'' என்று மித்ரா சொன்னதும் மீண்டும் சிரித்தாள் சித்ரா.

அதற்குள், மித்ராவின் அம்மா, டீயும், வடையும் கொண்டு வந்து டீபாயின் மீது வைத்தவுடன், ''தேங்க்யூ... ஆன்ட்டி,'' என்றவாறு, சித்ரா வடையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
மித்ராவும் ஒரு வடையை கையில் எடுத்து கொண்டே, ''நார்த் தாலுகாவுல, இ.பி., பில் அதிகமா வரும்னு நினைக்கறேன்,'' என்றாள்.

''ஏன்... அந்தளவுக்கு வேலை ராத்திரியிலும் நடக்குதா?'' என்றாள் சித்ரா.

''என்ன வேலை நடக்குதுனே தெரியலைக்கா. ஆனால், தினமும் சாயந்திரம் ஆறுமணிக்கு மேல தான், தாசில்தார் தன்னோட வேலைய ஆரம்பிக்கறாரு,''

''நைட் எவ்ளோ நேரம் இருக்காங்கன்னு தெரியலை. உள்ளூர் தாசில்தாரா இருக்கறதால, பகலில் எங்க போறார்னு தெரியறதில்லே. சாயந்திரமாத்தான், எல்லோரையும் பார்க்குறாராம்,''என்றாள் மித்ரா.

''தாசில்தாருக்குத்தான் இப்ப வேலையே இல்லையே. எல்லாம், பொதுசேவை மையத்தோட வேலை முடிஞ்சிடுதே,'' என்று சித்ரா சொன்னதும், டிவியில், 'சுப்ரமணியம்' காபி விளம்பரம் ஒளிப்பானது.
டீயை குடித்து கொண்டே சித்ரா, ''யாரா லையும் அசைக்க முடியாத ஆளா இருந்துட்டாரே,'' என்று புதிர் போட்டாள் சித்ரா.

''எங்கக்கா சொல்றீங்க. தமிழ்நாட்டு அரசியலையா சொல்றீங்க,'' என்றாள் மித்ரா.

''அட... நம்ப ஊரில்தானப்பா. கலெக்டர் பி.சி.,யா இருந்தவரு 'ரிட்டயர்டு' ஆகிட்டாரு. அவரச்சொன்னேன். மாவட்டம் உருவானதிலிருந்து தொடர்ந்து அஞ்சு கலெக்டருக்கு பி.சி.,யா 10 வருஷமா இருந்துட்டாரு. 'பிரமோஷன்'ல போயிருந்தா, எங்கயோ போயிருக்கலாம். அதை வேண்டாம்னு சொல்லிட்டு, கலெக்டர் ஆபீசையே ஆட்டி வைக்கற நபரா இருந்தாரு''

''புதுசா வர்ற கலெக்டர்களுக்கு, மாவட்டத்துக்குள்ள அரசியல், நிர்வாகம்... இப்படி பல விஷயங்களை சொல்லி கொடுத்துட்டு இருந்தார். இதனால, அவரை மீறி யாராலும், எதுவுமே செய்ய முடியாத நபரா இருந்திருக்காரு. யாருமே அந்த பதவிக்கு வர முடியாம இருந்துச்சு. இப்பத்தான், அடுத்த பி.சி., வந்திருக்காரு,'' என்றாள் சித்ரா.

அதற்குள், மித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''சொல்லுங்க.. சுரேந்திரன் அங்கிள், நல்லாருக்கீங்களா? இருங்க அம்மாகிட்ட தறேன்,''என்று, போனை அவளது அம்மாவிடம் கொடுத்தாள்.அவர் பேச ஆரம்பித்து உள்ளே சென்றார்.


''ஆதேஷ் பவுண்டேஷன்' நடத்தின, இலவச தையல் மெஷின் வழங்கும் விழா, கலெக்டர் ஆபீசுல எப்படி நடந்துச்சுனு தெரியலை,' என்றாள் மித்ரா.

