முகத்துக்கு பரு பாரமா- என்பார்வை| Dinamalar

முகத்துக்கு பரு பாரமா- என்பார்வை

Added : ஜூன் 27, 2018
 முகத்துக்கு பரு பாரமா- என்பார்வை

முகம் 'பளிச்'சென்று இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? அதிலும் 'பரு' போன்ற தொல்லைகள் முகத்தில் முளைத்து விட்டால், மணிக்கொரு முறை கண்ணாடியில் பார்த்துக் கிள்ளியெடுத்து, கண்ட களிம்புகளை வாங்கிப் பூசி, எப்போதுதான் மறைந்து தொலையும் என்று கவலைப்படாதவர்கள் உண்டா? இன்றைய இளம் வயதினர் ஆண், பெண் இருபாலருக்கும் முகத்திலும் மனத்திலும் பெரும் பாரமாக அழுத்தும் ஆரோக்கியப்பிரச்னை முகப்பருவாகத்தான் இருக்கிறது.


பரு என்பது என்ன?நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் ஏராளமாக உள்ளன. இவை ஆன்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் துாண்டுதலால், 'சீபம்' எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இது முடிக்கால்களின் வழியாக தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.மாசடைந்த காற்றில் உள்ள துாசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக் கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கிற சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேர தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு. அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படுகிற வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறுகிற வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணைபோலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள்வெளிவரும்.இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களில் சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும்.இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள்என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைக்கட்டிகளாக மாறிவிடும்.


எப்போது, எதற்கு வருகிறது?பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம்.அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு இது வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கிற பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும்.பருக்களின் மேல் பூசப்படுகிற களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைக்கட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரை ரொம்பவே கவலைப்பட வைப்பது இந்தத் தழும்புகள்தான்.இவற்றை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல், டெர்மாபரேசன், கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. சருமநல மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் தேவைக்குப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.


பருக்கள் வராமல் தடுக்கமுகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பை மாற்றக்கூடாது. சந்தனச் சோப்பு நல்லது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்கவேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும்கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. பருக்களை அடிக்கடி கிள்ளக்கூடாது. முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளை உபயோகிப்பது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.


கொழுப்பு உணவு வேண்டாம்காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்காதீர்கள். கோலா கலந்த குளிர்பானங்களும் ஆகாது. ரொட்டி, கேக், கிரீம் கலந்த பண்டம் எதையும் சாப்பிடாதீர்கள். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். பால் கலந்த காபி அல்லது தேநீருக்குப் பதிலாக கிரீன் டீ அல்லது லெமன் டீ அருந்துங்கள்.சாக்லேட், சிப்ஸ், குக்கீஸ் சாப்பிடாதீர்கள். அரிசி சார்ந்த, அதிக இனிப்புள்ள எந்தப் பண்டமும் பருக்களைத் தோரணம் கட்டி வரவேற்கும். அவற்றைத் தவிருங்கள். இனிப்பும் கொழுப்பும் ஹார்மோன் சுரப்புகளை அதிகப்படுத்தி முகப்பருக்களை வரவேற்கும். ஆகவே, இனிப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை மஞ்சள் கரு, ஐஸ்கிரீம், சாஸ், புட்டிங்க்ஸ், பிரஞ்ச் பிரை, பிஸ்ஸா, பர்கர், தந்துாரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள், மாதுளை ஆகிய பழங்களும், அவரை, பட்டாணி, நிலக்கடலை, முந்திரி போன்ற கொட்டை வகைகளும் பருக்கள் வராமல் தடுப்பதில் முன்னணி வகிக்கின்றன. கடுகு, பூண்டு, மஞ்சள் கிழங்கு கலந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள். இறைச்சிக்குப் பதிலாக மீன் சாப்பிடலாம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம்.- -டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X