புதுடில்லி: கைலாஷ் யாத்திரை சென்று நாடு திரும்புகையில், மோசமான வானிலையால், நேபாள நாட்டில் சிக்கிய, இந்தியர்கள், 160 பேர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
@Image@
இவர்களுடன் சேர்த்து, யாத்திரை சென்ற இந்தியர்கள், 1,430 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மோசமான வானிலையிலும், கடும் சவால்களை சந்தித்து மீட்பு பணியில் வெற்றி பெற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு, மீட்கப்பட்டோரின் உறவினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.அண்டை நாடான சீனாவின், திபெத்தில் அமைந்துள்ள கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி, ஹிந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் சமணர்களுக்கு மிகவும் புனிதத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கைலாஷ் - மானசரோவர் யாத்திரை செல்வது வழக்கம். இமயமலைத் தொடரில், மேடு, பள்ளங்களை கடந்து, குளிர் நிறைந்த பகுதிகளில் பயணிக்க வேண்டும் என்பதால், இந்த யாத்திரை மிகவும் சவாலானது. இந்த ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த, நுாற்றுக் கணக்கான பக்தர்கள் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்கள், 1,430 பேர் கைலாஷ் யாத்திரை மேற்கொண்டனர். கைலாய மலையில் தரிசனம் முடித்து, நாடு திரும்பும் வழியில், நேபாள நாட்டில் பெய்த கனமழையால், பக்தர்கள் ஆங்காங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமங்களில் தங்கியிருந்த பக்தர்களுக்கு, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர் கனமழையால், குளிர் அதிகரித்தது. இதை தாங்க முடியாமல், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உட்பட, அந்த குழுவில் இடம் பெற்றிருந்தோரில் சிலர் உயிரிழந்தனர். யாத்ரீகர்கள் குழுவில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பதால், மிகக்குறுகிய இடத்தில், ஏராளமானோர் தங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நேபாளத்தின், சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் தங்கியிருந்தோர் பற்றிய தகவல்கள், ஊடகங்கள் மூலம் தெரிய வந்தன. தவிர, பாதிக்கப்பட்டோர், தங்களை மீட்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சரக்கு விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டனர்.
கடும் குளிர், மழையிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்து மீட்கப்பட்ட அவர்கள், நேபாளத்தின், நேபாள்கஞ்ச், சூர்கேட் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து, டில்லி, லக்னோ உள்ளிட்ட ஊர்களுக்கு, விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஐந்து முதல் ஆறு நாட்களாக, உணவு, மருத்துவ வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்த இந்தியர்கள், 160 பேர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி நிறைவடைந்ததாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மீட்பு பணியில், நம் ராணுவ வீரர்களுடன், நேபாள நாட்டு வீரர்களும் இணைந்து செயல்பட்டனர். ராணுவத்திற்கு சொந்த மான சரக்கு விமானங்கள் மூலம், அங்கிருந்தோர்மீட்கப்பட்டனர்.
விமானம் தரையிறக்கம் செய்யப்பட முடியாத இடங்களில், ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி, மீட்புப் பணிகள் நடைபெற்றன. கடும் குளிர், மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், பெரும் சவால்களை எதிர்கொண்டு, நேபாளத்தில் சிக்கியோரை மீட்ட, ராணுவ வீரர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, மீட்பு பணிகளை விரைவுபடுத்திய, மத்திய அரசுக்கு, மீட்கப்பட்ட இந்தியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.