வாழ்தல் இனிது| Dinamalar

வாழ்தல் இனிது

Added : ஜூலை 05, 2018
Advertisement
 வாழ்தல் இனிது

வாழ்க்கை ஓர் அழகிய பயணம். எப்போது தெரியுமா? நம் வாழ்நாள் எது வரை என்று நாம் அறியாத வரை. அடுத்த நொடி நிரந்தரமில்லை என்பதை அறிந்து கொண்ட போதிலும், ஆசைகளை விட்டு விடத் தயாரில்லை எல்லோரும். சுய நலமும், போட்டி,பொறாமைகளும், வஞ்சனைகளுமாகவே பொழுதுகள் கழிகின்றன.முக நுாலில் முகம் தெரியாத நபருக்கு இரக்கம் காட்டும் மனசு, கண்ணெதிரே சக மனிதன் சங்கடப் படுவதைக் கண்டு கொள்வதே இல்லை. முன்பெல்லாம் கர்ப்பிணி பெண்கள், முதியவர்களைக் கண்டால் பேருந்தில் இடம் கொடுக்கும் அக்கறை இப்போது இல்லை. ஏன் தெரியுமா? எழுந்து நின்றால் 'சாட்' செய்ய முடியாது என்பதாலே..லெட்டர்கள் மறந்து டுவிட்டர்கள் காலமாகி விட்டது.வாழ்தல் இனிதாவது எப்போது தெரியுமா? எந்த வித நிபந்தனையும் இன்றி பிறரை நேசிக்கும் போது தான்.
அன்பு சூழ் உலகு : வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கேட்டுச் சென்ற வள்ளுவர், பகைவனுக்கும் அருள் செய்யச் சொன்ன பாரதி, மறு கன்னத்தையும் அறைவதற்கு காட்டச் சொன்ன இயேசு கிறிஸ்து, அன்பு நெறி போதித்த புத்தர்... இப்படி மகான்கள் அனைவரும் இந்த மண்ணில்அன்பை விதைத்து விட்டு தான் சென்றுள்ளார்கள்.அந்த விதைகள் பல பட்டுப் போனதோடல்லாமல் செல்லரித்தும் போய் விட்டது தான் வருத்தத்திற்குரிய விஷயம். கடுகு போல உள்ளம் சிறுத்துப்போய் விட்டது. யார்அழுதால் என்ன? சிரித்தால் என்ன? மற்றவர்களுக்கு நடப்பதெல்லாம் வேடிக்கை தான்; தனக்கு எதுவும் நிகழாத வரை. அன்பு என்ற வார்த்தையே அன்னியப் பட்டு போனது. ரெஸ்டாரென்ட் ஒன்றில் டீ குடிப்பதற்கு போன நான் சற்று உட்காரலாம் என்று உட்கார எத்தனித்த போது எதிர் சீட்டில் இருந்த 7வயது குழந்தை, எழுந்திருங்க,எங்க அம்மா,அப்பாவுக்கு இடம் போட்டுருக்கேன் என்ற போது அதிர்ந்து போனேன்.
வளரும் நாளைய தலைமுறை : சமுதாயம் அன்பென்னும் பொதுவெளியை உணர்வதில்லையே?இந்த அன்பு பற்றாக் குறைக்கான காரணம் என்ன?பாசம் என்னும் ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு குடும்பங்கள் தருவதில்லையா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிகள் எல்லாம் பழைய மொழிகளாகி விடுமா ? அன்பை ஏன் வட்டம் என்பதற்குள் அடைக்கிறோம். இந்த அன்பு கூட வட்டத்திற்குள் சுருங்கிப் போனதே.
வாழ்தல் வரம் : வாழ்தலை வரமாக மாற்றப் போவது எப்போது? தனக்கான தேவைகளை மீறியும் பதுக்கிக் கொண்டு திரிகிற வாழ்வு முறையால் நம் வாழ்வு முடிந்து விடுகிறதா? அன்பையும், மனிதத்தையும் சக மனிதனுக்கு தருவதாலே வாழ்வு அழகாகிறது. சாதனைகள் படைத்த மனிதர்களை இந்த உலகம் அந்த கணத்தில் மட்டுமே நினைவில் கொள்கிறது.பிறருக்காக வாழும் மனிதர்களையே ஆண்டுகள் கடந்தும் வரலாற்றில் கல்வெட்டுகளாய் நிலை நிறுத்திக் கொள்கிறது.அந்த அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தயக்கம். அப்பாவின் அன்பு கூட அப்படியான வகையறாவே. அன்பை பிள்ளைகளிடம் வெளிப்படுத்துங்கள்.இருக்கும் குறைவான சாப்பாட்டையும் பகிர்ந்து கொண்டு சாப்பிட்ட குழந்தைகள் இடத்தில் இருந்த அன்பு ,ஒற்றைக் குழந்தை மட்டுமே இருக்கும் குடும்பங்களில்இருப்பதற்கு சாத்தியமற்றே போனது. வன்முறையான விளையாட்டுகளை அலைபேசியில் பார்க்கும் குழந்தைகள், சக குழந்தையை அடித்தால் வலிக்கும் என்பதை உணர மறுக்கிறது. உடல் வலியையே உணர மறுக்கும் தலை முறையால், மற்றவரின் மன வலியை எப்படி உணர முடியும்? முதியோர் இல்லங்கள் பெருகியதன் காரணம் கூட சுய நலப் போக்கின் அடிப்படை தான். நாம் நம் பிள்ளைகளுக்கு பாதி அன்பு தருகிறோம். அப்படியானால் அவர்கள் வளர்ந்த பிறகு மீதி தானே திருப்பி தருவார்கள். உறவுகளைப் பேண கற்றுத் தருவதில்லை. அதனாலேயே அவர்களும் வளர்ந்த பிறகு பெற்றோர் என்னும் உறவைப் பேணுவதில்லை. ஆறு வயதில் பள்ளி சென்ற குழந்தைகளை, பால் குடிக்கும் வயதில் தள்ளி விடுகிறோம். தாத்தா, பாட்டி வளர்ப்பு இல்லாத குழந்தைகள் பணிப் பெண்களால் வளர்க்கப்படும் சூழலுக்கு உட்படுத்தப் படுகின்றன. இத்தகைய கலாசாரங்களில் வளரும் தலைமுறையிடம் எதை விதைக்கிறோமோ அதைத் தானே அறுவடை செய்ய முடியும்?
