ஆன்லைன் லாட்டரியில அடிச்சது யோகம்... ஆபீசர்களுக்கு போயிருச்சு பெரும் பாகம்!| Dinamalar

'ஆன்லைன் லாட்டரி'யில அடிச்சது யோகம்... ஆபீசர்களுக்கு போயிருச்சு பெரும் பாகம்!

Added : ஜூலை 03, 2018
Share
தோழியின் திருமண நிச்சயத்துக்கு, சென்னை செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா; கால் டாக்சியுடன் வந்து சேர்ந்தாள் சித்ரா; இருவரும் ஏறியதும், அசுர வேகத்தில் பறந்தது கார்.''டிரைவர்...டிரெயினுக்கு நிறைய 'டைம்' இருக்கு. மெதுவா போங்க!,'' என்றாள் மித்ரா.''இவர்ட்ட சொன்னா, வேகத்தைக் குறைச்சிருவாரு; ஆனா, பொள்ளாச்சி ரோட்டுலயும்,
'ஆன்லைன் லாட்டரி'யில அடிச்சது யோகம்... ஆபீசர்களுக்கு போயிருச்சு பெரும் பாகம்!

தோழியின் திருமண நிச்சயத்துக்கு, சென்னை செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா; கால் டாக்சியுடன் வந்து சேர்ந்தாள் சித்ரா; இருவரும் ஏறியதும், அசுர வேகத்தில் பறந்தது கார்.''டிரைவர்...டிரெயினுக்கு நிறைய 'டைம்' இருக்கு. மெதுவா போங்க!,'' என்றாள் மித்ரா.''இவர்ட்ட சொன்னா, வேகத்தைக் குறைச்சிருவாரு; ஆனா, பொள்ளாச்சி ரோட்டுலயும், மேட்டுப்பாளையம் ரோட்டுலயும் பிரைவேட் பஸ்களோட வேகத்தைக் குறைக்கிறது யாரு?,'' என்றாள் சித்ரா.''மேட்டுப்பாளையத்துக்கு பாசஞ்சர் டிரெயின் விட்ட பிறகு, மக்கள் கொஞ்சம் நிம்மதியானாங்க...ஆனா, இந்த பொள்ளாச்சி ரோட்டுல, பாசஞ்சர் ரயிலை விடவே மாட்டேங்கிறாங்களே!,'' என்று கேட்டாள் மித்ரா.''எல்லாத்துக்கும் காரணம் பெட்டி தான்...ரயில்வேல கேட்டா, புது ரயில் விட 'பெட்டி இல்லை'ன்னு சொல்றாங்க...ஆனா, சேலம் கோட்ட ரயில்வே ஆபீசர்களுக்கு, பிரைவேட் பஸ்காரங்கள்ட்ட இருந்து, 'பெட்டி பெட்டியா' போறதுதான் காரணம்னு இன்னொரு பக்கம் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அது சரி...மதுரைக்கு, பொள்ளாச்சிக்கு பழைய ரயில்களையாவது விடணும்னு போராட்டக்குழு அமைச்சு போராட்டமெல்லாம் நடத்துனாங்களே...அவுங்களும் ஏன் 'ஆப்' ஆயிட்டாங்க?,'' என்று மீண்டும் கேள்வியைப் போட்டாள் மித்ரா.''அவுங்களுக்கும் பெட்டி போயிருச்சோ என்னவோ...டிரெயின் எப்போ வருமோ...அதுவரைக்கும் இப்பிடித்தான் பஸ்களை ஓட்டுவாங்களா...இந்த ஆர்.டி.ஓ.,க்கள் யாருமே கேக்கவோ, பார்க்கவோ மாட்டாங்களா?,'' என்றாள் சித்ரா.''நம்ம ஊரு ஆர்.டி.ஓ.,க்கள் கேட்டுட்டாலும்...புரோக்கர்களை ஒழிக்கணும்; சிசிடிவி மாட்டணும்னு ஐகோர்ட்டே 'ஸ்ட்ராங்கா' ஆர்டர் போட்ட பிறகும், நம்ம ஊர்ல எந்த ஆர்.டி.ஓ., ஆபீஸ்லயும் எதுவும் மாறலை...கேமராவும் மாட்டலை...புரோக்கர்களையும் துரத்தலை; அவுங்க தான், 'பைல்'களை 'டீல்' பண்றாங்க... 'டீலிங்'கும் பேசுறாங்க,'' என்றாள் மித்ரா.இவர்கள் பேசியதைக் கேட்ட டிரைவர் சிரித்துக் கொண்டே, பண்பலையின் சப்தத்தை கூட்டினார்.'செந்தில் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்...' என்று காருக்குள் பக்தி மணம் பரவியது.''மித்து...மருதமலையில சிறுத்தை நடமாட்டம்னு பீதியைக் கிளப்பி விட்டதா சொன்னியே...