''என்ன... மித்து, கலெக்டர் ஆபீஸ் மேட்டரை முடிக்கவே மாட்டேங்கறே. சரி பரவாயில்லை... சொல்றேன். ஆதேஷ் பவுண்டேஷன் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாச்சும் செய்யணும்னு சொல்லிருக்காங்க,''

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் நிறையா செய்யுது; வேணும்னா, மாற்றுத்திறனாளி குழந்தைகளோட அம்மாக்களுக்கு தையல் மெஷின் கொடுக்கலாம்; பிரயோஜனமா இருக்கும்'னு சொல்லியிருக்காங்க. அதே மாதிரி, 18 பயனாளிகளுக்கு கொடுத்தாங்க.''

''இதுல என்ன விேஷசம்னா, பவுண்டேஷன் நிறுவனரோட அப்பா, கலெக்டருக்கு ஆசிரியரா இருந்தவராம். அதனால, கலெக்டர் இந்த விழாவுக்கு ஒப்புதல் அளிச்சு, தன்னோட வாத்தியாருடன், அவரும் விழாவுல கலந்துக் கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா... ரொம்ப நல்ல விஷயந்தானே. தாராளமா பாராட்டலாம். ஆனா, இந்த கல்வித்துறை அதிகாரிகள் ஏன்தான், இப்படி சொல்றாங்கன்னு தெரியலே,'' என்றாள் மித்ரா.
''ஏன்.. என்னாச்சு...?'' என்றாள் சித்ரா.

''ஸ்கூலில், எந்த வசதியும் இல்லாட்டி, பரவாயில்லை. யாரிடமும், யாரும் போய் புலம்பாதீங்க. 'பண்ட்' வரும் போது வரும். அதுவரைக்கும் அமைதியா இருங்க,'ன்னு, அட்வைஸ் பண்றாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும், ''இதிலென்ன இருக்கு. அதே ஸ்கூலில் படிச்சு.. இப்ப நல்லாயிருக்கிறவங்க, உதவி செஞ்சா ஏத்துக்கலாமே,'' என்று குறுக்கிட்டாள் சித்ரா.

''அதனால, சில எச்.எம்., நமக்கெதுக்கு வம்புன்னு,' ஒதுங்கிட்டாங்களாம்,'' என்று மித்ரா, 'உச்' கொட்டினாள்.

''என்னக்கா... சிட்டி புது கமிஷனர் என்ன சொல்றாரு?''என, போலீஸ் மேட்டர் பக்கம் சாய்ந்தாள் மித்ரா.

''புது கமிஷனர், ஸ்டேஷன் நிலவரம் எப்படின்னு பார்க்கறதுக்கு, அடிக்கடி விசிட் அடிக்கிறாரு. இப்படித்தான், ரெண்டு நாளைக்கு முன்னாடி, நார்த் ஸ்டேஷனுக்கு போனப்ப, கதவு சாத்தப்பட்டு வெறிச்சோடி கிடந்ததாம். அதே மாதிரி அம்மாபாளையம், பூலுவப்பட்டி செக் போஸ்ட்டிலும் ஆளே இல்லையாம்,''

''இதைப்பார்த்த கமிஷனர் அதிர்ச்சி யடைந்து, காரணம் கேட்டிருக்கார். இதனால, ஏ.சி., ரெண்டு பேரும் கையை பிசையறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''இப்பதானே.. வந்திருக்கார். போகப்போக வேலைய காட்டுவாரு,'' என்றாள் மித்ரா.

''அவரை விட, இங்கிருக்கிற இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் எல்லாம் ரொம்ப ஸ்பீடா இருக்காங்க. தங்களுக்கு சவுகரியப்பட்ட ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸ்பராகி செல்ல, ஏ.சி., மூலம் காய் நகர்த்தி வர்றாங்க. நல்லா தெரிஞ்ச இடத்துக்கு போன, 'கல்லா' கட்ட வசதியாக இருக்கும்னு, மூவ்மென்ட் போடறாங்க. இதுக்கு முன்னாடி இருந்த கமிஷனர்கிட்ட ஒண்ணும் செய்ய முடியலைன்னு, இவருகிட்ட ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ''அதானே... பார்த்தேன். இந்த பாத்திரம் தயாரிக்கிற ஏரியாவிலுள்ள ஏட்டு ஒருத்தர் வேலை செய்யாமல், தப்பிக்கிறதில், கில்லாடியாம்,'' என்றாள்.

