வளர்ச்சிக்கான வழி மேலும் தாமதமாகும்!| Dinamalar

வளர்ச்சிக்கான வழி மேலும் தாமதமாகும்!

Added : ஜூலை 03, 2018

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள், மேலும் ஆறு மாதங்களுக்கு நடைபெறாது. தனி அதிகாரிகள் பதவிக்கால நீட்டிப்பு மசோதா, சபையில் நிறைவேறியிருக்கிறது. இத்தேர்தல் இரு ஆண்டுகளாக தொங்கலில் போனதற்கு, அடுத்தடுத்த வழக்குகள் ஒரு காரணமாகும்.முதலில் தேர்தலுக்கு முன் உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு அமலாக்கம் கோரி, தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. அடுத்தடுத்து பல காரணங் கள், இடர்கள் ஆகியவை உள்ளாட்சி அமைப்பு களில், தொடர்ந்து இரு ஆண்டுகளாக தனி அதிகாரிகள் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது.சென்னை, மதுரை உட்பட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் ஆகியவற்றில், மாநிலத்தின் மொத்தம் உள்ள, எட்டு கோடி மக்களில், 75 சதவீதத்திற்கும் அதிக மக்கள் வசிக்கின்றனர்.தமிழக அரசு தரப்பில் வார்டு மறுவரையறை, 2011ம் ஆண்டு அடிப்படையில் செய்யப்படுவதாகவும், அதற்கான பணிகள் நடப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.உள்ளாட்சி அமைப்புகளில் மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, ஓரளவு மக்கள் நிறைந்த பகுதிகளில் மருத்துவ வசதி ஆகியவை குறித்த ஒட்டுமொத்த பார்வை தேவை. இன்றைய நிலையில், ரவுடிகளை கண்டறிந்து கைது செய்வது, மின்தேவை பூர்த்தியில் முக்கியத்துவம், எங்கு பார்த்தாலும் ஊழல் புகார்கள் ெவளிச்சத்திற்கு வரும் போக்கு ஆகியவை அதிகரித்திருக்கின்றன.வார்டு வரையறை என்பதற்கான, தற்போதைய நடைமுறைகள் அமலாக்கம், சுலபமானது அல்ல. அதே போல ஊராட்சித் தலைவர் பதவியை, முக்கியத்துவம் வாய்ந்த தமிழகக் கட்சிகள் எளிதில் கைப்பற்றுமா என்பதற்கான அறிகுறிகள், பல இடங்களில் காணோம்.மிகச் சிறிய கட்சிகள் குறிப்பிட்ட வார்டுகளில், தங்களது செல்வாக்கை பிரயோகிக்கும் காலம் மாறி வருகிறது. சென்னை போன்ற நகரங்களில், வட மாநிலத்தவர் அதிகம் பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தொழிலாளர்களாக வாழ்கின்றனர்.சிறிய ஊராட்சிகளில் கூட, 'ஆதிகுடிகள்' என்று தங்களைப் பெருமையாக பேசிக்கொள்ளும் ஜாதி வட்டம் மாறி விட்டது. அதிக வீடுகள் உருவாகியிருப்பதும் நிதர்சனமாகும். ஓரளவு, 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நகரங்களில் வீடுகள் பட்டா மாறுதல், வீட்டுவரி வசூல் அல்லது தண்ணீர் வசதி போன்றவற்றை தனி அதிகாரி கண்காணித்து, முடிவு எடுப்பது காலதாமதமாகும். சில பொறுப்புகள் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உள்ளன.ஆனால், இப்போதுள்ள தகவல் அறியும் விழிப்புணர்வு அதிகரித்ததால், அவர்கள் லஞ்சம் பெறும் அளவை குறைக்கலாம். அதுவே பெரிய பதவிகளுக்காக போட்டியிடுவது பற்றி, கட்சிகளில் பலர் யோசிக்கலாம்.ஏற்கனவே சட்டசபை தேர்தலில் ஓட்டளித்த மக்களில், 10 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களில் இடம் மாறியிருக்கலாம். ரேஷன் பொருட்கள் வாங்க அட்டையில் மாற்றம் செய்யும் முன்னுரிமை அல்லது வங்கிக் கணக்கு வசதிக்காக, 'ஆதார்' அட்டையில் முகவரி மாற்றம் செய்வது, தனிநபர் செயலாக ஆர்வமாக நடக்கிறது. அந்த அளவிற்கு, ஊராட்சி அமைப்புகளில் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்துவது என்பதை, மாநில தேர்தல் அமைப்பு எப்போது செய்யப் போகிறது? அதற்கான சிறப்பு வழி என்ன?ஏனெனில், இரு ஆண்டுகளில் ெவள்ளம் அல்லது வறட்சி பாதிப்பு, விவசாயிகள் பாதிப்புக்கு உரிய உதவிகள் ஆகியவற்றிற்கும், சில இடங்களில் குடிநீர் வசதி அல்லது சாலை மேம்பாடுக்கு, அரசு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்திருக்கிறது. இது மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் மூலம் நடந்திருக்கிறது.தவிரவும், இனி வரும் காலத்தில் மத்திய அரசு வழங்கும் சில குறிப்பிட்ட உதவிகள், அந்தந்த ஊராட்சி அமைப்புகளின் தொடர்புடன் செலவழிக்க நிதிக்கமிஷன் ஏற்பாடு செய்திருக்கிறது. அரசுக்கு கிடைக்கும் வரிவருவாயில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தும் போது, அது நிர்வாக அமைப்பின் வாயிலாக செயல்படுத்தும் காலம் இதனால் தொடரும். இது நடப்பாண்டு இறுதி வரை தொடரும் என்கிற போது, மாநில அரசு செலவழிக்கும் நிதி அனைத்தும், மாவட்ட ஆட்சியர், அவரின் கீழ் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகளின் பொறுப்புகளை அதிகரிக்கும்.

இதில், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில், ஆதரவு ஓட்டளிக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கலாம். விளைவு, உள்ளாட்சி அமைப்புகள் சீரான வளர்ச்சி என்பது முடங்கி, ஒருபக்கம் வளர்ச்சி, மறுபக்கம் பின்தங்கிய நிலை என்ற காட்சிகள் தொடரும். அதைப்பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X