நான் விசாரிச்சேன்; நிஜமாவே, அங்க மலைப்பாதைக்குப் பக்கத்துல, சிறுத்தை நடமாடுனதை சிலர் பாத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.''அக்கா...இதுவும் மருதமலை மேட்டர் தான்...அர்ச்சகர்களுக்கு வாரிசு அடிப்படையில வேலை கொடுக்கக்கூடாதுன்னு அறநிலையத்துறை விதிகள்ல இருக்காம்...ஆனா, இங்க அஞ்சாறு வருஷத்துக்குள்ள ரிட்டயர்டு ஆன மூணு அர்ச்சகர்கள், தங்களோட வாரிசைக் கொண்டு வர செம்ம 'டிரை' கொடுத்திருக்காங்க. அதுல முருகனோட பேரைக்கொண்ட ஒரு அர்ச்சகர், தன்னோட தம்பின்னு சொல்லி, ஒருத்தரை வாரிசா கொண்டு வந்து சேர்த்து விட்டுட்டாரு,'' என்றாள் மித்ரா.''பரவாயில்லையே...எது எதுலயோ வாரிசுகள் வர்றப்போ, இதுல வர்றதுல என்ன தப்பு இருக்கு?,'' என்று கேட்டாள் சித்ரா.''இப்போ பிரச்னை அது இல்லை...அதே அர்ச்சகர், 'அது என்னோட சித்தப்பா பையன்; இப்போ, என்னோட ஒரிஜினல் தம்பிக்கு அதே வேலையைக் கொடுங்க'ன்னு கொடி பிடிச்சிருக்காராம்; அங்க 'பேஷா' வேலை பாக்குற ஒருத்தரும், இதுக்காக பேரம் பேசிட்டு இருக்காராம்,'' என்றாள் மித்ரா.கார், சுங்கம் சிக்னலில் நின்றது; பல வாகனங்கள், சிக்னலை மதிக்காமல் போய்க் கொண்டிருந்தன.''இங்க மட்டும் தான், இந்த 'வயலேஷன்' எப்பவும் நடந்துட்டே இருக்கு மித்து...டிராபிக் போலீஸ் என்னதான் பண்றாங்களோ?,'' என்று கொதித்தாள் சித்ரா.''இப்போ இருக்குற டிராபிக் 'டிசி' கொஞ்சம் நல்லாத்தான் பண்றாரு...இந்த இடத்துல, சிக்னல் இல்லாம, வண்டிங்க போறது மாதிரி 'டிசைன்' பண்ணிருக்காரு. அதுக்கு 'நஹாய்'ல அனுமதி கிடைச்சிட்டா, சீக்கிரமே வேலை ஆரம்பிச்சிருவாங்க. ஆனா, அவருக்கு கீழ் மட்ட போலீஸ் ஒத்துழைப்பே இல்லை...நம்ம ஊரோட 'டிசைன்' அப்பிடி!,'' என்று சிரித்தாள் மித்ரா.''மித்து...அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம ஊருல 'டிசி'யா இருந்த ஒருத்தரு, பான் மசாலா கடத்தல் கேசுல மாட்டுனாரே....அவரு இங்க இருந்தப்போ, ரத்தினபுரியில, ஒரு ஆடிட்டர் வீட்டுல, 'ஐ.டி.,'காரங்க ரெய்டு பண்றது மாதிரி ஒரு கும்பல் வந்து, ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ், நகை எல்லாம் எடுத்துட்டுப் போனாங்களே...ஞாபகமிருக்கா?,'' என்று கேட்டாள் சித்ரா.''ஓ...ரெண்டுமே நல்லா ஞாபகமிருக்கே...அந்த ஆபீசர்...சுமார் மூஞ்சி குமாரு தான!,'' என்றாள் மித்ரா.''அவரே தான்...அந்த ஆபீசர் எப்பிடியோ மோப்பம் பிடிச்சு, இந்த கும்பலைப் பிடிச்சு விசாரிச்சிருக்காரு. அப்போ...அவுங்க காரை பறிமுதல் பண்ணாம இருக்கிறதுக்காக, அவுங்க கொள்ளை அடிச்ச, 40 பவுன் நகைய கேட்ருக்காரு. அவுங்க அதை வித்து, இவரோட டிரைவர்ட்ட கொடுத்திருக்காங்க. அதைத்தான் இப்போ வேற கேசுல மாட்டுன 'அக்யூஸ்ட்' சொல்லிருக்கான்,'' என்றாள் சித்ரா.''வாங்கிட்டு வந்த டிரைவர் யாருன்னு கண்டு பிடிச்சிட்டாங்களா?,'' என்று குறுக்கு விசாரணை செய்தாள் மித்ரா.''ஆமா...அப்போ 'டிசி'கிட்ட மூணு பேரு, டிரைவரா இருந்திருக்காங்க...அவுங்க மூணு பேரையும் 'அக்யூஸ்ட்' முன்னால நிறுத்துனதும், பணம் வாங்கிட்டுப் போன ஆளை காமிச்சிட்டான்,'' என்றாள் சித்ரா.''லேட்டஸ்ட்டா ஒண்ணு சொல்லவா...