அமெரிக்க முடிவால் பொருளாதார சுமை?| Dinamalar

அமெரிக்க முடிவால் பொருளாதார சுமை?

Added : ஜூலை 02, 2018

அடுத்த சில மாதங்களில், இந்திய பொருளாதாரத்திற்கு, கச்சா எண்ணெய் சுமையாக மாறுமா என்ற, கேள்வி எழுந்திருக்கிறது. எண்ணெய் வள நாடுகளின், 'ஒபெக்' அமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியை, சிறிய அளவு அதிகரிக்க முன்வந்திருக்கிறது. கச்சா எண்ணெய் வாங்குவதில், அதிக அக்கறை காட்டி வரும் மத்திய அரசும், அடுத்த, 10 ஆண்டு களில் நம் தேவை கூடும் போது, 'எரிபொருள் பாதுகாப்பை' உருவாக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.எண்ணெய் வளத்தில், முன்னிலையில் உள்ள சவுதியுடன், இப்போது நமக்கு உள்ள நட்பு சிறப்பானது. வெனிசுலா, ரஷ்யா, ஈரான் உட்பட பல நாடுகள், நமக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்கின்றன. பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்தில், மிகச்சிறிய நாடான புருனேயும் ஒன்று. தற்போது, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கு வதை தடை செய்யும், உலகளாவிய நடவடிக்கையை, அமெரிக்கா அமலாக்கம் செய்துள்ளது.இந்த ஆண்டில், ஈரானிடம் இருந்து, 1.84 கோடி டன் கச்சா எண்ணெயை, நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். அதிலும், ஈரான் - இந்தியா ஒப்பந்தத்தில், கச்சா எண்ணெய்க்கு பணப் பட்டுவாடா செய்வதில் உள்ள, எளிய நடைமுறைகள் நமக்கு சாதகமானவை.மற்றொரு அம்சமாக, ஈரான் கச்சா எண்ணெயில் கந்தக தன்மை குறைவு. சவுதி எண்ணெயில் இது அதிகம். இதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நடைமுறையில், ஈரான் எண்ணெய் நமக்கு சாதகமானது.எண்ணெய் தேவை அதிகரிப்பதால், இந்த விஷயத்தில், அமெரிக்கா முடிவு பற்றி நம் வெளியுறவுத் துறை பேச்சு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. மேலும், முன்னர் கிளின்டன் நிர்வாகம், 2012ல், ஈரான் எண்ணெய்க்கு தடை விதித்த போது, அந்த நாட்டில் இருந்து, இறக்குமதி அளவு பாதியாக குறைந்தது.இப்போது, இந்திய - அமெரிக்க உறவு நெருக்கமாக இருப்பதால், இந்த விஷயத்தில், அதிக கட்டுப்பாடு தொடராமல், அதற்கான பேச்சு விரைவில் நடக்கும். அமெரிக்க அரசு, ஈரான் மீது தடைகள் விதித்து அமல்படுத்தும் நாள் நவம்பர், 4ம் தேதி.அத்துடன் அமெரிக்காவின், கச்சா எண்ணெயை நாம் வாங்கும் பட்சத்தில், அங்கிருந்து அதைக் கொண்டு வர ஆகும் செலவினங்கள் பற்றி, எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், கச்சா எண்ணெய் தேவையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில், முன்கூட்டியே ரிசர்வ் என்ற அடிப்படையில், ஓரளவு கையிருப்பு முறையும், விலை அதிகரிப்பு பாதிப்பை சமாளிக்க உதவிடும்.அதனால், நம் பெட்ரோலிய துறை அமைச்சர் பிரதான், 'நாட்டின் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து எடுக்கப்படும் முடிவுகள், மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்' என்றிருக்கிறார்.பெட்ரோல், டீசல் தவிர, சமையல் காஸ், இயற்கை எரிவாயு என்ற பன்முக எரிபொருள் ஆதாரங்களை முறைப்படுத்திய அரசு, கரும்பு ஆலையில் கழிவாக பயன்படுத்தப்படும், 'மொலாசஸ்' மூலம் தயாரிக்கப்படும், 'எத்தனால்' எரிபொருளுக்கு, லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக, மூன்று ரூபாய் தர முன்வந்திருக்கிறது.இதனால், உடனடியாக நம் கச்சா எண்ணெய் தேவை குறைந்து, அன்னிய செலாவணி குறையும் என்பதில்லை.மாறாக, இன்று சர்வதேச அளவில், பொருளாதார முரண்களால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, நம் ரூபாய் மதிப்பை வீழ்த்தியிருக்கிறது. இவற்றை எல்லாம் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் ரேஷன் வரலாம் அல்லது ஒரேயடியாக இவற்றின் விலை உச்சத்திற்கு சென்று விடும் என்ற வாதங்கள் வந்து குழப்பலாம்.அன்னிய செலாவணி கையிருப்பு பாதகமாக இல்லை என்பதும், டாலருக்கு நிகரான மாற்று மதிப்பில், ரூபாய் வீழ்ச்சியால் அதிக பாதிப்பில்லை என்பதும், அரசு தரும் தகவலாகும்.அடுத்ததாக, சுவிஸ் வங்கியில் இந்தியர் சேகரித்த சேமிப்பு அதிகமாகியிருக்கிறது என்ற வாதத்தில், கறுப்புப் பணம் அதிகரித்ததாக வாதம் கிளம்பியாகி விட்டது. சுவிஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே, வங்கி பணப் பரிவர்த்தனை குறித்த தகவல் பரிமாற்ற ஒப்பந்தம், சென்ற ஆண்டில் ஏற்பட்டிருக்கிறது.ஆகவே, அது குறித்த தகவல்கள் வரும்போது சேமிப்பு கணக்கு விவரம் வரலாம். மேலும், காங்கிரஸ் அரசு காலத்தில், அங்கு முறையாக கணக்கு வைத்திருப்போர், ஆண்டு தோறும் ஒரு கணிசமான அளவு பணத்தை அக்கணக்கில் சேர்க்கலாம் என்ற வழிவகை இருக்கிறது. இனி அதையும் ஆராய்ந்து, மக்களுக்கு

அப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டால், அக்குழப்பம் தீர்ந்து விடும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X