தடுமாற்றங்கள் /: படிப்பும், பணமும் ஒரு கவுரவத்தைக் கொடுத்து விடுவதாகக் கூட எண்ணிக் கொள்வதாலே இந்த அன்பு காட்டுதலில் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் அன்பினை கிள்ளிக் கொடுக்கும் பலருக்கு அள்ளிக்கொடுக்கும் அன்பு தேவைப்படுகிறது. முன்பெல்லாம் பயணங்களின் போது பக்கத்தில் இருப்பவர் தான் சாப்பிடுவதை 'எடுத்துக்கோங்களேன்' என்பதை இப்போது கேட்க முடிவதில்லை. காரணம் அன்பு என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகள், அன்பு என்ற பெயரில் நிகழும் வன்முறைகள். எது உண்மையான அன்பு, எது போலி என்று அடையாளம் காண முடிவதில்லை.தன் மீது அன்பு காட்டாத பெண் மீது நடக்கும் தீவிரவாதங்கள். அதீத அன்பால் நடத்தப்படும் நம்பிக்கை மோசடிகள்,நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.கடவுள் கொடுத்த கைகள் எதற்கு என நினைக்கிறீர்கள்? பிறருக்கு கொடுப்பதற்குத் தான். 'கை கொடுத்து உதவுங்களேன்' என்ற அறிவிப்பில் கையின் பயன்பாடு புரியும். 'உடுக்கை இழந்தவன் கை போல' என்பதை வள்ளுவம் உணர்த்துகிறது.கண்களோ பிறரின் கவலை கண்டு கண்ணீர் சிந்து வதற்காகத் தான். இனி மேலும் இம் மண்ணில் பிறக்கப் போவதில்லை. இருக்கும் வாழ்க்கையை அழகாக வாழலாம்.வாழ்க்கை என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இருக்கும் வரை அன்பாக இருப்போம்.
உணர்வுக்கு மதிப்பளிப்போம் : நேசிப்பது யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்களின் உணர்வுகளுக்காவது மதிப்பளிப்போம். உலகத்தையே ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த மாவீரன் அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு சற்றுமுன் என்ன சொன்னாராம் தெரியுமா ?'கல்லறைக்கு எடுத்து செல்லும் போது என்னை சவப்பெட்டியில் வைத்து, என் கைகளை வெளியே தொங்க விட்டு உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து அனைவரும் பார்க்கும்படியாக வையுங்கள் என்றாராம்.'
காரணம் கேட்டபோது ...எண்ணிலடங்கா உயிர்களை கொன்று பொன் பொருளென்று சம்பாதித்து, உலக நாடுகளையே ஒரு குடைக்குள் கொண்டுவந்தேன். 32 வயதில் மரணம் எய்த போகிறேன். இவ்வளவு சம்பாதித்தும் நான் எதையும் கொண்டு செல்லவில்லை. மக்களின் வெறுப்பை மட்டுமே கொண்டு செல்கிறேன்.'அன்பை தவிர எதை சம்பாதித்தாலும் அது நம்மோடு வருவதில்லை என்ற தத்துவத்தை இந்த உலகம் அறியட்டும்' இந்த தத்துவத்தை எனது கல்லறையில் எழுதுங்கள் என்றாராம்...
வாழ்ந்து காட்டுவோம் : முடி ஆளும் மன்னரும் பிடி சாம்பல் தான் இறுதியில் என்ற யதார்த்தத்தை உணர்வோம்.அன்பால் உள்ளங்களையும்,இல்லங்களையும் சிறக்கச் செய்வோம். அன்பை பற்றிப் பேசிக் கொண்டே இருக்காமல் வாழ்ந்து காட்டுங்கள்.பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறோமோ அதை நம்மிலிருந்து தொடங்குவோம்.பல வருடங்களாய் ஏதோ ஒரு அற்ப காரணத்திற்காக உங்கள் சகோதர,சகோதரிகளிடம் பேசாமல் இருந்து இருக்கலாம். சின்ன ஈகோவால் பிரிந்து போன உறவுகள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் சரி செய்வதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது.அது அன்பு என்ற மருந்து தான். அது எல்லாவற்றையும் குணமாக்கி விடும்.பேசுவதற்கு தயக்கம் எனில் கடிதங்கள் எழுதுங்கள். ஒரே ஒரு மெல்லிய கோடு தான் பிரிவினைக்கு காரணமாக இருக்கும். அந்த பிரிவினைச் சுவரை அன்பால் தகர்த்து விடுங்கள்.'அன்பென்றுகொட்டு முரசே- மக்கள் அத்தனை பேரும் நிகராம்..'பாரதியின் இந்த அன்பு மொழிகளை நிராகரித்து விடாதீர்கள். கொண்டு செல்ல எதுவும் இல்லை. விட்டுச் செல்வதற்கு இருக்கிறது அன்பு. அன்பால் இணைவோம்.
ம.ஜெயமேரிஆசிரியை, ஊ.ஒ.தொ.பள்ளி க.மடத்துப் பட்டி

bharathisanthiya10@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X