ஆலப்புழா:கேரள அரசு பள்ளியில், மதிய உணவு திட்டத்தின் தரத்தை சோதிக்க சென்ற கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சம்பவம், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நீர்குன்னம் என்ற இடத்தில், ஸ்ரீதேவி விலாசம் என்ற அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.ஆலப்புழா மாவட்ட கலெக்டர், சுஹாஸ், இந்த பள்ளிக்கு, அதிரடியாக சோதனை நடத்த வந்தார்.அப்போது மதிய நேரம் என்பதால், மதிய உணவு வழங்கப்படும் அறைக்கு சென்றார். அங்கு, மாணவர்கள், உணவருந்திக் கொண்டு இருந்தனர்.
உடனே, அவர்களுடன் அமர்ந்து, கலெக்டர் சுஹாசும், உணவருந்த தொடங்கினார். மாவட்ட கலெக்டர் தங்களுடன் அமர்ந்து உணவருந்துவதைக் கண்ட மாணவர்கள், உற்சாகம் அடைந்தனர்.மாணவர்களுடன் உரையாடியபடி, அங்கு பரிமாறப்பட்ட சாதம், வெள்ளரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியல், மோர் ஆகியவற்றை, கலெக்டர் சாப்பிட்டார்.
உணவு தரமாக இருந்ததை தொடர்ந்து, பள்ளியில் உள்ள நுாலகம் மற்றும் கணிப்பொறி கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.மாணவர்களுடன், கலெக்டர் உணவருந்தும், 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி, பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.