போன வாரம் சனிக்கிழமை, சுந்தராபுரத்துல 'ஆன்லைன் லாட்டரி' பிஸினஸ் பண்ணிட்டு இருந்த மூணு பேரை போத்தனுார் போலீஸ் துாக்கிருக்காங்க. கொஞ்ச நேரத்துல, அந்த 'அக்யூஸ்ட்'களை, சில வக்கீல்கள் பாத்துப் பேசிருக்காங்க. அப்போ, அந்த 'அக்யூஸ்ட்'கள் மூணு பேரும், 'நாங்க எண்ணி வச்சிருந்த 47 லட்ச ரூபாயையும், எண்ணாம இருந்த மூணு லட்ச ரூபாயையும் போலீஸ் பறிச்சிட்டாங்க'ன்னு சொல்லிருக்காங்க,'' என்று மித்ரா.''அடேங்கப்பா...தலை சுத்துது!,'' என்று 'ஆக்ஷன்' காட்டினாள் சித்ரா.''முழுசாக்கேளு...மயக்கமே போட்ருவ...அன்னிக்கு எப்.ஐ.ஆர்.,போட்டதும், வக்கீல்கள் வாங்கிப் பார்த்தப்போ, அதுல '22 லட்ச ரூபா பறிமுதல் செஞ்சதா' போட்ருந்துச்சாம்; அதனால, மீதி 28 லட்சத்தை, போலீஸ்காரங்க பங்கு போட்டுக்கிட்டாங்களாம்...ஆபீசர்களுக்கு பெரிய பாகம் போயிட்டதா வக்கீல்க பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''மித்து...நம்ம யுனிவர்சிட்டியில, 'ஆன்சர்' பேப்பரை வித்ததுல, எட்டு லட்ச ரூபா ஊழல் நடந்துச்சே...அது சம்மந்தமா, அப்போ இருந்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மேடத்துக்கு, அவுங்க ரிட்டயர்டு ஆகுறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னால, சார்ஜ் மெமோ கொடுத்தாங்களே...அவர் மேல சுமத்துன குற்றச்சாட்டுக்கு, இன்னிக்கு வரைக்கும் ஒரு ஆதாரமும் கொடுக்க முடியலையாம்,'' என்றாள் சித்ரா.''அதைப் பத்தி விசாரிக்கத்தான் மூணு கமிட்டி அமைச்சு, ஆய்வு அறிக்கையும் கொடுத்தாங்களே...அதெல்லாம் என்னாச்சு?,'' என்று கேட்டாள் மித்ரா.''அதை வாங்குனவரு, ஒரு 'பிட்' பேப்பர் இல்லாம, எல்லாத்தையும் சுருட்டி எடுத்துட்டுப் போயிட்டாராம்...ஜேம்ஸ்பாண்ட் வந்தாலும் ஆதாரத்தை எடுக்க முடியாதாம். கன்வீனர் குழு என்ன செய்யப் போகுதோ?,'' என்றாள் சித்ரா.''அது தெரியலை...நம்ம மாவட்டத்துல புதுசா துவக்கிருக்குற கல்வி மாவட்ட ஆபீஸ்களுக்கு பர்னிச்சர் வாங்குறதுக்கு, ஒவ்வொரு 'பிரைவேட் ஸ்கூல்'யும் 'ஸ்பான்சர்' கேட்டுட்டு இருக்காங்களாம்; ஆனா, யாரையும் கட்டாயப்படுத்துறதில்லையாம்,'' என்றாள் மித்ரா.''இதே மாதிரி, யாராவது ஒரு புரமோட்டரைப் பிடிச்சு, சர்வே ஏ.டி., ஆபீஸ்ல இருக்குற 'ப்ளூ பிரிண்ட் மெஷினை' ரிப்பேர் பண்ணுனா நல்லாருக்கும். லட்சம் லட்சமா லஞ்சம் வாங்குற அந்த ஆபீஸ்ல, அதை ரிப்பேர் பண்ண 'அலாட்மென்ட்' இல்லைன்னு சொல்லி, வரைபடம் கேட்டு வர்ற ஏழை மக்களை வாட்டி வதைக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அக்கா...ஆளுங்கட்சியோட செல்லப்பிள்ளையான சவுத் ஏ.சி.,ரவி, போன மாசம் 30ம் தேதி 'ரிட்டயர்டு' ஆகுறாரு; அவரோட இடத்துக்கு போட்டின்னு சொன்னியே...அவருக்கு ஒரு வருஷம் 'எக்ஸ்டென்ஷன்' கொடுத்து, ஜி.ஓ.,போட்டாங்க. இதுவரைக்கும் இப்பிடி யாருக்கும், ஜி.ஓ., போட்டதா சரித்திரமே இல்லியாம்,'' என்று மித்ரா சொல்லவும், ரயில்வே ஸ்டேஷனுக்குள் வண்டி நுழையவும் சரியாக இருந்தது; பணத்தைக் கொடுத்து விட்டு, இருவரும் உள்ளே ஓடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X