'தினமலர்' தவிர்த்து பிற தினசரிகளை பார்த்தாலே, மனம் வேதனைப்படுகிறது. எவ்வித நல்ல எண்ணமும் இல்லாமல், சாதாரண போராட்ட செய்திகளை, ஊதி பெரிதாக்கும், சில நாளிதழ்களின் பொறுப்பாளர்களுக்கு, உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சி பற்றி கொஞ்சமேனும் பொறுப்பு இருக்கிறதா என, எண்ணத் தோன்றுகிறது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர், 'உண்மை, காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் நேரத்தில், பொய், ஊரைச் சுற்றி வந்து விடும்' என்று! அதாவது, உண்மையான செய்திகளை விட, வதந்திகள் தான் மிக விரைவில் பரவி விடும் என்பதை, நம் முன்னோர் அப்போதே சொல்லியுள்ளனர், சொலவடையாக!துாரமான இடங்களில் உள்ளவர்களுக்கு, செய்திகளை உடனடியாக தெரிவிக்க வசதி இல்லாத அந்த காலத்திலேயே, வதந்தி வேகமாக பரவி விடும் என்றால், ஒரு நொடிக்குள் உலகத்தில் உள்ள எந்த மூலைக்கும் தகவல் அனுப்பும் வசதி உள்ள இந்த காலத்தில், வதந்திகளும், பொய் செய்திகளும் எவ்வளவு வேகமாக பரவும் என்பதை கணக்கிடவே முடியாது.ஜெர்மன் நாட்டின் அதிபராக இருந்த ஒருவர், 'அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால், இங்குள்ள சாலைகள் தரமாக இருக்கிறது என, சொல்ல முடியாது. அங்குள்ள சாலைகள் தரமாக இருப்பதால் தான், அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கிறது' என்றார்.
அந்த அளவுக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்கு, தரமான சாலை வசதி அவசியம்!சில நுாறு ஆண்டுகளுக்கு முன், மதுரையை ஆண்ட, ராணி மங்கம்மாள் காலத்தில், மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்வது, சவாலான பயணமாக இருந்திருக்கிறது. அதனாலேயே ராணி மங்கம்மாள், சாலைகளில் நிறைய சத்திரங்கள் கட்டினார். அவர் மறைந்து, முன்னுாறு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், அவரால் போடப்பட்ட சாலைகளும், சத்திரங்களும், இன்றும் அவர் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கின்றன.சிறுமியாக நான் இருந்த போது, எங்கள் ஊரில் ஒரே ஒருவர் தான், மோட்டார் பைக் வைத்திருந்தார். 'பைக்காரர் வீடு' என்றால், சின்னப்பிள்ளைக் கூட அவர் வீட்டை அடையாளம் காட்டி விடும். இன்று, வீட்டில் உள்ள நபர்களை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதற்கேற்ற சாலைகள் இன்னமும் இல்லை.
பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் போடப்பட்ட, தங்க நாற்கரச் சாலையின் அருமை, இப்போது தான் நமக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது; எந்த ஊருக்கும் எளிதாக, வேகமாக போக முடிகிறது; விவசாயப் பொருட்கள், கெட்டுப் போவதற்கு முன், பறித்த உடன் விற்பனைக்கு கொண்டு செல்ல முடிகிறது; விபத்தில் அடிபட்டவரை உரிய நேரத்தில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடிகிறது.'ஜப்பானைப் பார்த்தாயா... சிங்கப்பூரைப் பார்த்தாயா... அமெரிக்காவைப் பார்த்தாயா... அங்குள்ள ரோடு எப்படி இருக்கிறது தெரியுமா...' என, வாய் கிழிய பேசுபவர்கள், அந்த சாலை வரும் முன், அந்த இடங்கள் பசுமையாக தான் இருந்திருக்கும் என்பதை, சுலபமாக மறந்து விடுகின்றனர்.
எந்த ஒரு திட்டமும், யாரேனும் சிலருக்கு பாதகமாக தான் இருக்கும். மேட்டூர், பவானி சாகர், வைகை அணை என, பல அணைகளைக் கட்டிய போது, யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் கட்டியிருக்க முடியாது. நிறைய வீடுகள் அல்லது நிறைய கிராமங்கள் அணைக்குள் மூழ்க தான் செய்தன.ஆங்கிலேயர், முதல் முதலில், ரயில் விட்ட போது, அப்போதைய மக்கள், 'ரயில் ஓடும் சத்தத்தில், கோழிகள் முட்டை போடுவதில்லை; பசுக்கள் பால் கறப்பதில்லை; ரயில் ஓடும் அதிர்வில் பயமாயிருக்கிறது' என்றனர்; எதிர்ப்பு தெரிவித்தனர்.இப்போது, ரயில் இல்லை என, கற்பனை செய்து பாருங்கள்; எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!
