சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : ஜூலை 04, 2018
Advertisement
சொல்கிறார்கள்


மாதம், ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் ஓசூர் நகராட்சி!


இயற்கை உரம் தயாரிப்பதுடன், 16 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து காய்கறி, பழங்களை பொதுமக்களிடமே விற்பனை செய்து அசத்தி வரும், ஓசூர் நகராட்சி ஆணையர், செந்தில் முருகன்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரின் குப்பை கழிவுகள் முழுக்க, தாசியப்பள்ளி என்ற இடத்தில் தான், 40 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. மலை போல், வீணாகக் குவிந்து கிடக்கும் இந்த குப்பையை உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்கும், 'ஐடியா'வை, ஓசூர் நகராட்சி நிர்வாக ஆணையர், பிரகாஷ், ஐ.ஏ.எஸ்., கூறினார்.

அவரது வழிகாட்டுதலின்படி, கடந்த ஆண்டு, ஓசூரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கும் மற்றும் மக்காத குப்பை என, குப்பைகழிவுகளை பிரித்து கொடுக்கும்படி கேட்டோம்; புதிய முயற்சியாக இருந்ததால், மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இவ்வாறு பெறப்படும் குப்பையை பிரிப்பதற்கும், உரம் தயாரிப்பதற்கும், ஓசூர் நகராட்சியிலேயே, நுண் உர மையத்தை ஆரம்பித்தோம். தினமும் குப்பையை ஏற்றி வந்து, பிரிக்க ஆரம்பித்து விடுவர். அதில், மக்கும் குப்பையை மட்டும், 45 நாட்கள் உரமாகும் வரை மூடி வைத்து விடுவோம். மக்காத குப்பையான, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி முறை செய்து, விற்று விடுகிறோம்.

இத்திட்டம் வெற்றி பெற்றதால், இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பித்து விட்டோம். தமிழகத்திலேயே விவசாயம் செய்யும் முதல் நகராட்சி, ஓசூர்நகராட்சி தான்.நகராட்சிக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தை வீணாக்காமல், கேரட், தக்காளி, கத்திரி, அனைத்து விதமான கீரை வகைகள், பப்பாளி, பூசணி போன்றவற்றை விளைவித்துள்ளோம். மேலும், 57 வகையான நாட்டு மரக்கன்றுகளையும் வளர்க்கிறோம். டைட்டன் நிறுவனம், ஒன்பது லட்ச ரூபாய் செலவில், 8 ஏக்கரில், ஓசூர் நகராட்சிக்கு ஜம்பு நாவல், மா, கொய்யா, 'ஸ்பான்சர்' செய்துள்ளது.

அதோடு, இந்த, 16 ஏக்கரிலேயே, 200 கோழிகள், 20 பசு மாடுகள், குஜராத்தின் நான்கு கிர் மாடுகள், முயல், வாத்து, வான்கோழி, மத்திய பிரதேசத்தின் கருங்கால் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் காய்கறி, பழம் மற்றும் கீரைகளை, மக்களே பறித்து, எடை போட்டு, பணம் கொடுத்து செல்லும்படி வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி குப்பை வாயிலாக, இயற்கை உரம் தயாரிப்பு, காய்கறி, பழம், கால்நடைகள் விற்பனை மூலம், ஓசூர் நகராட்சிக்கு மாதம், மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்தத் தொகையை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக, நகராட்சியின் வளர்ச்சிக்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களிடமும், விவசாயிகளிடமும் இயற்கை உரம் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; இதுவே, இத்திட்டத்தின் நோக்கம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X