''அந்த ஏரியாவில், ஏதாவது பெரிய இஷ்யூ வரும் போது, நம்ம ஏட்டு மட்டும் லீவில் சென்று விட்டார். இப்ப, பிரச்னை ஒய்ந்ததும், டியூட்டிக்கு திரும்பிட்டாராம். இப்படி வேலைக்கு பயந்து ஓடும், இவரை போன்ற நபர்கள்இருப்பதால் தான், வேலை செய்யற ஆட்களுக்கு கூட மரியாத கிடைப்பதில்லை,'ன்னு, சக ஏட்டுகள் புலம்பி தீர்க்கறாங்களாம்,'' சித்ரா இவ்வாறு பேசி கொண்டிருக்கும் போது, வீட்டுக்குள் ஒருவர் நுழைந்தார். அவரை பார்த்ததும், ''வாங்க, 'செல்வராஜ்' அங்கிள். நேத்தே வர்றேன்னு சொன்னீங்க. உட்காருங்க,'' என்றாள் மித்ரா.

அவரிடம், மித்ராவின் அம்மா, பேசவே, இருவரும் வீட்டுக்கு வெளியே போர்டிக்கோவில் அமர்ந்தனர். தென்மேற்கு பருவமழை வரட்டுமா? போகட்டுமா? என்று இருந்தது.

''ஏம்ப்பா.. ரெண்டு பேரும் மாறிமாறி புகார் கொடுத்தாங்களாம். உனக்கு ஏதாவது தெரியுமா?,'' என்று சித்ரா கேட்டதற்கு, ''தலையும் புரியலே... வாலும் புரியலே..'' என்று புலம்பினாள்.

''சும்மா... புலம்பாதடி. டிவி ரிப்போர்ட்டர்ைஸ பத்தி, 'வாட்ஸ் அப்'பில் ஒரு தகவல் உலா வருது. அதிலே, ரயில்வே பாஸ் ஒரு சிலர் வாங்கிட்டு, கமுக்கமா இருந்துட்டாங்களாம். இதை தெரிஞ்சுட்டு, ஒரு குரூப் கேட்டதற்கு, 'தேவைன்னா போய் வாங்கிக்க வேண்டியதானே,' அலட்சியாமா பதில் சொல்லிருக்காங்க,''

''இதனால், கொதிச்சு போன, ஒரு குரூப், 'வாட்ஸ்அப்' 'பேஸ்புக்'கில், போட்டு வறுத்தெடுத்துட்டாங்களாம். திருப்பூரிலுள்ள பல குரூப்களில், இந்த தகவல் பரவியதால, படிச்சுட்டு, பொதுமக்கள், 'என்ன இது. பிரஸ்காரங்களேஇப்படியா?'ன்னு பல கமென்ட்போட்டு கழுவிக்கழுவி ஊத்துறாங்களாம்,''

''பிரச்னை.. ரொம்ப முத்திப்போய், இரு தரப்பும், நார்த் ஸ்டேஷனில், புகார் கொடுத்து, சி.எஸ்.ஆர்., வாங்கிட்டாங்களாம். மக்களோட பிரச்னைகளை அதிகாரிகிட்ட கொண்டு போற வேலய செய்யறவங்க, இப்படி நடந்துக்கலாமான்னு, ஊரே பேசுது,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் சித்ரா.

''அக்கா... இதை கேட்குறப்ப, ஒரு சினிமாவில், 'கட்டதுரை... உனக்கு கட்டம் சரியில்லே'ன்னு, வடிவேல் புலம்பற மாதிரியே இருக்கு,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.

''சரிப்பா... மழை வர்றதுக்குள்ளே...! நான் கிளம்பறேன்,'' என்றவாறு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. ''பை... பை.. சித்து அக்கா...'' என்று கையை காட்டியவாறே வீட்டுக்குள் திரும்பினாள் மித்ரா.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X