ரைஸ் மில் அறிமுகமான போது, கையால் அரிசி குத்தியவர்களும் - ஆட்டோ, டாக்ஸி வந்த போது, குதிரை வண்டி ஓட்டியவர்களும் - தங்கள் பிழைப்பு போய் விட்டது; வாழ வழியில்லை என, எதிர்ப்பு காட்ட தான் செய்தனர். கம்ப்யூட்டர் வந்த போது கூட, நிறைய பேர் வேலை போய் விடும் என்றனர்; அலுவலகங்களில் கணிப்பொறி வாங்குவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.இன்று, அரசு திட்டங்களுக்கு எதிராக போராடுவதை, கதாநாயகத் தன்மையாக சிலர் நினைக்கின்றனர். ஆனாலும், பின்புலத்தில் அவர்கள், கண்ணுக்கு தெரியாத ஒரு மாய வலையின் மூலம் இணைக்கப்பட்டிருப்பது புலனாகிறது.
அவர்களின் ஒரே லட்சியம், தமிழகத்தின் அமைதியை குலைத்து, மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதாக மட்டுமே உள்ளது.சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை தேவையா, இல்லையா என்றால், எதிர் வரும் காலத்துக்கு அது அவசியத் தேவை என்பதில், யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது, சாலை வருவதை அல்ல; சாலையை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளையும், நாட்டின் வளர்ச்சியையும் எதிர்த்தே!போராட்டக்காரர்களையும், அதை துாண்டி விடும், 'போர்வையாளர்'களுக்கும் நான் சில கேள்விகள் வைக்கிறேன்.
மதுரைக்கு நீங்கள் போனதே இல்லையா... அப்படிப் போயிருந்தால், மேலுார் தாண்டியவுடன், கத்தியால் கேக் வெட்டுவதைப் போல, எத்தனை மலைகளை அறுத்து, சிதைத்து, இருந்த சுவடு இல்லாமல் மாற்றிவிட்டனர், கிரானைட் நிறுவன அதிபர்கள். அதை பார்த்துள்ளீர்களா?பசுமை வழிச்சாலைக்காக வயல்களை அழிக்கின்றனர் என, இன்று கூப்பாடு போடுபவர்களின் ஊரில் உள்ள வயல்கள், குளம், குட்டை, ஏரிகளை அழித்து, 'பிளாட்' போடும் போது, நீங்கள் எங்கே சென்றீர்கள்?
ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்களில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால், அங்குள்ள விவசாய நிலம் பாழடைந்து கிடக்கிறதே... அதற்காக நீங்கள் ஏன் போராடவில்லை? ஆற்றில் உள்ள மணலை எல்லாம் எடுத்து, ஆற்றின் ஊற்றுக்கண்ணை வற்றச் செய்து, ஆற்றை மலடாக்கி விட்டனரே அதை எதிர்த்து ஏன் போராடவில்லை?ஏனென்றால், அதனால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. உங்களின் போராட்டம், மக்களுக்கானது அல்ல; சுய ஆதாயத்திற்கானது. அதனால் தான், பொதுமக்கள் நலன் என்ற போர்வையில், தேவையற்ற போராட்டங்களை நடத்துகிறீர்கள்.இயற்கைக்கு எப்போதும் ஒரு சக்தி உண்டு. தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் வல்லமை, அதற்கு உண்டு. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, போரில் நிறைய ஆண்கள் இறந்து விட்டனர்.
