காரணமும், கருவும் இல்லாத போராட்டம்!| Dinamalar

காரணமும், கருவும் இல்லாத போராட்டம்!

Added : ஜூன் 27, 2018

தமிழகத்தில் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து, எதிர்க்கட்சியான, தி.மு.க., போராடி வருகிறது.அதில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு என்ற விவகாரம், இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. வருண பகவானும், காவிரித் தண்ணீர் மேட்டூர் வந்து சேர, ஓரளவு உதவுகிறார். அடிப்படையாகவே, காவிரி நதி நீர் குறித்த தெளிவான கண்ணோட்டம், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு கிடையாது. நிதித்துறை கையில் இருப்பதுடன், ஓராண்டு பதவியில் நீடித்தால், அது அவரது வாழ்வில் பெரிய சாதனையாகும்.இப்போது, தமிழக அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்தால், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த உறுப்பினர்களை, அதே எண்ணிக்கையில் கொண்டிருக்கின்றனவா என்பது சந்தேகம். அ.தி.மு.க.,வில் உள்ள இரட்டைத் தலைமையை, அக்கட்சியினர் அப்படியே ஏற்கின்றனரா என்பது யூகமாகும். மக்கள் நம்பிக்கை பெற்ற தலைவராக ஜெயலலிதாவை ஏற்ற பலரும், இன்று கட்சி சந்திக்கும் புதுப்புது விஷயங்கள் கண்டு, அமைதி காக்கலாம்.தி.மு.க.,வில், செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வராகும் காலம் நெருங்கியிருக்கிறது என்ற நிலை, கிட்டத்தட்ட மாறி விட்டது.மேலும், அவர் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுலை, பிரதமர் என்று தமிழகத்தில் முன்னிறுத்தினால், வரும் லோக்சபா தேர்தலில் பலன் தருமா என்பதை, தி.மு.க., நம்புகிறதா என்பதும், வெளிச்சத்திற்கு வரவில்லை. இல்லையெனில், மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர் பாதையை, தேர்தல் நேரத்தில், தி.மு.க., தேர்வு செய்யுமா என்பதை இப்போது அறுதியிட முடியாது. சந்திரபாபு நாயுடு போல ஸ்டாலின் என, துரைமுருகனும் தெரிவித்திருக்கிறார்.பொருளாதார பரிமாற்றங்களில் சிக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும், கோர்ட் வாசல்படி ஏறி இறங்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை, இன்றைய காங்கிரஸ் தலைமை, தேர்தல் சமயத்தில் முழுவதும் ஆதரிக்குமா என்பதும் சந்தேகமே. அதற்குள், முன்னாள் அமைச்சர் ராஜா, அடிக்கடி, '2ஜி' வழக்கு விசாரணைக்கு செல்லும் பட்சத்தில், துரைமுருகன், உதயநிதி உட்பட சிலர், தி.மு.க.,வில் அதிக முக்கியத்துவம் பெறலாம்.அதற்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜாதிய உணர்வைக் காத்த காடு வெட்டி குரு மறைவால், வலுக்குறைந்த, பா.ம.க., இவை, அங்கொன்றும், இங்கொன்றுமாக, எம்.பி., தொகுதிகளில், அவர்கள் சார்ந்த அணிக்கு வலுச் சேர்க்கலாம். தவிரவும், ஏற்கனவே சாதனை புரிந்த, உ.பி., போல இங்கு, பா.ஜ., இன்னமும் அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை.காவிரி மேலாண்மை ஆணையம், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பு, திருப்பூரில் தொழில்பூங்கா அமைக்க மத்திய அரசு ஆதரவு, அதிக அளவு ரயில்வே திட்டங்கள் என்ற அறிவிப்புகள் வந்தாலும், அதனால் அக்கட்சிக்கு என்ன வலு என்பது, இதுவரை புதிராக உள்ளது.இவை ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சுயாட்சி உணர்வை மழுங்கச் செய்ய மாநில கவர்னர் புரோஹித் எதிர்ப்பாக இருப்பதாகவும், நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டசபையில் கூறியிருக்கிறார்.கவர்னருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற தன்னை கைது செய்து, சிறையில் ஏன் அடைக்கவில்லை என்பதும், அவர் எழுப்பும் கேள்வி. பொதுவாக, எதிர்க்கட்சிகளை இழுத்தடிப்பது, ஆளும் கட்சிகளின் தொடர் அரசியல் உத்திகளாகும்.ஆயிரக்கணக்கில் ரவுடிகளைப் பிடிப்பதும், கத்தியுடன் அலையும் மாணவர்களை பிடிப்பதனாலும், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் அரசு ஓரளவு கவனம் காட்டுகிறது. அதைவிட, ஸ்டெர்லைட் விவகாரம், எட்டுவழி பசுமைச்சாலை விஷயத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான அரசு உதவிகள் ஆகியவை, அரசால் தெளிவாக்கப் பட்டிருக்கின்றன.மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை முறைகேடுகளை, மத்திய அரசு ஏற்கனவே ஆராய்ந்து, அவற்றின் மீதான விசாரணைகளும் நடக்கின்றன. ஆகவே, இப்போராட்டங்களை நடத்தும் உந்து சக்திகள் சந்திக்கும் வழக்குகளால், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் அதிகரிப்பது குறையலாம்.தமிழக கவர்னர் புரோஹித், பதவியேற்ற குறுகிய காலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறிவது, அவர் வரம்பிற்குட்பட்ட செயலாகும். முன்னாள் அரசியல்வாதி என்பதுடன், ஊழல் எதிர்ப்பாளரும் கூட.அர்த்தமற்ற செலவினங்களை, தன் மாளிகையில் அனுமதிக்காதவர் என்பதை வெளிப்படுத்தியவரும் கூட. அவர், அரசை வழிநடத்துகிறார் என்பதை, ஆளும் கட்சியில் உள்ள பிரமுகர்கள் எவரும் கூறாத போது, எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக களமிறங்கி போராட வேண்டிய அவசியம்,

இப்போது எதற்கு என்ற கேள்வி எழுகிறது.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X