ரியாத்: சவுதி அரேபியாவில் முதல்முறையாக கார் ஓட்டி சென்ற பெண்ணுக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அனுமதி
சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்நாட்டில் பெண் ஆர்வலர்களும், கார் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். அனுமதி மீறி வாகனம் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பெண்கள் கார் ஓட்ட தடையில்லை என சவுதிஅரசு அறிவித்தது.
மகிழ்ச்சி
இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து முதலாவதாக, டிவி தொகுப்பாளராக பணிபுரியும் சமர் அலமோக்ரென் என்பவர் ரியாத் நகரில் காரை ஓட்டி சென்றார். அவரது நண்பரும் உடன் சென்றார். இதற்காக அவரது உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாலையில், ஒரு சில மீட்டர் தூரத்தில் நின்றிருந்த பொது மக்கள், சமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்; பூங்கொத்து கொடுத்தனர். பெண்கள் கார் ஓட்டுவதற்கு ஆதரவையும் தெரிவித்தனர். சிலர், மகிழ்ச்சியில் சத்தமிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். வழியில் இருந்த போலீசாரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நினைத்து பார்க்கவில்லை
இது தொடர்பாக சமர் கூறுகையில், எனது வாழ்நாளில் இந்த சாலையில் காரை ஓட்டி செல்வேன் என ஒரு போதும் நினைத்தது இல்லை. தற்போது பெருமையாக உள்ளது. நாளை எனது மகனை தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல உள்ளேன். பின்னர் எனது தாய் எங்கு விரும்புகிறாரோ அங்கு அழைத்து செல்வேன் என்றார்.
நீண்ட நாள் போராட்டம்
பெண்கள் காரை தனியாக ஓட்டி செல்ல சவுதி அரசு அனுமதி அளித்திருந்த போதிலும், இதற்காக சில பெண் ஆர்வலர்கள் போராடியுள்ளனர். சிறையும் சென்றுள்ளனர்.
அவர்களில், இமன் அல் நப்ஜன்,39, என்ற பேராசிரியை, என்பவர் பெண்கள் உரிமைக்காகவும், கார் ஓட்ட அனுமதி கேட்டும் சவுதி பெண்கள் என்ற தலைப்பில் தனி இணையதளம் நடத்தி வந்தார். இதில் பெண்கள் உரிமை கருத்து குறித்து கட்டுரைகள் எழுதிவந்தார். கார் ஓட்டுவதற்கான அனுமதி கேட்டு பெண்கள் போராட்டம் குறித்தும், அதற்கு ஆதரவாக இருந்த ஆண்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.
லோஜயின் அல் ஹத்வலுவ்,29 என்ற பெண் அபுதாபியிலிருந்து சவுதி எல்லைக்குள் காரை தனியாக ஓட்டி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்காக 73 நாள் சிறை வாசம் அனுபவித்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,
காரை நான் சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காக செய்ததாக குற்றம்சாட்டினர். இன்னும் சிலர், என்னால், சவுதி அரசு அனுமதி கொடுப்பது தள்ளி போக வாய்ப்புள்ளது. எனது செயல், சவுதி அரசிற்கு விடப்பட்ட நேரிடையான சவால் எனவும் தெரிவித்ததாக கூறினார்.
அஜிஜா அல் யூசெப்,60 என்ற ஓய்வு பெற்ற கணினி பேராசிரியை நடத்திய பிரசாரம், பொது மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவரது தொடர் விழிப்புணர்வு பிரசாரமும், கார் ஓட்ட தடை நீக்கம், பெண்கள் மீதான கட்டுப்பாடு தளர்வு ஆகியவை கொண்டு வரப்பட ஒரு காரணமாக அமைந்தது. சம நீதி, பாதுகாவலர் விதி தளர்வு தொடர்பாக பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பேசியதுடன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நவுப் அப்துலாஜிஜ், 31 என்ற பெண், டுவிட்டரில், பெண்கள் கார் ஓட்ட ஆதரவு கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்திற்காக கைது செய்தார். அவரது போராட்டத்திற்காக ஏராளமானவற்றை இழந்துள்ளார். வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.