அந்த காலகட்டத்தில், பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில், ஆண் குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தனவாம். அது தான், இயற்கையின் சக்தி.மேலும், இயற்கையோடு இணைந்திருக்கும் அறிவியலின் சக்தியும் அற்புதமானது. வயல் காடுகள் சாலைகளாகவும், மனைகளாகவும் மாறுவதற்கு முன், முப்பது கோடி முகமுள்ளவளாக இந்திய தாய் இருந்தாள். அப்போது, தமிழகத்தில், ராமநாதபுரம் போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்பட்ட பஞ்சத்தால், மக்கள் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.அப்போதைய மக்களின் படங்களைப் பார்த்தால், எலும்புக்கு ஆடை உடுத்தியது போல இருப்பர். பசியின் கொடுமையை தாங்க முடியாத மக்கள், இலங்கைக்கும், பர்மாவுக்கும், கூலிகளாய் போனதை பற்றி, வரலாற்றில் படிக்கும் போது, நம் கண்கள், நம்மையும் அறியாமல், நிச்சயம்
கண்ணீர் சிந்தும்.
இன்று, விளைநிலங்கள் மனைகளாகவும், சாலைகளாகவும் மாறி, இந்தியாவின் மக்கள் தொகை, 125 கோடியை தாண்டினாலும், உணவுப் பஞ்சம் இல்லை; அத்தியாவசியப் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை. எனவே, சாலைகள் போடுவதால், நாட்டில் அரிசி பஞ்சம் வந்து விடாது. மாறாக, பல நல்ல மாற்றங்கள் நிகழும்.
சிறு வயதில் படித்த, ஆடு - ஓநாய் கதை, அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இரண்டு ஆடுகளுக்கு இடையே சண்டை மூட்டி விட்டு, அவை சண்டை போடும் போது, ஒன்றை ஒன்று முட்டி, ரத்தம் சிந்தும் போது, அந்த ரத்தத்தை குடிக்க காத்திருக்கும் ஓநாய் போல, அமைதியாக இருக்கும் தமிழகத்தின் அமைதியை குலைக்க, சில அரசியல் சக்திகளும், அந்திய சக்திகளும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன.தினமும், புதுப்புது போராட்டத்தை அறிவிக்கும் யாரும், மக்கள் மீது அக்கறையால், போராட்டத்தை அறிவிக்கவில்லை. அவர்கள் அறிவிக்கும் போராட்டத்தின் விளைவாக, தமிழகத்தில் புதிதாக யாரும் தொழில் தொடங்க வரக் கூடாது என்பது தான், அவர்கள் திட்டம்.
ஏற்கனவே, இயங்கிக் கொண்டிருந்த ஐம்பதாயிரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இதை தான் போராட்டம் நடத்துபவர்கள் என்ற பெயரில் உள்ள சமூக விரோத சக்திகள், ஓநாயைப் போல, எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.வேலையில்லாமல் வறுமையில் மக்கள் இருக்கும் போது தான், அவர்களது கையில் ஆயுதங்களை கொடுத்து, தீவிரவாதத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை அறிந்து, அதற்காக அப்பாவி மக்களை மூளை சலவை செய்து, அரசுக்கு எதிராக, ஏதாவது ஒரு விதத்தில் போராட செய்த வண்ணம் உள்ளனர்.
நாளைய இந்தியாவாக இருக்கப் போகும், இன்றைய இளைஞர்களே... இத்தகைய போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் நம்பி, சதிகாரர்களின் பகடை காயாய் மாறி, வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.தங்களின் சுய நலத்திற்காகவும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் சில விஷமிகளால் துாண்டி விடப்படும் போராட்டங்கள், நம் வாழ்விற்கு நல்ல வழியைக் காட்டக் கூடியவை அல்ல; நம்மை இம்சைக்கு உள்ளாக்கும் வலியைக் கொடுக்கக்கூடியவை.
அதற்காக கண்ணை மூடிக்கொண்டு, அரசின் அனைத்து திட்டங்களையும், சட்டங்களையும் ஏற்க வேண்டும் என, சொல்லவில்லை. தீர ஆலோசித்து, தீர்க்கமாக சிந்தித்து, தனி நபர், தனி சமூகம் போன்றவற்றை விட, ஒட்டுமொத்த நாட்டின் நலன், எதிர்கால சந்ததியின் வளம் போன்றவற்றை கருத வேண்டும்.அவற்றிற்கு எதிராக செயல்படும் போர்வையாளர்கள், போராட்டக்காரர்களின் சதி வலையில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான, சாலை திட்டங்களை ஆதரிப்போம். எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்களை, அந்த பகுதி விவசாயிகளே, மூட்டை கட்டத் துவங்கி விட்டனர்; அவர்கள் வழியை நாமும் பின்பற்றுவோம்!
எஸ். வாகை செல்வி
சமூக ஆர்வலர்
இ - மெயில்: vagaiselvi@gmail.com